• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கை பிரச்சினை: நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம்-கருணாநிதி

By Staff
|

Karunanidhi
சென்னை: இலங்கை தமிழர் விவகாரத்தில் நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக தங்களுடைய இயக்கத்தின் சார்பாக இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமைக்கு எதிரான குரலை உயர்த்தினால் மாத்திரம் போதாது. எல்லோருடைய குரலும் ஒரு குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

இது தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் குரல் எழுப்புவது தவறு என்ற கருத்தின் அடிப்படையிலே அல்ல.

தனித்தனியாக குரல் எழுப்புகின்றவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் நம்முடைய வலிமையை, நம்முடைய பலத்தினைக் காட்டுகின்ற வகையில், தமிழர்களுடைய இதயம் எல்லாம் பக்கத்திலே வாடிக் கொண்டிருக்கின்ற ஒரு பெரிய இனத்தின், தமிழ் இனத்தின் வாழ்வைப் பற்றிய ஒன்றாக இருக்கின்ற காரணத்தால் அதிலே எப்படி வெற்றி காண்பது என்பதைத் தீர்மானிக்க இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.

இங்கே நம்முடைய தம்பி டி.ராஜேந்தர் பேசுகையில், வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்திற்கு வராதது குறித்து சற்று வேதனையோடும், வேகமாகவும் தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அவர்கள் இலங்கை பிரச்சினையிலே பின்னடைவு கொண்டு வரவில்லை என்று கருதத் தேவையில்லை.

என்னுடைய பிரச்சினையிலே அவர்களுக்குள்ள அதிருப்தியின் காரணமாகத் தான் வரவில்லையே தவிர, இலங்கையிலே தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்களை சிங்கள வெறியர்களுக்கு களப்பலியாக ஆக்கக் கூடாது, அவர்கள் சிங்கள ராணுவத்திற்கு பலியாகி மாண்டு மடியக் கூடாது என்பதில் எல்லோரையும் போலவே ஒத்தக் கருத்து உடையவர்கள் தான் என்றாலுங்கூட, இன்று வராத காரணத்தால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சிங்கள வெறியர்கள் நினைத்து விடக் கூடாது.

இந்த கூட்டத்தின் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்ட அந்த மறுப்புக் கருத்துகள் அவர்கள் காதுகளிலே விழுமேயானால்- இது சிங்கள வெறியர்களுக்கு ஒரு ஊக்கமாக, ஆக்கமாக அமைந்து விடக் கூடாது. அமைய விடவும் மாட்டோம்.

யார் நம்மிடமிருந்து விலகிச் சென்றாலுங் கூட இந்த பிரச்சினையிலே அவர்களையெல்லாம் அழைத்து வைத்து, இழுத்து வைத்து ஓரணியிலே நாம் திரண்டு மத்திய அரசை வலியுறுத்தி நம்முடைய தமிழ் மக்களை இலங்கையிலே காப்பாற்றுகின்ற அந்த முயற்சியிலே வெற்றியடைவோம் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நீண்ட காலமாக விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்டவர்களுக்குள்ளே சகோதர யுத்தம் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறேன். அத்தகைய சகோதர யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளையெல்லாம் நாம் நன்கறிந்திருக்கின்றோம்.

இந்திரா காந்தியால் கிடைத்த உதவிகளைக் கூட நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் அந்தச் சகோதர யுத்தம், நம்முடைய இலக்கினைப் பாழ்படுத்தி விட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அம்மையார் இந்திரா காந்தி உலகத்தில் உள்ள பல அமைப்புகளின் சார்பாக கண்டனங்களையெல்லாம் கூடப் பொருட்படுத்தாமல், நூறுக்கு மேற்பட்ட முகாம்களை இந்தியாவிலே விடுதலைப் புலிகளுக்கு அமைவதற்கும், அந்தப் போராளிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும் அவர்கள் அன்றைக்கு ஆயத்தமாக இருந்தது மாத்திரமல்லாமல், ஆதரவும் அளித்தார்கள்.

அப்படிப்பட்டவர்களுடைய உதவிகளைக் கூடப் பெற்று, அந்தப் போராட்டத்திலே நாம் வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம், நம்மிடையே ஏற்பட்ட சகோதர யுத்தம் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மதுரையிலே டெசோ மாநாடு நடத்தினோம். 1986ல் நாம் நடத்திய டெசோ மாநாட்டில் என்.டி.ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராமுவாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங், ராச்சையா ஆகியோர் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, நம்முடைய அன்பு நண்பர் நெடுமாறனும், அய்யணன் அம்பலம், அப்துல் சமது முன் நின்று தான் அந்த மாநாட்டை மதுரையிலே நடத்தினோம்.

மாநில மாநாடு போல மிகவும் எழுச்சியாக நடைபெற்ற மாநாடு.

அந்த மாநாட்டில் எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் இருந்தார். டி.யு.எல்.எப். சார்பாக பெரியவர் நாவலர் அமிர்தலிங்கம் வந்திருந்தார். டெலோ சார்பாக மதி என்ற நண்பர் கலந்து கொண்டார். புரோடெக் சார்பாக சந்திரகாசன், தந்தை செல்வா அவர்களின் மகன் வந்திருந்தார். ஈராஸ் இயக்கத்தின் சார்பாக ரத்தினசபாபதி கலந்து கொண்டார். டி.ஈ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன் வந்திருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜ பெருமாள் கலந்து கொண்டார். பிளாட் சார்பாக வாசு தேவர் கலந்து கொண்டார். மற்றும் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, செ.கந்தப்பன், நண்பர் வைகோ என்று அத்தனை பேரும் அந்த மாநாட்டிலே கலந்து கொண்டோம். ஆனால், அந்த மாநாட்டிலே ஒரு செய்தி கிடைத்தது. மறுநாள் டெலோவின் தலைவர் சபாரத்தினத்தைக் கொல்லப் போகிறார்கள் என்ற செய்தி தான் அது. நான் இன்னொரு இயக்கத்தின் நண்பர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னேன்.

கையைப் பிடித்துக் கொண்டே சொன்னேன்- இது கை அல்ல, உங்களுடைய கால் என்று கருதிக் கொள்ளுங்கள், சபாரத்தினத்தைக் கொன்று விடாதீர்கள் என்றெல்லாம் சொன்னேன். ஆனால் 6ம் தேதி கிடைத்த செய்தி- சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்டார் என்பது தான். அவர் டெலோ இயக்கத்தின் தலைவர். இப்படி சகோதர யுத்தத்தினால் நாம் பலவீனப்பட்டு விட்டோம்.

இன்றைக்கு இலங்கையிலே நடைபெறுகின்ற இந்த அக்கிரமங்களை இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், நாம் பலகீனப்பட்டது தான்.

இப்படி சகோதர யுத்தத்தால் நாம் பாழ் பட்டு விட்டோம் என்பதை மறந்து விடாமல், அந்த சகோதர யுத்தங்கள் காட்டிய பாடத்தை இப்போது நாம் பெற வேண்டிய பாடமாகப் பெற்று, இப்போதாவது இலங்கை தமிழர்களுக்கு ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய இந்த கூட்டத்திலே உறுதி எடுத்துக் கொள்வோம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X