For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முத்துக்குமாரின் தியாகம் வீணாகி விடக் கூடாது - வைகோ

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: முத்துக்குமார் செய்த தியாகம் வீணாகி விடக் கூடாது. அதை நாம் அனுமதிக்க மாட்டோம். இறுதி வரை குரல் கொடுப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

முத்துக்குமாரின் உடலுக்கு நேற்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். இரங்கல் கூட்டமும் நடந்தது.

கூட்டத்தில் வைகோ பேசுகையில், வாழ வேண்டிய வயதில், மணமாலை ஏந்த வேண்டிய வயதில் பிணமாலை ஏந்தி இருக்கிறார் தமிழ் மக்களுக்காக. அவரின் தியாகம் வீணாக போய் விடக்கூடாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம். இறுதி வரை குரல் கொடுப்போம்.

இலங்கையில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களை தமிழக அரசு கைது செய்கிறது. மாணவர்களுக்கிடையே சீறி வரும் போராட்டத்தை அடக்கி விட முடியாது.

1965-ல் உருவாகிய கிளர்ச்சியை விட பெரிய கிளர்ச்சியாக இது உருவாக வேண்டும். நாம் கிளர்ச்சி தீயை கையில் ஏந்தி செல்ல வேண்டும். திசைதிரும்பும் முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும். அவரின் இறுதி ஊர்வலத்தை உலகமே கவனிக்கும். அதனால் தமிழ் உணர்வுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

புரட்சியை உருவாக்கியுள்ளார் ...

தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில், தன்னுடைய மரண சாசனத்திலே ஒரு புரட்சியை உருவாக்கி விட்டு இறந்திருக்கிறார் முத்துகுமார். அவரின் இறுதி சடங்கில் தமிழ் உணர்வுள்ளவர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும். எந்த கட்சி கொடியையும் ஏந்தி இந்த ஊர்வலத்தில் பங்கு கொள்ள வேண்டாம்.

மது அருந்தி விட்டு கூட்டத்தில் யாரும் பங்கு கொள்ள கூடாது. அவரின் நம்பிக்கையை நாம் காப்பாற்றும் வகையில் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், கையில் கறுப்பு கொடி ஏந்தியும், மவுனமாக இறுதி ஊர்வலத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பேசுகையில், இலங்கை பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகள் சேர்ந்து அவசர, அவசரமாக இலங்கையில் அமைதி காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துகுமார் போல இனி யாரும் தீக்குளித்து தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நினைக்க கூடாது. முத்துகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பேசுகையில், இலங்கையில் தமிழக மக்களை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் இலங்கை அரசு களம் இறங்கி உள்ளது. இது மிக வேதனைக்குரியது.

இலங்கையில் தமிழர்கள் படும் வேதனையை சகித்து கொள்ள முடியாத, தமிழ் இன உணர்வு மிக்க வாலிபர் முத்துக்குமார் தன் இன்னுயிரையே அர்ப்பணித்து மரணம் அடைந்து உள்ளார்.

அவர் சாகும் தருவாயிலும் கூட நெஞ்சுருக ஈழத்தமிழர்களை காக்க வேண்டும். அவர்களை வாழ வைக்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார். இதை தமிழக அரசியல்வாதிகள் மற்றும் மத்திய அரசும் சவாலாக ஏற்று இலங்கை தமிழர்களை பாதுகாக்க உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், சனிக்கிழமை சென்னை சர் பி.டி. தியாகராயர் அரங்கில் இலங்கை தமிழர் நலன்காக்க நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ் உணர்வுள்ள அனைத்து அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், மனிதநேயம் இல்லாத சிங்கள அரசு தமிழினத்தை அழித்து வருகிறது. இந்தியா அதற்கு கைகுலுக்கி உறுதுணையாக உள்ளது. இது கேவலமான நிலையாகும்.

இலங்கை தமிழர்களை பாதுகாத்தே தீருவோம். இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு உடனே வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்காது என்றார்.

வாழ்ந்து போராடுவோம் ..

பா.ஜ.க. தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. பேசுகையில், முத்துக்குமாரை போல யாரும் தீக்குளித்து சாகவேண்டாம். வாழ்ந்து போராடுவோம். பிரணாப் முகர்ஜி குறைந்தபட்ச போர் நிறுத்தத்துக்கு கூட அறிவிக்க ஏற்பாடு செய்யாமல் இந்தியா திரும்பியுள்ளார்.

உலக தமிழர்களையும், தமிழ் மக்களையும் மத்திய அரசு அவமானப்படுத்தி வருகிறது. தி.மு.க. 3-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்த உள்ளது. பாரதீய ஜனதா கட்சி சார்பிலும் கூட்டம் நடத்த உள்ளோம். இலங்கை பிரச்சனை சம்பந்தமாக அத்வானியிடம் பேசியிருக்கிறேன். இலங்கையில் நிரந்தர அமைதி காண்பதே நமது நோக்கம் என்றார்.

நடிகர் வடிவேலு பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார். ஒரு கட்டத்தில் ஆவேசத்துடன், ராஜபக்சே ஒழிக, முத்துக்குமார் வாழ்க என்று கோஷமிட்டார்.

அதேபோல இயக்குநர்கள் ஆர்.சுந்தரராஜன், ஆர்.கே.செல்வமணி ஆகியோரும் ஆவேசத்துடன் பேசினர்.

சத்யராஜால் பேச முடியாத அளவுக்கு அவருக்கு கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.

டைரக்டர் சேரன் பேசுகையில், முத்துக்குமார் தனது இன்னுயிரை இலங்கை தமிழர்களுக்காக தந்துள்ளார். இனியாவது தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களை பாதுகாப்போம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X