ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி-ரிலையன்ஸ் பெட்ரோலியம் இணைகின்றன

இந்த இரு நிறுவனங்களின் போர்டும் தனித்தனியாக மார்ச் 2 ம் தேதி அன்று கூடி இது குறித்து முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸில் தனது பங்குகள் அளவை மேலும் அதிகரிக்க முகேஷ் விரும்பியதன் விளைவே இந்த இணைப்பு.
ஆரம்பத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமாக, ரிலையன்ஸ் பெட்ரோலியம் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று இருந்தது. இது 1990களில் ஆரம்பிக்கப்பட்டது. 1995-ல் ரிலையன்ஸ் பாலிப்ரொப்லின் மற்றும் ரிலையன்ஸ் பாலி எத்திலீன் லிமிடெட் ஆகிய ரிலையன்ஸின் துணை நிறுவனங்கள் இரண்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் இணைந்தன.
இந்த இணைப்பின் போது ஒவ்வொரு 100 ரிலையன்ஸ் பாலிப்ரொப்லின் பங்குக்கும் 30 ரிலையன்ஸ் பங்குகள் தரப்பட்டன.
அதேபோல ஒவ்வொரு 100 ரிலையன்ஸ் பாலி எத்திலீன் பங்குகள் வைத்திருந்தோருக்கும் அவற்றுக்கு பதில் 25 ரிலையன்ஸ் பங்குகள் தரப்பட்டன.
இதனால் இணைப்புக்குப் பின்னர் ரிலையன்ஸில் புரமோட்டர்களின் பங்கு விகிதம் 23 லிருந்து 33 சதவிகிதமாக உயர்ந்தது.
பின்னர் ரிலையன்ஸ் பெட்ரோலியம் (RPL) நிறுவனமும் 2002-ல் இணைந்தது (இப்போதுள்ள ரிலையன்ஸ் பெட்ரோலியம் அல்ல இது).
இந்த இணைப்பின் போது ஒவ்வொரு 11 ரிலையன்ஸ் பெட்ரோலிய (RPL) பங்குகளுக்கும் ஒரு ரிலையன்ஸ் (RIL) பங்கு தரப்பட்டது. இன்னொருபக்கம் RIL-ன் 12.2 சதவிகிதம் பங்குகள் அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் ஹோல்டிங் (RIHL) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதனால் புரமோட்டர்களின் கையிலிருந்து பங்குகளின் அளவு 44 லிருந்து 34 சதவிகிதமாகக் குறைந்தது.
பின்னர் இந்த RHIL மற்றும் ரிலையன்ஸ் துணை நிறுவனங்கள் வசமிருந்த 12.2 சதவிகித ரிலையன்ஸ் பங்குகள் ஒரு ட்ரஸ்டுக்கு மாற்றப்பட்டன. ஆனால் பின்னர் ஐபிசிஎல் இணைப்பு காரணமாக இந்த அளவு 6.9 சதவிகிதமாகக் குறைந்தது.
இப்போது RIL-ல் தங்கள் முதலீட்டை 50 சதவிகிதமாக அதிகரிக்க விரும்பினர் புரமோட்டர்கள். இப்போதுள்ள நிலவரப்படி ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் 1 பங்குக்கு 15 அல்லது 16 ரிலையன்ஸ் பெட்ரோலியம் பங்குகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால் இணைப்புக்குப் பின் புரமோட்டர்கள் பங்கு 70.38 சதவிகிதமாகிவிடும்.
மேலும் கூடுதல் பங்குகளை ஏற்கெனவே உள்ள ட்ரஸ்டுக்கு மாற்றுவதன் மூலம் அதன் அளவை 17 சதவிகிதமாக உயர்த்திக் கொள்ளலாம். அதாவது இதுவும் புரமோட்டர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ஆக ரிலையன்ஸ் நிறுவன மொத்த முதலீடும் ரிலையன்ஸ் புரமோட்டர்களின் கைக்குள் வந்துவிடும் இந்த இணைப்பால்.
சந்தை மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் இந்த இணைப்பு மூலம் ரிலையன்ஸின் சந்தை முதலீட்டு மதிப்பு ரூ.2,33,000 கோடியாக உயர்ந்துவிடும். இது என்டிபிசியின் மூலதனத்தைவிட 35 சதவிகிதம் அதிகம். உலகில் அதிக லாபம் சம்பாதிக்கும் 50 நிறுவனங்களுள் ரிலையன்ஸும் ஒன்றாக மாறும்.
பொருளாதாரத் தடுமாற்றம் அதிகரித்துள்ள சூழலில் பாதுகாப்பாக 'விளையாட' நினைக்கிறார் போலிருக்கிறது முகேஷ்.












Click it and Unblock the Notifications