For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிதான் உல்லாசி - நான் பற்றற்ற சன்னியாசி: ஜெ.

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: என் மீது அவதூறு குற்றத்தை சாட்டியிருக்கும் முதல்வர் கருணாநிதிதான் உண்மையில் உல்லாசி. நான் பற்றற்ற சன்னியாசி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர்கள் குறித்து நான் வினவிய வினாக்களுக்கு பதில் அளிக்காமல், தன்னைத்தானே உழைப்பாளி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.

என்னுடைய புகழுக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில், என் மீது சில அவதூறு குற்றச்சாட்டுக்களை கருணாநிதி சுமத்தியுள்ளார். கருணாநிதியின் கடிதத்தில் எள்ளளவும் உண்மை யில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

1991ல் ""அப்போதைய'' பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை வரவேற்க அதிமுக சார்பில் யாரும் சென்னை விமான நிலையத்திற்குப் போகவில்லை என்றும், எனவே ராஜீவ் காந்தியின் படுகொலை அதிமுகவின ருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இல்லை என்பதை முதலில் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 1991ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அதிமுக காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பொதுக்கூட்டம் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும், ராஜீவ்காந்தியும் கலந்து கொண்டோம்.

அதற்கு முன்னதாக ராஜீவ் காந்தியை நானே நேரில் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றேன். பின்னர் அகில இந்திய அளவில் ராஜீவ்காந்தியும், தமிழகத்தில் நானும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். வேறு எந்தக் கூட்டத்திலும் நானும், ராஜீவ்காந்தியும் கலந்து கொள்வதாக திட்டம் ஏதும் இல்லை.

ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மரகதம் சந்திரசேகரின் வற்புறுத்தலின் பேரில் 21.5.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தி கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் தான் ராஜீவ்காந்தி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் குறித்து எந்தவிதமான தகவலும் முன்கூட்டி எங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை. இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்றபோது நான் பர்கூரில் ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன்.

இரண்டாவதாக, வெளிநாடுகளுக்கு ராணுவ உதவிகள் அளிப்பது குறித்து மாநில அரசுகளைக் கலந்து கொண்டோ, மத்திய அமைச்சர்கள் அனைவரையும் கலந்துகொண்டோ செய்யப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

கருணாநிதிக்கு எதுவும் விளங்கவில்லை..

மூன்றாவதாக, நான் முதலமைச்சராக இருந்தபோது தான் இலங்கைக்கு மத்திய அரசு மூலம் ராணுவ உதவிகள் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே கருணாநிதிக்கு எதுவும் விளங்கவில்லை என்பது நன்றாகத் தெளிவாகிறது.

நவீன ஆயுதங்கள் வழங்குதல், ராணுவப் பயிற்சி எல்லாம் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகத்தான் நிகழ்ந்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், தமிழ்நாட்டில் நான் முதலமைச்சராக இருந்தபோதும், மத்திய அரசில் அங்கம் வகித்தது திமுக தான். எனவே, அதற்கும் கருணாநிதி தான் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அடுத்ததாக, நான் கோடநாடு, சிறுதாவூர், பையனூர், ஐதராபாத் ஆகிய இடங்களுக்குச் சென்று ஓய்வெடுப்பதாகக் கூறியிருக்கிறார் கருணாநிதி.

பையனூர் போய் பல வருடங்களாகி விட்டன..

நான் பையனூர், ஹைதராபாத் ஆகிய இடங்களுக்குச் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. கோடநாடு, சிறுதாவூர் ஆகிய இடங்களுக்கு நான் சென்றாலும், அங்கு கட்சியினரை சந்தித்துக்கொண்டும், கட்சிப் பணிகளை கவனித்துக் கொண்டும், மைனாரிட்டி திமுக அரசின் மக்கள் விரோதப் பணிகளை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும்தான் இருந்தேனே தவிர, ஓய்வு எடுப்பதற்காக நான் அங்கு செல்லவில்லை என்பதை சுட்டிக் காட்ட விழைகிறேன்.

ஆனால், முதலமைச்சராகப் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, மக்கள் நலப்பணிகளில் நாட்டம் செலுத்தாமல், மகாபலிபுரத்தில் ஓய்வு, பெங்களூரில் ஓய்வு, மருத்துவமனையில் ஓய்வு, புதுப்புது படங்களை பார்ப்பது, அருவருக்கத்தக்க தன்னுடைய கதைகளை எல்லாம் எப்படி படமாக்கி பணம் சம்பாதிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, குறுந்தகடு வெளியீட்டு விழா என்று உல்லாசமாக நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்.

எனது ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. தரமான மின்சாரம் தடங்கலின்றி வழங்கப்பட்டது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதிலிருந்தே உழைப்பாளி யார்? உல்லாசி யார்? என்பது தெள்ளத் தெளிவாகிறது.

எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு, அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 21 வருட காலமாக நாட்டு நலன், மக்கள் நலன், கட்சிப் பணி ஆகியவற்றில் முழுக்கவனம் செலுத்தி, ஒரு பற்றற்ற சன்னியாசி போல் நான் வாழ்ந்து வருகிறேன்.

இவ்வாறு தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி குறை கூற, உல்லாச உலகத்தில் உலா வந்துகொண்டிருக்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் அறவே கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X