For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமான நிலையம் ரூ.1,808 கோடியில் விரிவாக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ரூ.1,808 கோடியில் சென்னை விமான நிலையத்தை விரிவாக்கி நவீனப்படுத்தும் பணிக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

இந்த பணி 2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி உள்நாட்டு பயணிகளும், 40 லட்சம் வெளிநாட்டு பயணிகளும் வந்து போகும் அளவிற்கு விமான நிலையம் விரிவாக்கப்படும்.

உள்நாட்டு முனையக் கட்டிடம் 67,700 சதுரமீட்டர் பரப்பளவில் விரிவாக்கப்படுகிறது. சர்வதேச விமான நிலையம் 59,300 சதுரமீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

மல்டி கார்பார்க்கிங்:

2,400 கார்களை நிறுத்துவதற்கு வசதியாக மல்டிலெவல் பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. அதேபோல 2-வது ஓடுபாதை 832 மீட்டர் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

மேலும், மிகப்பெரிய ஏ-380 விமானத்தை கையாள்வதற்கு வசதியாகவும் விமானம் நிறுத்தும் இடங்கள் விரிவாக்கப்படவுள்ளன.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

சேலத்திலே நிரந்தரமான விமான நிலையம் ஒன்றை அமைக்கவும், என்னுடைய சொந்த மாவட்டமான தஞ்சையில் உள்ள ராணுவ விமான தளத்தை பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றவும் நம்முடைய பிரபுல் படேல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

விலைவாசி உயர்ந்து விட்டது என்று கத்தரிக்காய்க்கும், மிளகாய்க்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விலைவாசி விமானத்தில் எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அதைச் சமாளிக்கின்ற அளவிற்கு பொருளாதாரம் இன்றைக்கு வளம் பெற்றிருக்கின்றது.

அந்த பொருளாதார வளம் பெற்ற பல பிரபுகள் நாட்டிலே வாழ்கிறார்கள். தனவந்தர்கள் வாழ்கிறார்கள். கோடீஸ்வரர்கள் வாழ்கிறார்கள். அவர்களையெல்லாம் இந்த விமானக் கட்டணம் பாதிக்கவில்லை.

இந்த விலைவாசி பாதிக்கவில்லை. எப்போதுமே விலைவாசியைக் கட்டுப்படுத்த இருக்கின்ற ஒரே வழி வாங்கும் சக்தியை உயர்த்துவதுதான். வாங்கும் சக்தி உயர, உயர விலைவாசியினால் ஏற்படுகின்ற துன்பம் குறையும், இதை இலகுவாக ஆக்க வேண்டும்.

நான் இன்றைக்கு கூட நம்முடைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு அறிக்கை ஒன்றை கண்டேன். நேற்றைக்கு நடைபெற்ற இலங்கைத் தமிழர்களுக்காக நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏதோ தவறுதலாக மத்தியிலே இருக்கின்ற அரசைப்பற்றி கோபதாபத்தோடு உரிமையோடு பேசினார்கள் என்றாலுங் கூட, சற்று அளவுக்கு மீறி பேசிவிட்டார்கள் என்பதற்காக அவர் கோபத்தோடு ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

நான் அந்த மறுப்பை மதிக்கிறேன். அனைத்துக் கட்சிக்கூட்டம் என்றால், அந்தக் கூட்டங்களிலே நாம் கடைபிடிக்க வேண்டிய அடக்கம், அமைதி, நாகரிகம், பண்பாடு என்றெல்லாம் இருக்கின்றது. இதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படி மறந்துவிட்டால் அதனால் அடையக்கூடிய பயன்கள், நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை இழந்தவர்களாக ஆகிவிடுவோம்.

நம்முடைய பொதுவான கருத்து, பொதுவான எண்ணம், இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதாகும். அதற்கே தமிழ்நாட்டில் சில பேர் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வாயை மெல்லுகின்ற அவர்களுக்கு அவல் போடுவது போல யாரும் அந்த வெறும் வாயிலே அவல் போட்டு விடாதீர்கள் என்பதை எச்சரிக்கத்தான் நண்பர் தங்கபாலு அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையை நூற்றுக்கு நூறு, வரிக்கு வரி நான் ஆதரிப்பதோடு, இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபட முன் வருகின்றவர்கள் யாராக இருந்தாலும், அந்த ஒரு பிரச்சனையோடு தங்கள் கருத்துகளை, தங்களுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது தான் நல்லது. அவர்களுக்கும் நல்லது, நமக்கும் நல்லது என்பதற்காகத்தான் இந்த விழாவிலே அதை நான் சொல்ல நேரிட்டது.

இலங்கை விவகாரத்தில் நாம் விடுத்த வேண்டுகோளுக்கு சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் நிச்சயமாக ஒத்துழைப்பார்கள்.

இப்போதே அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள்ளே அவசரப்படுகின்ற நண்பர்கள் யாராயினும் அவர்கள் ஆத்திரப்படாமல், அவசரப்படாமல் அமைதியாக பொறுமையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அமைச்சர் பிரபுல் படேல் பேசுகையில், தமிழகத்தில் விமான எரிபொருளுக்கான விற்பனை வரி 29 சதவீதமாக உள்ளது. அதை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X