For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பு மீது புலிகளின் விமானங்கள் குண்டுவீச்சு-மின் நிலையம், பீரங்கி தளம் சிதைப்பு

By Staff
Google Oneindia Tamil News

LTTE Aircraft
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பு மீது விடுதலைப் புலிகளின் விமானப் படை நேற்றிரவு குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் கொழும்பின் முக்கியமான மின் நிலையம் மற்றும் எண்ணெய் கிட்டங்கிகள் சேதமடைந்தன.

இதில் ஒருவர் பலியானார், மேலும் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

முதலில் மன்னார் மாவட்டம் தள்ளாடி என்ற இடத்தில் உள்ள ராணுவத்தின் பீரங்கித் தளத்தின் மீது நேற்றிரவு 10.20 மணிக்கு விடுதலைப் புலிகளின் விமானம் குண்டு வீசியது.

அடுத்தடுத்து 3 குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் மூலம் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் விடுதலைப் புலிகளின் விமானம் மாயமாகிவிட்டது.

இந்தத் தாக்குதலில் அந்த பீரங்கித் தளத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து இரவு 11.45 மணியளவில் கொழும்பில் களனிதிச என்ற இடத்தில் உள்ள அனல் மின் நிலையத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் குண்டு வீசின.

இரண்டு குண்டுகள் வீசப்பட்டதில் அந்த மின் நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொழும்பு முழுவதும் இருளில் மூழ்கியது.

தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்தக் தாக்குதலில் ஒருவர் பலியானார்.

இந்தத் தாக்குதலையடுத்து விமான எதிர்ப்பு பீரங்கிகளால் இலங்கை ராணுவத்தினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். ஆனால் விடுதலைப் புலிகளின் விமானம் தப்பிச் சென்றுவிட்டது.

சுமார் 1 மணி நேரம் வானத்தை நோக்கி இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொண்டே இருந்ததால் கொழுப்பில் பெரும் பீதியும் பரபரப்பும் நிலவியது.

புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியவுடன் கொழும்பில் இருந்து விமானப் படையின் விமானங்கள் கிளிநொச்சி, விஸ்வமடு, இரணைமடு ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. ஆனால், புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தத் தாக்குதல்களால் பெரிய சேதம் இல்லை என இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால், மின் நிலையத்தைப் பார்வையிட நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே இரு தாக்குதலையும் வெற்றிகரமாக முடித்து விட்டு தங்களது விமானங்கள் பத்திரமாக திரும்பி விட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிங்கள தரைப் படைத்தளம் மீது வான் புலிகள் செவ்வாய்க்கிழமை இரவு 10.20 நிமிடத்துக்கு குண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் தள்ளாடி தரைப்படைத் தளம் பலத்த சேதம் அடைந்துள்ளது. பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.

அதே நேரம் கொழும்பில் களனிதிச அனல் மின் உற்பத்திரி நிலையம் மீது நேற்று இரவு 11.45 நிமிடத்துக்கு வான் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தினர்.

இந்த இரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பதிலடித் தாக்குதல்?:

முன்னதாக, நேற்று காலை கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் குமரபுரம் என்ற ஊரில் இந்து வித்தியாலயா பள்ளி அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்பு மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

2 முறை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 3 பொது மக்கள் கொல்லப்பட்டனர். கிறிஸ்டி, கனிஸ்டன், தனுசன் ஆகிய 3 மாணவர்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

மேலும் 1,300 மாணவ-மாணவிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். பள்ளி நடந்து கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதலை இலங்கை போர் விமானங்கள் நடத்தியதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினர்.

இந் நிலையில் தான் நேற்றிரவில் கொழும்பு மீது புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X