For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

60வது குடியரசு தினம்: டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 60வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார். ராஜ்பாத்தில் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.

இன்று காலை 8.45 மணிக்கு அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து ராஜ்பாத்தில் குடியரசு தின விழா தொடங்கியது. கஜகஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நசர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் 24 முறை பீரங்கிக் குண்டுகள் முழங்கப்பட்டன.

இதையடுத்து வீரமரணம் அடைந்த 9 பேருக்கு அசோக் சக்ரா விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் தீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே, கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே, மும்பை இன்ஸ்பெக்டர் விஜய் சலஸ்கர், உதவி சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்ப்ளே, என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் மேஜர் சந்தீப் உண்ணிகிருஷ்ணன், ஹவில்தார் கஜேந்தர் சிங் உள்ளிட்ட 9 பேருக்கு அசோக் சக்ரா விருது அளிக்கப்பட்டது.

கர்கரே, சலஸ்கர், ஓம்ப்ளே ஆகியோருக்கான விருதுகளை அவர்களது மனைவியர் பெற்றுக் கொண்டனர். உண்ணிகிருஷ்ணனின் விருதை அவரது தாயார் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டார்.

இவர்கள் தவிர வீர விருது அறிவிக்கப்பட்ட டெல்லி இன்ஸ்பெக்டர் எம்.சி. சர்மா, ராணுவ கர்னல் ஜோஜன் தாமஸ், சிறப்புப் படை கமாண்டோ ஹவில்தார் பகதர் சிங் போஹ்ரா, ஒரிசா ஆயுதப் படை சிறப்பு உதவி கமாண்டன்டன் சத்பதி, மேகாலயா காவல்துறையின் தியங்டோ ஆகியோருக்கான விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.

பிரமாண்ட அணிவகுப்பு ...

பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிரமாண்ட குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியது. ராஜ்பாத் சாலையில் நடந்த இந்த அணிவகுப்பு இந்தியாவின் படை பலம், கலாச்சார பலம் மற்றும் மேன்மையை விளக்குவதாக அமைந்திருந்தது.

அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களிடமிருந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சல்யூட்டை ஏற்றுக் கொண்டார்.

அணிவகுப்பில், தீரச் செயலுக்கான குடியரசுத் தலைவர் விருது பெற்ற சிறார்கள் செளமிக் மிஸ்ரா (உ.பி.), பிராச்சி சந்தோஷ் சென் (ம.பி), கவிதா கன்வார் (சட்டீஸ்கர்), அசு கன்வார் (ராஜஸ்தான்), ராகுல் (டெல்லி), மருதுபாண்டியன் (தமிழ்நாடு), ககன், பூமிகா மூர்த்தி (கர்நாடகா), கர்பானி (மேகலாயா), யும்கைபாம் அடிசன் சிங் (மணிப்பூர்), விஷால் சூர்யாஜி பாட்டீல் (மகாராஷ்டிரா), ஷாஹன்ஷா (உ.பி.), தினு (கேரளா), அனிதா கெளரா, ரீனா கெளரா (மேற்கு வங்கம்), மஞ்சுஷா (கேரளா), ஹீனா குரேஷி (ராஜஸ்தான்), மனீஷ் பன்சால் (ஹரியானா), கிருத்திகா ஜன்வார் (ராஜஸ்தான்) ஆகியோர் மாருதி ஜிப்சி ஜீப்களில் அழைத்து வரப்பட்டனர்.

இந்தியாவின் முப்படைகளின் பலத்தையும், சிறப்பையும் விளக்கும் வகையிலான அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.

இதையடுத்து இந்திய விமானப்படையின் எம்ஐ -17 ரக விமானங்கள் தேசியக் கொடியை ஏந்தியடி தாழப் பறந்து சென்றன.

அணிவகுப்பில் முதலில் பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களும், பின்னர் அசோக் சக்ரா விருது
பெற்றவர்களும் அணிவகுத்துச் சென்றனர்.

அணிவகுப்பை டெல்லி பிராந்திய ராணுவ தலைமை கமாண்டர் மேஜர் ஜெனரல் ஓபராய் தலைமை தாங்கிச் சென்றார்.

டி-90 ரக டாங்குகள், பிரம்மோஸ் ஏவுகணை, ஓ.எஸ்.ஏ.-ஏகே அமைப்பு, அதி நவீன விமானப் பாதுகாப்பு சாதனங்கள் அணிவகுப்பில் இடம் பெற்றன.

புல்லட் புரூப் கவச வாகனமான தக்ஷக் ஸ்டிரைக்கரும் அணிவகுப்பி்ல் கலந்து கொண்டது.

இந்தியாவிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டர்களும் அணிவகுப்பில் இடம் பெற்றன.

இதையடுத்து ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு நடந்தது.

ராணுவத்தின் பாராசூட் பிரிவு, மராத்தா லைட் இன்பேன்டரி பிரிவு, ராஜ்புத் பிரிவு, கார்வால் ரைபிள்ஸ், குமாவோன் பிரிவு, ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், லடாக் ஸ்கவுட்ஸ், டெரிட்டோரியல் ஆர்மி ஆகியவற்றின் வீரர்கள் பீடு நடை போட்டு வந்தனர்.

தொடர்ந்து கடற்படை வீர்ரகள் ஐ.என்.எஸ். ஜல்ஸ்வா போர்க் கப்பலின் மாதிரியுடன் அணிவகுத்து வந்தனர்.

கடற்படையின் மூன்று கமாண்டுகளிலிருந்து 144 வீரர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

இவர்கள் தவிர அஸ்ஸாம் ரைபிள்ஸ், கடலோரக் காவல்படை, சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், சஹஸ்த்ரா சீமா பால், ரயி்ல்வே போலீஸ் படை ஆகியவற்றின் வீரர்களும் அணிவகுத்து வந்தனர்.

முப்படைகளின் பேன்டு வாத்தியக் குழுவினர் ஒருங்கிணைந்து இசைத்தபடி வந்தனர்.

என்.சி.சி. மாணவ, மாணவியர் மற்றும் என்.எஸ்.எஸ். குழுவினரும் இசைத்தபடி வந்தனர்.

இதையடுத்து நாட்டின் கலாச்சாரம், கலை, தொழில் முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி, இயற்கை வளங்களின் செழுமை ஆகியவற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது.

12 மாநிலங்கள், ஆறு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இதில் கலந்து கொண்டன.

முதலில் ஆந்திர அலங்கார ஊர்தி வந்தது. தொடர்ந்து பிற மாநிலங்களின் ஊர்திகள் அணிவகுத்து வந்தன

பலத்த பாதுகாப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம், நேற்று டெல்லியில் ஊடுறுவிய இரு பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துப்பாக்கி ஏந்திய 15 ஆயிரம் போலீசாரும், 5 ஆயிரம் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸ் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. குடியரசு தின விழா பேரணி நடைபெறும் ராஜ்பாத்தில் மட்டும் 22 இடங்களில் கேமரா அமைக்கப்பட்டு இருக்கின்றன.

நகரின் பல்வேறு இடங்களில், விமான எதிர்ப்பு பீரங்கிகளும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் கமாண்டோ படையினரும், தேசிய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வான் வெளியை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீடுகளின் மொட்டை மாடிகளிலும், வீரர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X