For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாருடைய மிரட்டலுக்கும் தேமுதிகவினர் அஞ்சக் கூடாது - விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தேமுதிகவினர் தேர்தல் நாளில் பணியாற்ற வேண்டும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:

2 மாத காலமாக சென்னை முதல் குமரி வரை தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் நமது கழகம் வெற்றி பெற மக்களை சந்தித்த வண்ணம் இருந்தேன். வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு எனக்கு ஊக்கத்தை கொடுத்தனர்.

எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் கட்சி தொண்டர்கள் எனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக ஆக்கியதோடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தினர்.

மத்திய அரசின் மூலம் காலம்காலமாக தீர்க்கப்படாத மக்களின் பிரச்சினைகளை என்னால் மக்களின் கவனத்திற்கு கொண்டு வர முடிந்தது.

குறிப்பாக காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்று பிரச்சினை, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தல் போன்ற பிரச்சினைகளில் நமக்கு இழைக்கப்பட்டு இருக்கும் அநீதியை மத்தியில் எந்த அரசும் துடைத்த பாடு இல்லை.

நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று மத்திய அரசில் அங்கம் வகித்தும் ஆதரவு தந்தும் செல்வாக்காக இருந்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிஞ்சிற்றும் பயனில்லை. இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுக்காக போராட தே.மு.தி.க. தவிர வேறு யாரும் இல்லை.

இலங்கையில் இனப்பேரழிவை தடுக்க இந்திய அரசு முன்வரவில்லை. போரை நிறுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஐ.நா.வை வற்புறுத்த வேண்டும் என்ற நமது வேண்டுகோளும் ஏற்கப்படவில்லை. இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும். அதன் பின்னரே தமிழ் ஈழம் தேவை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதற்கான தேர்தலை சந்திக்கிறது. தெளிவான சிந்தனை, தீர்க்கமான முடிவு, ஓயாத உழைப்பு ஆகியவையே நம்மிடம் உள்ள மூலதனம்.

நம்மை எதிர்த்து நிற்போர் பணம், சாதி, அதிகாரம், பலாத்காரம் ஆகிய ஆயுதங்களை கையாண்டு தேர்தல் களத்தில் நிற்கின்றனர். அவர்களது பணநாயகத்தை தொண்டர்கள் சிந்தும் வியர்வை துளிகளும், உழைப்பும் முறியடித்து ஜனநாயகத்தை மலரச்செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

எனவே எதையும் பொருட்படுத்தாது, யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தேர்தல் நாளன்று தேனீக்களை போல் சுறுசுறுப்போடு பணியாற்றி வாக்காளர்களை வாக்குசாவடிக்கு வந்து நமது முரசு சின்னத்தில் வாக்களிக்க செய்வது தலையாய கடமையாகும்.

இன்று முதல் வாக்குப்பதிவு முடியும் வரை, அயராது பாடுபட்டு, விழிப்புடன் இருந்து வெற்றி தேடித் தாருங்கள் என்று தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X