திருச்சியில் மன்சூருக்கு எதிராக மனைவியும் போட்டி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மாற்று வேட்பாளராக தனது மனைவியை வேட்பு மனு தாக்கல் செய்யச் சொன்னார் நடிகர் மன்சூர் அலிகான். ஆனால் சுயேச்சைகளுக்கு எல்லாம் மாற்று வேட்பாளரை நிறுத்த முடியாது என தேர்தல் அதிகாரிகள் கூறி விட்டதால் இப்போது மன்சூரை எதிர்த்து அவரது மனைவியும் போட்டியிடும் நிலை ஏற்பட்டு விட்டது.

மன்சூர் அலிகான் என்றாலே மகா குழப்பம் என்றாகி விட்டது. திருச்சி தொகுதியில் லதிமுக சார்பில் போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோதே குழப்பமாகி திருப்பி அனுப்பப்பட்டார் மன்சூர். பின்னர் வேட்பு மனுவில் இருந்த குழப்பங்களை சரி செய்து மனு தாக்கல் செய்தார்.

பின்னர் பிரசாரத்தின்போதும் சர்ச்சையில் சிக்கினார். ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான விளம்பர தட்டியை பிரசார வாகனத்தில் வைத்து இருந்ததால் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.

வேட்பு மனு தாக்கலின்போது தனது மனைவி பேபி ஹமீதா பானுவையும் மனு தாக்கல் செய்ய வைத்தார். அவரும் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.

லட்சிய திமுகவை அதன் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கட்சியாக கூறிக் கொண்டாலும் கூட இது சுயேச்சையாகத்தான் தேர்தல் ஆணையத்தால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மன்சூரும் ஒரு சுயேச்சை வேட்பாளர்தான்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் அதிகாப்பூர்வ வேட்பாளருடன் மாற்று வேட்பாளர்களும் மனுத் தாக்கல் செய்வார்கள். அதிகாரப்பூர்வ வேட்பாளரின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதும், மாற்று வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்று விடுவார்கள்.

ஆனால் இந்த வசதி, சுயேச்சைகளுக்கு கிடையாது. இந்த அடிப்படை கூட தெரியாமல் தனது மனைவியை மாற்று வேட்பாளராக கருதி நிற்க வைத்தார் மன்சூர். இந்த நம்பிக்கையில், அவருடைய மனுவையும் வாபஸ் பெற வைக்கவில்லை.

இந்த நிலையில் மனு வாபஸ் முடிந்த போது, தனது மனைவியின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டார் மன்சூர்.

ஏங்க, மாற்று வேட்பாளரான எனது மனைவியின் வேட்புமனுவை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்று தேர்தல் அதிகாரியிடம் கேட்டார். அதற்கு தேர்தல் அதிகாரி, சார், சுயேச்சை வேட்பாளருக்கு மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே அவரும் ஒரு சுயேச்சை வேட்பாளர் என்ற அடிப்படையில் அவருக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

இதனால் மன்சூர் அலிகானை எதிர்த்து அவரது மனைவியும் இப்போது ஒரு வேட்பாளராக போட்டியிடுகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...