For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்லா நோட்டு, பித்தளை காசு, ஓட்டை குவளை, உடைந்த பானை- ஜெ விமர்சனம்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: செல் அரித்த செல்லாத நோட்டு, செலவழிக்க இயலாத பித்தளை காசு, ஓட்டை விழுந்த தகரக் குவளை, உடைந்து போன மண்பாண்டம் தான் தமிழக ஆளுநர் சட்டசபையில் ஆற்றிய உரை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக சட்டசபையில் வாசிக்கப்பட்ட கவர்னரின் உரை இந்த ஆட்சியின் ஆளுமைத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த உரையை கடந்த மூன்று ஆண்டு உரைகளின் கலவை என்று சொன்னால் அது மிகையாகது.

திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், கடைசி ஒரு மணி நேரத்தில் 30 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வைத்து அதன் மூலம் ஜனநாயகத்தின் குரல் வளையை மிதித்த திமுக அரசின் ஆளுநர் உரையில், ஜனநாயகத்தின் வலிமை உணர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது மக்களாட்சி தத்துவத்தை கேலிக் கூத்தாக்குவதற்கு சமம்.

இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்கென ரூ. 48 கோடி அளவிற்கு நிதியை திரட்டி உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக அவர்களுக்கு அனுப்பியுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவைகள் எல்லாம் இலங்கைத் தமிழர்களை சென்றடைந்ததா?.

வெள்ள நிவாரணத்தை பொறுத்த வரையில், எனது ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட நிவாரண உதவியையும், திமுக ஆட்சிக்காலத்தில் தற்போது வழங்கப்பட்ட நிவாரண உதவியையும் ஒப்பிட்டு சில புள்ளி விவரங்கள் ஆளுநர் உரையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், எனது ஆட்சிக் காலத்தில் கூடுதலாக நிவாரணம் வழங்கப்பட்டிருப்பது தெளிவாகிறது.

ஒரு சில இனங்களில் எனது ஆட்சிக் காலத்தில் குறைவாக வழங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அப்போதிருந்த விலைவாசியையும், தற்போதுள்ள விலைவாசியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எனது ஆட்சிக் காலத்தில் நிவாரண தொகை மிகவும் அதிகமாக வழங்கப்பட்டிருப்பது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

அண்டை மாநிலங்களில் இருந்து நீரைப் பெறுவதைப் பொறுத்த வரையில் இந்த ஆளுநர் உரையில் பெரிதாக எதுவும் குறிப்பிடவில்லை. மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்துவது என்ற அளவிற்கு சுருங்கியிருக்கிறது.

தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரையில், புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணம் உள்ளதாகவும், இரண்டாம் நிலை நகரங்களுக்கு தொழில் வளர்ச்சி சென்றடைய தேவையான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடுமையான மின்சார வெட்டு காரணமாகவும், தமிழக அரசின் வேண்டுகோள் காரணமாகவும், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய தொழிற்சாலைகள் உட்பட பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்துக் கொண்டுள்ளன.

இதன் காரணமாக மேற்படி நிறுவனங்களை நம்பி வாழும் சிறு தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. அம்பத்தூர் தொழிற்பேட்டை, திரு.வி.க. தொழிற்பேட்டை உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல தொழிற்பேட்டைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

தொழில் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக விளங்கும் கோவை மாவட்டத்தில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் நிர்வாகத் திறமையின்மையால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளார்கள். இது தான் தற்போதைய தமிழ்நாட்டின் நிலைமை.

மின் உற்பத்தி திறனை பொறுத்த வரையில், எப்போதும் போல், மின் உற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மின்வெட்டுப் பிரச்சினை தொடரும் என்பது சூசகமாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல் ஆகியவை தினசரி நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கொள்ளையடிப்போர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த ஆளுநர் உரையில் எதுவும் அறிவிக்கப்படாதது வேதனை அளிக்கிறது.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆகியவை ஆண்டுதோறும் ஆளுநர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் இடம்பெற்று வருகின்றனவே தவிர, திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரியவில்லை.

திமுக ஆட்சி வந்த பிறகு, மூன்று புதிய மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கொடுத்து அதன் மூலம் மது உற்பத்தியைப் பெருக்கி இருப்பதை ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டவில்லை. இந்த ஆளுநர் உரையில் எள்ளளவும் உண்மை இல்லை. இதனால் ஏழை எளியோருக்கு எந்தவித நன்மையும் இல்லை. செல் அரித்த செல்லாத நோட்டு, செலவழிக்க இயலாத பித்தளை காசு, ஓட்டை விழுந்த தகரக் குவளை, உடைந்து போன மண்பாண்டம் தான் இந்த ஆளுநர் உரை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X