For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் வி.சிறுத்தைகள் வேட்பாளர் மீது ரூ. 171 கோடி மோசடி-சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

Velayutham
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் மடிப்பாக்கம் வேலாயுதம் மீது ரூ. 171 கோடி மோசடிப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் காரணமாக வேலாயுதம் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ராகிந்தோ டெவலப்பர் என்ற கட்டுமான நிறுவனம் சார்பில் வெங்கட்ராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

மடிப்பாக்கம் எஸ்.பி.வேலாயுதம் மற்றும் குமார், சஞ்சை பிள்ளை, சுந்தர் சீனிவாசன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருகிறார்கள். தங்களிடம் நிறைய சொத்துக்கள் இருப்பதாகவும், சொத்துக்களுக்கு பவர் ஆப் அட்டர்னி' இருப்பதாகவும் தெரிவித்தனர்.

வேலாயுதத்தின் மருமகன் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வருகிறார். அவரது சகோதரர் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்து வருகிறார். இதனால் தனது ரியல் எஸ்டேட் தொழிலை வேலாயுதம் தடையின்றி நடத்தி வருகிறார்.

எங்கள் நிர்வாக இயக்குனர் பிரசாத்கொனேரு கோயம்பேடு போன்ற பல்வேறு இடங்களில் நிலத்தை வாங்குவதற்காக பல்வேறு கட்டங்களில் வேலாயுதம் மூலம் மொத்தம் ரூ.171 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரத்து 11-ஐ முன் பணமாக கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான் வேலாயுதம் வசம் எந்த சொத்தும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து கொடுத்த முன்பணத்தைத் திரும்பத் தருமாறு பிரசாத் கொனேரு கோரினார்.

இதையடுத்து பல்வேறு காசோலைகளை வேலாயுதம் தந்தார். அதில் ஒரு காசோலைக்கு மட்டும் பணம் கிடைத்தது. 2 காசோலைகளில் அவரது கையெழுத்து சரியில்லை என்று கூறி திரும்பி வந்துவிட்டது. 2 காசோலைக்கு பணத்தை தருவதை நிறுத்தி வைக்கும்படி ஸ்டாப் பேமெண்ட்' கொடுத்துவிட்டார் வேலாயுதம். இதையடுத்து அவர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தோம்.

மேலும், ரூ.171 கோடியை மோசடி செய்துவிட்டதாக வேலாயுதம் உள்பட 4 பேர் மீதும் 14.2.2009 அன்று அபிராமபுரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. வேலாயுதத்தின் உறவினர்களான உயர் போலீஸ் அதிகாரிகளின் நிலை குறித்தும் அந்த புகாரில் தெரிவித்திருந்தோம். நடவடிக்கை எடுக்கப்படாததால் கடந்த மாதம் 23-ந் தேதி மீண்டும் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கொடுத்த புகார் மீது சி.பி.ஐ. விசாரணை அல்லது சி.பி.சி.ஐ.டி.யின் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதுகுறித்து நீதிபதி அளித்த உத்தரவில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அவசியமில்லை என்றும், புகார் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்தார். இதுபோன்ற புகார்களை பெட்டிஷன் விசாரணை' நடத்துவது தவறு என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது.

துணை போலீஸ் கமிஷனர் சுதந்திரமாக விசாரணை நடத்தாமல் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த விசாரணையை இதுபோன்று தொடர்ந்து அனுமதித்தால் தவறான முடிவுதான் ஏற்படும். இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளது என்பதில் எந்த தயக்கமும் இல்லை. அரசு வக்கீலே குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் போதுமான ஆதாரங்களை திரட்டியிருக்கலாம். முறையாக விசாரணை நடத்தாததால் புகார் கொடுத்தவருக்கு அநீதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஐகோர்ட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுகிறது. தகுதியான வழக்கை வேறு போலீஸ் பிரிவுக்கு மாற்றுவதாக இருந்தால் மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது.

மாநில அரசு பாரபட்சமாக செயல்பட்டுள்ளது..

இந்த வழக்கை பொறுத்தவரையில் மாநில அரசின் எந்திரம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. ஆதாரங்களை பார்க்கும்போது ஐ.பி.எஸ். அதிகாரிகள், உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்குப்பதிவு செய்ய தயங்கி உள்ளனர்.

வழக்குப்பதிவு செய்தபோதிலும் பிரதான குற்றவாளியை விசாரிக்க கூட இல்லை. ஆகவே, இதுபோன்ற அரிதான, விதிவிலக்கான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே, சி.பி.ஐ. இணை இயக்குனரிடம் இந்த புகார் தொடர்பான ஆவணங்களை போலீஸ் கமிஷனர் ஒப்படைக்க வேண்டும்.

பெரும் தொகை சம்பந்தப்பட்டிருப்பதால் சி.பி.ஐ. இயக்குனர் ஐ.ஜி. ஒருவரை நியமித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த வேண்டும். இதன்பிறகு போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துள்ள அதிகாரியை நியமித்து விசாரிக்கலாம். மாநில போலீசார் மீதான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. தீவிரமாக கணக்கில் எடுத்து சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை' என்ற கொள்கை அடிப்படையில் முறையாக விசாரிக்க வேண்டும்.

இந்த உத்தரவு நகலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குனருக்கு இணையதளம் மூலமாகவோ, விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். கோர்ட்டில் தாக்கல் செய்த டைரியையும், உத்தரவு நகலையும் சென்னையில் உள்ள சி.பி.ஐ. இணை இயக்குனருக்கு சீல் வைத்த கவரில் வைத்து ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

பெரும் நிதி மோசடியில் சிக்கியுள்ளதால் வேட்பாளர் வேலாயுதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாற்றக் கூடும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X