For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீசை என் பேச்சை கேட்க சொல்லுங்கள்...ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்: தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்திவிட்டு போலீஸை ஒரு மாதம் மட்டும் என் பேச்சை கேட்கச் சொல்லுங்கள். ஒரு துளி கள்ளச் சாராயம் கூட இல்லாமல் செய்து காட்டுகிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கோரி மாவட்டந்தோறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்ட மாநாடு மஞ்சக்குப்பம் நடந்தது.

இதில் ஊரான் அடிகளார் பேசுகையில்,

தமிழகத்தில் மது ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் 40, 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கள்ளுக்கடைக்கு செல்வார்கள். ஆனால் இப்போதோ பள்ளி மாணவர்களே பார்களில் அமர்ந்து மது குடிக்கின்றனர்.

கள்ளுக்கடையும், பார்களும் வந்தது அரசாங்கம் மூலம் தான். இதனால் நிறைய பேர் குடிக்க துவங்கி விட்டனர். நிலைமை இப்படியே சென்றால் இயற்கை இடர்பாடுகளால் நாடு அழிவதை விட குடியிலேயே அழிந்து விடும்.

இந்து, கிருஸ்துவர், முஸ்லீம், பெளத்தம், ஜைன மதங்களும் நூல்களும் மது குடிக்க கூடாது என காலம் காலமாக கண்டித்து வருகின்றன.

பட்டினத்தார், திருவள்ளுவரும் சாராயத்தை கண்டித்துள்ளனர். ஆனால், அரசாங்கமே மதுவை வளர்க்கிறது. ஆரம்ப காலங்களில் ஊரின் வெளியே மது, சாராயக் கடைகள் இல்லை. கடை வைக்கவும் உரிமம் வழங்குவதில்லை. இப்போது பள்ளி, கோவில் அருகிலேயே மது விற்கப்படுகிறது என்றார்.

ராமதாஸ் பேசுகையில்,

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நாங்கள் எத்தனை முறையோ சொல்லி விட்டோம். ஆனால் மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் வரும் என்று அரசு சொல்கிறது. அப்படியானால் இப்போது கள்ளச் சாராயமே இல்லையா?

இது குறித்து எங்கள் கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் கேள்வி கேட்டதற்கு இனமானப் பேராசிரியர் (அமைச்சர் அன்பழகன்) என்ன பதில் சொன்னார் தெரியுமா?. ''கள்ளச் சாராயத்தை போலீசே விற்பார்கள்'' என்றார்.

இந்த மாநாட்டுக்கு வந்துள்ளவர்களில், எங்கள் வீட்டில் மது குடிக்கிறவர்கள் இல்லை என்று சொல்கிறவர்கள் 10 பேர் கூட இருக்க மாட்டார்கள்.

இந்தியாவிலே இது போன்ற மாநாட்டை நாங்கள் தான் நடத்துகிறோம், வேறு யாரும் நடத்தவில்லை. எல்லோரும் சாராயத்தில் சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

குடி, குடி, நல்லா குடி என்று சொல்லக்கூடிய கால கட்டத்தில் மது குடிக்கக்கூடாது என்று நாங்கள் தான் சொல்கிறோம்.

இந்த சாராய சனியனால் பாதிக்கப்படாத கிராமங்களே இல்லை. சாராயம் இல்லாத வீடு, சாராயம் இல்லாத கிராமம், சாராயம் இல்லாத நகரம், சாராயம் இல்லாத நாடு வேண்டும்.

வரும் தை முதல்நாள் பொங்கல் அல்லவா!. அன்று உங்கள் மனமெல்லாம் பொங்கும் செய்தி வரவேண்டும். என்ன செய்தி என்றால், தமிழ்நாட்டில் சாராயத்தை ஒழிச்சாச்சு! முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது என்று அரசு அறிவிக்க வேண்டும்.

இந்தியாவிலே தமிழகத்திலும், புதுவையிலும் தான் கணவனை இழந்த பெண்கள் அதிகம். எதனால்? குடியினால். இதைவிட நமக்கு அசிங்கம், கேவலம் வேறு ஏதாவது உண்டா?.

ஆனால் தமிழ்நாடு நெருப்புக்கு மத்தியில் கற்பூரம் மாதிரி இருக்கிறது என்று முதல்வர் சொல்கிறார். எனவே இங்கே மதுவிலக்கை அமல்படுத்தினால், சுற்றி உள்ள மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் உள்ளே வரும் என்கிறார்.

நான் சொல்கிறேன், ஒரு துளி கள்ளச்சாராயம் கூட வராமல் இருக்க என்னிடம் திட்டம் உள்ளது. கர்நாடக முதல்வர் எதியூரப்பா பூரண மதுவிலக்கை கொண்டு வர தயார் என்று கூறியுள்ளார்.

எனவே தென்னிந்தியா முழுவதும் மதுவிலக்கு மாநாட்டை, கலைஞர் அவர்களே நீங்களே முன்னின்று நடத்த கூடாதா? தென்னிந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர நீங்கள் முன் நிற்கக் கூடாதா?.

மதுவிலக்கை அமல்படுத்துங்கள். ஒரு சொட்டு கள்ளச் சாராயம் தூட இல்லாமல் செய்ய வழி சொல்கிறேன். ஒரு மாதம் மட்டும் என் பேச்சை கேட்குமாறு போலீசுக்கு சொல்லுங்கள், என்னிடம் போலீஸ்துறையை கொடுக்கச் சொல்லவில்லை, ஒரு மாதம் மட்டும் என் பேச்சை கேட்க சொல்லுங்கள். ஒரு துளி கள்ளச் சாராயம் கூட இல்லாமல் செய்து காட்டுகிறேன் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X