For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வருடமாக சிறையில் அடைக்கப்பட்ட மலேசிய தமிழர் தலைவர்கள் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

Vasantha Kumar with family
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியினால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்ப்டிருந்த தமிழர் தலைவர்களான வசந்தகுமார், மனோகரன் உள்ளிட்ட ஐந்து ஹின்ட்ராப் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி மலேசியாவின் குடிமக்களான இந்திய வம்சாவளியினருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சம உரிமை கோரி தலைநகர் கோலாலம்பூரில், இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹின்ட்ராப்) சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம், கண்டனப் பேரணி நடந்தது.

இந்தப் போராட்டத்தை அப்போதைய பிரதமர் படாவியின் உத்தரவின் பேரில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்து, ஒடுக்கினர்.

மேலும் ஹின்ட்ராப் தலைவர்களான மனோகரன், உதயக்குமார், வசந்தகுமார், கணபதிராவ், கங்காதரன் ஆகியோரை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி பலமுறை தமிழர்கள் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் படாவி கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் புதிய பிரதமராக அப்துல் ரஸ்ஸாக் பதவியேற்றதைத் தொடர்ந்து ஐந்து தலைவர்களும் விடுதலையாகும் நம்பிக்கை எழுந்தது.

அதற்கேற்ப இந்த ஐந்து தமிழர்கள் உள்ளிட்ட 13 பேரை விடுவிக்க ரஸ்ஸாக் உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழர் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட 13 பேரில் இந்தியாவைச் சேர்ந்த சுந்தரராஜ் விஜய் என்பவரும் அடங்குவார்.

விடுதலை செய்ய்பட்ட ஹின்ட்ராப் சட்ட ஆலோசகர் உதயக்குமாரிடம், போலீஸார், சில நிபந்தனைகளை விதித்து அவற்றில் கையெழுத்திடுமாறு கூறினர். ஆனால் தனது இரு காதுகளையும் பொத்திக் கொண்ட உதயக்குமார், எந்த நிபந்தனைக்கும் ஒத்துக் கொள்ள மாட்டேன். வேண்டுமானால் மீண்டும் என்னை சிறையிலேயே அடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயக்குமார் பேசுகையில், எனது மனைவி இந்திரா தேவி, வக்கீல்கள், எனது ஆதராளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை சட்டவிரோதமாக கைது செய்தது மலேசிய அரசு. எனவே அரசுக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன்.

சிறையில் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். அதில் எனது இடது காலில் காயம் ஏற்பட்டது.

ஹின்ட்ராப் சார்பில் எங்களது போராட்டம் தொடரும். இருப்பினும் எப்படிப்பட்ட போராட்டங்களை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.

விடுதலை செய்யப்பட்ட தமிழர் தலைவர்களில் ஒருவரான மனோகரன், கோட்டா ஆலம்ஷா சட்டசபை உறுப்பினர் ஆவார்.

இன்னொருவரான வசந்தகுமாரின் தாயார் மனோன்மணி, தனது மகன் விடுதலை செய்யப்பட்டிருப்பது, அன்னையர் தின பரிசாக தனக்கு அமைந்துள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X