For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் வேட்பாளரை மாற்றிய ஜெ.-மத்திய சென்னையில் எஸ்.எஸ்.சந்திரன் போய் ஜின்னா

By Staff
Google Oneindia Tamil News

Muhammad Ali Jinnah
சென்னை: மீண்டும் ஒரு முறை வேட்பாளர் மாற்றத்தை செய்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. மத்திய சென்னையில் எஸ்.எஸ்.சந்திரனுக்குப் பதில் முகம்மது அலி ஜின்னா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மேற்கொள்ளும் 4வது வேட்பாளர் மாற்றம் இது.

முதலில் திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளரான ராஜனையும், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் மருதை ராஜையும் மாற்றினார்.

பின்னர் மீண்டும் திருவள்ளூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இன்பராஜை மாற்றி விட்டு டாக்டர் வேணுகோபால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதேபோல விழுப்புரம் தொகுதி வேட்பாளரும் மாற்றப்பட்டார். தற்போது மத்திய சென்னை வேட்பாளரும் மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய சென்னையில் வேட்பாளராக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நிறுத்தப்பட்டார். பலம் வாய்ந்த திமுகவின் தயாநிதி மாறனை எதிர்த்து எஸ்.எஸ்.சந்திரனை நிறுத்தியது அதிமுக வட்டாரத்திலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதேசமயம், எஸ்.எஸ்.சந்திரன், தயாநிதி மாறனை எதிர்த்துப் போட்டியிட தயங்குவதாகவும் பேச்சு எழுந்தது. இதையடுத்து மதிமுகவுக்கு வழங்கப்பட்ட ஈரோட்டை திரும்பத் தருமாறும், மத்திய சென்னையில் போட்டியிடுமாறும் அக்கட்சியை ஜெயலலிதா கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இந் நிலையில் நேற்று காலை தான் எஸ்.எஸ்.சந்திரன் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். பல்வேறு இடங்களுக்கும் சென்று அவர் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பினரிடம் வாக்கு சேகரித்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள தலைமை ஹாஜியை சந்தித்து ஆதரவு கோர முடிவு செய்திருந்தார்.

அவரை சந்திக்கச் செல்லும் வழியில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார் எஸ்.எஸ்.சந்திரன்.
அப்போது அவருக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது.

போய்விட்டு அரை மணி நேரத்தில் திரும்பி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றவர் வரவேயில்லை. ஆனால், போயஸ் கார்டனில் இருந்து அவர் மாற்றப்பட்ட அறிவிப்பு தான் வந்தது.

எஸ்எஸ்சுக்கு நெஞ்சு வலி.. ஜெ சொல்கிறார்..:

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிமுக ஆட்சிமன்றக்குழு மறுபரிசீலனை செய்து மே 13 அன்று நடைபெற உள்ள தேர்தலில் மத்திய சென்னை தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எஸ்.எஸ்.சந்திரனுக்கு பதிலாக எஸ்.எம்.கே.முகமதுஅலி ஜின்னா (தென்சென்னை மாவட்ட அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பி.எஸ்சி., பி.எல். படித்தவர் ஆவார். அதிமுகவின் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக இவரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் வாக்குகளைக் கவர..

அதிமுக வேட்பாளர் பட்டியலிலும் அதிமுக கூட்டணியிலும் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத நிலை இருந்தது. இதற்கிடையே பாஜக-ஜெயலலிதா பேச்சு நடந்து வருவதாக அத்வானி கூறியிருந்தார்.

இதையடுத்து சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவர முஸ்லீம் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்த ஜெயலலிதா ஜின்னாவை நிறுத்தியுள்ளார்.

மத்திய சென்னை தொகுதியில் கிட்டத்தட்ட 3 லட்சம் முஸ்லீம் வாக்குகள் உள்ளன.

இந் நிலையில் முஸ்லீம் வாக்குகளைக் கவரும் வகையிலும், இதன்மூலம் தயாநிதி மாறனுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையிலும், முஸ்லீம்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நல்ல பெயரை தட்டிச் செல்லும் வகையிலுமே ஜின்னாவை ஜெயலலிதா நிறுத்த முடிவு செய்ததாகத் தெரிகிறது.

தற்போது முக்கிய கட்சிகளில் அதிமுகவில் மட்டுமே முஸ்லீம் வேட்பாளர் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X