கிளிநொச்சியில் போர் உக்கிரம்: தமிழர்கள் பரிதவிப்பு - ஓட்டம்
கிளிநொச்சி: கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம், விமானப்படையுடன் இணைந்து உக்கிரமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் உயிர் தப்பி தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோர் பெரும் தவிப்புக்குள்ளாகி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியை இலங்கை ராணுவம் சூழ்ந்துள்ளது. விமானப்படை சரமாரியாக குண்டு மழை பொழிந்து இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ராணுவமும், விமானப்படையும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
கிளிநொச்சி நகருக்குள் முதியவர்கள், குழந்தைகள், மன நலம் குன்றியவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பத்து இல்லங்கள் அவசரமாக காலி செய்யப்பட்டு அவர்கள் வன்னி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இதில் அக்கரையான்குளம் பகுதியில் மனநலம் மற்றும் உடல் ஊனமுற்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிளிநொச்சி நகரிலிருந்து தொலைவில் உள்ள கல்மடு, தரம்புரம் ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகளற்ற இடங்களுக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.