கான்டலீஸா ரைஸ் இன்று இந்தியா வருகை - ஒப்பந்தம் கையெழுத்து?
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றம், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கொடுத்து விட்டதன் பின்னணியில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீஸா ரைஸ் இன்று டெல்லி வருகிறார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு நேற்று அமெரிக்க நாடாளுமன்றம் இறுதி ஒப்புதலைக் கொடுத்து விட்டது. 2 நாட்களுக்கு முன்பு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது. நேற்று செனட் சபை ஒப்புதல் அளித்தது.
இந்தப் பின்னணியில், அமெரிக்க வெளியுறழு அமைச்சர் ரைஸ், இன்று இந்தியா வருகிறார். டெல்லி வரும் அவர், அணு சக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்துகிறார். பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களையும் அவர் சந்திக்கிறார்.
அணு சக்தி ஒப்பந்தம் தவிர்த்து வர்த்தகம், தீவிரவாத எதிர்ப்பு, மனித உரிமைகள், மத சுதந்திரம், கல்வி உள்ளிட்ட பல்துறை பிரச்சினைகள் குறித்தும் இந்தியத் தலைவர்களுடன் ரைஸ் பேச்சு நடத்தவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.
ரைஸின் இந்த பயணத்தின்போதே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.