For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரக்தியின் விளிம்பில் கருணாநிதி!-ஜெ. கிண்டல்

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: முதல்வர் கருணாநிதி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார், தோல்வி பயத்தில் புலம்புகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் வன்முறை, அராஜகப்போக்கு மற்றும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் கலந்து பேசி அவரது பரிபூரண ஒப்புதலுடன் நடைபெற இருக்கும் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அறிவித்தேன்.

என்னுடைய அறிவிப்பைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் தோல்வி பயத்தில் தொடர் வண்டியில் உள்ள அனைத்து பெட்டிகளும் கழன்று ஒரேயொரு பெட்டி மட்டும் எப்பொழுது கழன்று கொள்ளலாம் என்ற ஊசலாட்டத்தில் இருக்கின்ற சூழ்நிலையில் 14.12.2008 அன்று ''யார்தான் குறுக்கே நிற்க முடியும்?'' என்ற தலைப்பில் யசோதர காவியக் கதையைச் சொல்லி புலம்ப ஆரம்பித்து விட்டார். விரக்தியின் விளிம்பில் இருக்கும் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

கருணாநிதியால் குறிப்பிடப்படும் யசோதர காவியத்தில் வரும் யானைப் பாகனின் குணங்கள் அனைத்தும் கருணாநிதிக்கு உள்ளன என்பதை அனைவரும் நன்கு அறிவர். கருணாநிதியின் கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு கட்சியும் கருணாநிதியின் குணங்களை அறிந்து கழன்று கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தனக்கு பொருந்தக் கூடிய யானைப் பாகனின் குணங்களை சுட்டிக்காட்டியது போதாது என்று நேற்று ''திருமங்கலம் தேர்தலும், திடீர் அறிவிப்பும்'' என்ற தலைப்பில் மீண்டும் ஒரு புலம்பல் புராணத்தைப் பாடியிருக்கிறார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியின் இந்த அறிக்கை என்னை குற்றம் சாட்டுவதாக, என்னை குறை கூறுவதாக உள்ளது.

திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிப்பு திடீரென்று வெளியிடப்பட்டதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் உள்ளவர் கருணாநிதி. அப்படி இருக்கும் போது என்னை கேட்டுக் கொண்டா இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவிக்கும்? கருணாநிதி மத்தியில் உள்ள தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த இடைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னை ஏன் குறை சொல்கிறார் என்று புரியவில்லை.

அடுத்தபடியாக நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அந்த உற்சாகம், நம்பிக்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று நான் கணக்குப் போடுவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் என்று அறிவித்துவிட்டால் அதில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றுதான் அனைத்துக் கட்சிகளும் நினைக்கும். அந்த வகையில் அதிமுக இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறது. இதில் என்ன குற்றத்தை கருணாநிதி கண்டார் என்று எனக்கு புரியவில்லை.

ஒருவேளை மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன் திமுகவின் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக காங்கிரசார் தீட்டிய சதித்திட்டமாக இருக்கும் என்று கருணாநிதி சந்தேகப்படுகிறாரா? என்று தெரியவில்லை.

கருணாநிதியின் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அவர் தேர்தலைக் கண்டு பயப்படுகிறார், அச்சப்படுகிறார் என்பது தெளிவாகிறது. அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்தப் புலம்பல் பேச்சு என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X