For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வேண்டும்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்துப் பள்ளிகள், அனைத்துக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

திராவிடர் கழகம் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் படத்திறப்பு விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் நடந்தது. முதல்வர் கருணாநிதி வி.பி.சிங் படத்தைத் திறந்து வைத்து பேசுகையில்,

வி.பி.சிங் அவர்களுக்கு ஒரு நினைவு சின்னம், என்றென்றும் தமிழ்நாட்டு மக்களுடைய நெஞ்சிலே நிலைக்கக்கூடிய சின்னம் அமைத்திட வேண்டும். அது எப்படி, எவ்வாறு, என்றைக்கு என்பதையெல்லாம் கலந்துதான் தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என்று தமிழர் தலைவர் வீரமணி ஆணை பிறப்பித்துள்ளார்.

இதை நான் இங்கேயே அறிவிப்பது, என்னைப் பொறுத்தவரையில் ஒரு விளம்பரமாகத்தான் ஆகும் என்பதால், நான் வீரமணியுடன் கலந்துபேசி, அந்த நினைவுச் சின்னம் எப்படி அமைய வேண்டும், எங்கே அமைய வேண்டும், எந்த வகையிலே அமைய வேண்டும், எத்தகைய நினைவுச் சின்னமாக அது இருத்தல் வேண்டும் என்பது பற்றி விரைவில் அறிவிப்பேன் என்பதை, மன்னிக்கவும்-விரைவில் அறிவிப்போம்.

மண்டல் கமிஷன் பல ஆண்டுகளாக, ஏன் இந்தியாவில், தமிழ்நாட்டில் எல்லோருடைய வாயிலும் விளையாடிய ஒரு சொல்-உச்சரிக்கப்பட்ட ஒரு சொல். இதை பல ஆண்டுகளுக்கு முன்பே மத்தியிலே காங்கிரஸ் அரசு உருவாக்கியது என்றாலுங்கூட, அந்த மண்டல் குழு செய்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துகின்ற காரியத்திலே இறங்காமல், , அதைக் கிடப்பிலே போட்டு வைத்தார்கள்.

அந்தக் கட்சியின் ஆட்சியிலே மத்தியிலே சில காலம் மிகப்பொறுப்பான அமைச்சர் பதவிகளை எல்லாம் வகித்து, பின்னர் அந்த பொறுப்பிலே இருந்து விலகி வெளிவந்து, ஒரு கட்சியை உருவாக்கி, அந்த கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டு, அதன்பிறகு நம்மைப் போன்றவர்களுடைய தொடர்பெல்லாம் அவருக்கு ஏற்பட்டு, அதன் காரணமாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏறெடுத்துப் பார்த்து, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்கிற உயர்ந்த உள்ளத்தோடு வி.பி.சிங் பணியாற்றத் தொடங்கினார்.

1990ம் ஆண்டு வாக்கில் வி.பி.சிங், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வெளியிட்டு, ஆணை பிறப்பித்து, இதை நாடு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியபோது, எத்தகைய புரட்சிகளெல்லாம் நடைபெற்றன?.

எத்தனைபேர் தீக்குளிக்க வைக்கப்பட்டார்கள், எத்தனை மாணவர்களை அந்த போராட்டத்தில் ஈடுபடுத்தினார்கள். யார் அந்த மாணவர்கள்? உயர் குலத்திலே பிறந்த மாணவர்கள், அக்ரகாரத்துப் பிள்ளைகள்.

நடுத்தர மக்களால், ஏழை எளிய மக்களால், சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் இந்த மண்டல் கமிஷனுக்கு ஒரு சிறப்பு வந்துவிடக்கூடாது. மண்டல் கமிஷன் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக, அவர்களைத் தூக்கிவிடுகின்ற கருவியாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக வி.பி.சிங் கொண்டுவந்த அந்த ஆணையை எதிர்த்து பெரும் புரட்சியே வடபுலத்திலே நடைபெற்றது.

அந்த புரட்சி நடைபெற்றதன் காரணமாக வி.பி.சிங் தன்னுடைய பதவியை துச்சமாகக் கருதி தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தார். அப்படி வெளியே வந்தபோது இந்தியாவிலேயே முதன்முதலாக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவரை வரவேற்றது திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

அவரை ஆதரித்தாலே ஆபத்து, ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தும், அந்த ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல் வி.பி.சிங்கை, ஆதரித்ததற்கு காரணம் எங்களுக்கு கோட்டையோ கொலுமண்டபமோ பெரிதல்ல, கோலோச்சுவதும் பெரிதல்ல, கொள்கைதான் பெரிது என்பதற்காகத்தான் அன்றைக்கு வி.பி.சிங் அவர்களுக்கு பெரும் வரவேற்பு இங்கே அளித்தோம்.

வீரமணி பேசும்போது, வி.பி.சிங்கிற்கு நினைவுச் சின்னம் பற்றி சொன்னார். ஒரு இடத்திலே வி.பி.சிங்கிற்கு சிலையோ அல்லது ஒரு மண்டபமோ எழுப்புவதால் மாத்திரம் நாம் அவருக்கு பெருமை சேர்த்தவர்களாக ஆகமாட்டோம்.

அவர் மண்டல் கமிஷன் மூலமாக எந்த விடியலை நாட்டில் எதிர்பார்த்தாரோ, அந்த விடியல் ஏற்பட இடஒதுக்கீட்டில் இன்னும் எல்லா இடங்களிலும் அந்த இடஒதுக்கீட்டை கொண்டுவர எல்லா கல்லூரிகளிலும், எல்லா பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களிலும்கூட இடஒதுக்கீட்டை கொண்டு வர நாம் பாடுபட வேண்டும்.

அதுதான் வி.பி.சிங்கின் விருப்பம், கனவு. அந்த கனவை நாம் நிறைவேற்றுவோம். அதைச் சொல்லுகிற காரணத்தால் வீரமணி சொன்ன நினைவுச் சின்னத்தை தட்டிக் கழிக்கிறேன் என்று அர்த்தமல்ல.

வி.பி.சிங்கினுடைய சிலையை நாடாளுமன்றத்துக் கட்டிடத்திலே வைப்பதற்கும் நாம் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக செய்ய வேண்டும். இப்போது இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மீண்டும் தேர்தலுக்கு நின்று நீங்கள் அவர்களையெல்லாம் வெற்றி பெறச் செய்து அவர்களைக் கொண்டே நாடாளுமன்ற வளாகத்திலே வி.பி.சிங் அவர்களுடைய சிலையை வைப்பதற்கான அந்தப் பணியை நீங்களும் சேர்ந்து செய்யவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X