கருணாவுக்கு எம்.பி. பதவி: எதிர்த்து ஜேவிபி வழக்கு

ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியைச் சேர்ந்த நியமன எம்.பி. வசந்த சமரசிங்கே சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்தில் தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சியின் சார்பில் கருணாவை அதிபர் ராஜபக்சே நியமித்துள்ளார்.
இதற்கு ஜேவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் அது வழக்கும் தொடர்ந்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், கருணாவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் தேர்தல் ஆணையரின் உத்தரவை, செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
வசந்த சமரசிங்கே சார்ந்துள்ள எங்களது கட்சி ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் காலியானால் அதை எங்களது கட்சியைச் சேர்ந்த இன்னொருவருக்குத்தான் தந்திருக்க வேண்டும். எனவே கருணாவின் நியமனம் சட்டப்படி செல்லாது என்று அவர் கூறியுள்ளார்.
பதவியேற்றார் கருணா...
இந்த நிலையில் நியமன எம்.பியாக அறிவிக்கப்பட்ட கருணா, செவ்வாய்க்கிழமை எம்.பி. பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற சபாநாயகர் லோக்கபண்டாரா, கருணாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பின்போது, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா, தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.