For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே தினம்-கருணாநிதி, ஜெ, வைகோ வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

Karunandhi
சென்னை: உழைப்பாளர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

உழைக்கும் தொழிலாளர் சமுதாயத்தின் உரிமையை உலகுக்கு உணர்த்திடும் மே தினம் உலக நாடுகளால் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா திராவிட இனமே பாட்டாளி இனம்; திராவிடர் கலாச்சாரம் உழைத்து வாழ்வதையே வலியுறுத்துகிறது என்று கூறி மே தின விழாவை உரிமையுடனும், உவகையுடனும் கொண்டாட வேண்டியதில் நமக்குள்ள உரிமையை வலியுறுத்தினார்.

அவரது கொள்கை வழிநி ன்று தொண்டாற்றிடும் இந்த அரசு தொழிலாளர் நலன்களைக் காக்கும் உணர்வோடு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி தொழிலாளர் உரிமைகளைக் பேணிக்காப்பதில் எப்பொழுதும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியத் திருநாட்டிலேயே முதன் முதலாக மே தினத்திற்கு ஊதியத்துடன் அரசு விடுமுறை வழங்கி தொழிலாளர் சமுதாயம் மே தின விழாவை சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்திட வழிவகை செய்தது.

கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட 20 சதவீத போனஸ், ஊக்கத் தொகை முதலிய பல்வேறு சலுகைகள் மீண்டும் வழங்கப்படுகின்றன.

தொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ருபாய்க்கு மலிவு விலையில் மாதந்தோறும் மளிகைப் பொருள்கள் எனப் பல்வேறு உதவிகளை இந்த அரசு வழங்கி, நாளும் உழைத்திடும் ஏழை, எளிய தொழிலாளர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும் எனத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த உணர்வோடு தமிழகத்தில் வாழும் தொழிலாளர் சமுதாய மக்கள் அனை வருக்கும் எனது மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். வாழ்க தொழிலாளர் சமுதாயம் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா...

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,

தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரீகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய தொழிலாளர் கள், எட்டு மணி நேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே தொழிலாளர் தினமாக மேதினி எங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த மே தின நன்னாளில் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளர்கள் நலன் காக்கும் பொருட்டு எனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிலாளர்கள் நலச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இருப்பினும், தற்போது தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கூட நிர்வாகத்தினரால் மறுக்கப்படுகின்றது.

உழைப்பாளர் தினத்தன்றும் உழைத்தால் தான் உணவு கிடைக்கும் என்ற இழிநிலை மாற வேண்டும். உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்து அதற்கான சூழ்நிலையை உருவாக்க இந்த நன்னாளில் சபதம் ஏற்போம் என்று கூறியுள்ளார்.

வைகோ...

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள செய்தியில்,

உழைக்கும் மக்களை ஏய்த்துப்பிழைக்கும் வர்க்கம் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஏவிவிட்ட அடக்குமுறை அஸ்திரங்கள் அனைத்தையும் தகர்த் தெறிந்து, தொழிலாளர்கள் தூக்கிப் பிடித்த பதாகையைத் தாங்கள் சிந்திய ரத்தத்தால் சிவப்பாக்கி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் வெற்றியை பொறித்த நாள் இந்நாள்.

சிகாகோ நகரில் வைக்கோல் சந்தை சதுக்கத்தில் திரண்ட தொழிலாளர்கள் மீது ஏவிவிடப்பட்ட அடக்கு முறை கொடுமைகளை புறங்கண்டு, உரங்கொண்டு போராடிய வீர வரலாற்றை நினைவு கூர்ந்திடும் நாள் இந்நாள்.

கண்ணீரும், வியர்வையும், செந்நீரும் சிந்திப் போராடும் வர்க்கம் விடுதலையை வென்றெடுக்கும் என்பதற்கு அடையாள மாகத் திகழும் இந்த மே நாளில், ஈழத் தமிழர் விடுதலைக்காக சிந்தும் கண்ணீரும், ரத்தமும் வீண் போகாது என்றும், அவ்வுரிமை போராட்டத்தில் உலக தமிழர்கள் மட்டுமல்லாமல் உழைக்கும் வர்க்கமும் தங்கள் பங்களிப்பை தந்திட வேண்டும் என்று வேண்டிச் சூளுரைத்து மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X