For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: தமிழகம் முழுவதும் போராட்டம் வலுக்கிறது

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் வலுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரியும் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் 21-ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் நேற்று மாநிலக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். வெயிலில் உண்ணாவிரதம் இருந்த அவர்களை நிழலில் இருக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு அவர்கள் ஈழத்தமிழர்கள் அங்கு சாகிறார்கள் நாங்கள் வெயிலில் இருப்பதால் உயிர்போகாது என்று கூறினர்.

இந்த போராட்டத்தில் கல்லூரிகளுக்கிடையேயான மாணவர் பேரவை தலைவர் எம்.பிரசாத், துணைத்தலைவர் சிலம்பரசன், பொதுச்செயலாளர் ஆர்.தேவகிரண் உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தியாகராயர் கல்லூரி மாணவர்கள், நியூ கல்லூரி மாணவர்கள் நேற்று காலை இலங்கை தமிழர்களை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மன்றோ சிலை முன்பு சாலை மறியல் செய்தனர். அப்போது 15 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரியில் ...

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று காலை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோடு மாவட்டத்திலும் பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் பேராட்டம் நடத்தினார்கள்.

கடலூரில் ...

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர பகுதியில் உள்ள அரசு உயர் நிலை-மேல்நிலைப்பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 10 ஆயிரம் பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரம்பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் ...

வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள ஊரீசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு ரோட்டுக்கு சென்று இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அப்போது சில மாணவர்கள் ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிலர் ரோட்டின் குறுக்கே படுத்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

வக்கீல்கள் ரயில் மறியல் ...

இலங்கை தமிழர்களை காப்பாற்றக் கோரி, கும்பகோணத்தில் நேற்று வக்கீல்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறையில் இருந்து நெல்லை சென்று கொண்டு இருந்த பாசஞ்சர் ரெயிலை அவர்கள் மறித்தனர். இதையொட்டி, 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சில மாணவர்கள் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரிப்பதற்காக எடுத்து வந்தனர். போலீசார் அந்த உருவபொம்மையை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினார்கள்.

திருச்சியில் ...

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இருந்தனர்.

ஆனால் சட்டக்கல்லூரிக்கு நேற்று திடீர் என விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பை கல்லூரி முதல்வர் வெளியிட்டு இருந்தார்.

சோனியா கொடும்பாவி எரிக்க முயற்சி ..

மதுரை உயர்நீதிமன்றக் கிளை வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென கோர்ட் வளாகம் அருகே சிலர் சோனியா காந்தியின் கொடும்பாவியை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரத்தில் மதிமுக சார்பில் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை சட்டக் கல்லூரியில் நேற்று 20 மாணவர்கள் கூடி தேசியக் கொடியை அகற்றி விட்டு கருப்புக் கொடியை ஏற்ற முயன்றனர். இதையடுத்து முதல்வர் ராதாகிருஷ்ணன் நாயர் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வர் சின்னப்பா தலைமையில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்கபப்ட்டது.

கல்லூரி வளாகத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் வலுத்து வரும் மாணவர் போராட்டம் காரணமாக பல கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே மாணவர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருவதால் நிலைமை பதட்டமாக உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X