நாச்சிகுடா: புலிகளின் நிலைகள் மீது சரமாரி குண்டு வீச்சு-25 பேர் பலி
கொழும்பு: கிளிநொச்சியின், நாச்சிகுடா பகுதியில், விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளில் இலங்கை விமானப்படையினர் சரமாரியாக குண்டு வீசித் தாக்கினர். இதில் 25 விடுதலைப் புலிகள், 2 அப்பாவித் தமிழர்கள், 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியைப் பிடிக்க இலங்கை ராணுவமும், விமானப்படையும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் நாச்சிகுடா பகுதியில் உள்ள புலிகளின் முக்கிய நிலைகளைக் குறி வைத்து விமானப்படை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசித் தாக்கின.
இந்தத் தாக்குதலில் 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் தரப்பில் 2 பேரும், ராணுவத் தரப்பில் 3 பேரும் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், விமான தாக்குதல் வெற்றி பெற்றது. புலிகளின் முக்கிய ஏவுதளங்களை சேதப்படுத்தி விட்டோம் என்றார்.
அதேபோல அக்கரையான் குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுடன், ராணுவம் கடும் மோதலில் ஈடுபட்டது.
மேற்கு அக்கரையாகன்குளத்தில் உள்ள புலிகளின் இரண்டு பதுங்கு குழிகளை ராணுவம் சேதப்படுத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கிளிநொச்சியைச் சுற்றிலும் பல இடங்களில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.