For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹால் டிக்கெட்-அலைக்கழிக்கும் சென்னை பல்கலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக் கல்வி நிறுவனத்தின் கவனக்குறைவால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னும் ஹால் டிக்கெட்டே வரப் பெறாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஹால் டிக்கெட் வரப் பெறாத மாணவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்திய டிடி ரசீதை காட்டி தேர்வை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனராம்.

அந்த ரசீதை போய் பல்கலைக்கழகத்தில் காட்டினால், அதன் பின்னால் ஹால் டிக்கெட் வரவில்லை என்று சீல் அடித்துக் கொடுக்கின்றனராம்.

சென்னை பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் பட்டப் படிப்புகளுக்கான மே 2009 பருவத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. மொத்தம் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

சென்னையில் 36 மையங்கள் உட்பட மாநிலத்தில் 64 மையங்கள், மற்ற மாநிலங்களில் 37 மையங்கள் என மொத்தம் 101 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு மையங்களில் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல மாணவர்களுக்கு நேற்று வரை ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் நேரிலும், தொலைபேசியிலும் ஏராளமான மாணவர்கள் புகார் செய்தனர்.

ஆனால் அதுகுறித்து கவலையேப் படாத பல்கலைக்கழக நிர்வாகம், அப்படியா, அப்படியானால், விதி 8-ன் படி தேர்வு எழுதச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.

நேரில் புகார் தெரிவித்தவர்களில் சிலருக்கு, தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான டி.டி. ரசீதில், தொலைநிலை கல்வியின் முத்திரை போட்டு, "அவரை அனுமதியுங்கள்' என்று எழுதிக் கொடுக்கப்பட்டது.

அது என்ன விதி 8

ஒரு மாணவர் தேர்வுக்கான விண்ணப்பத்தை பல்கலைக் ழகத்தில் சமர்ப்பித்து, ஹால் டிக்கெட் கிடைக்காத சூழலில், அவரிடம் தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரம் இருக்கும்போது, தேர்வு எழுத அவரை அனுமதிப்பதே விதி 8 ஆகும்.

ஆனால் இதில் ஒரு பெரும் சிக்கல் உள்ளதாக பல்கலைக்கழகத் தரப்பிலேயே கூறுகிறார்கள். அதாவது விதி 8ன் கீழ் கடந்த ஆண்டு தேர்வு எழுதிய பலருக்கு தேர்வு முடிவே வெளியாகவில்லையாம். சம்பந்தப்பட்ட மாணவர்கள் நேரில் போய் புகார் செய்து, கடுமையாக மோதிய பின்னர்தான் முடிவை அறிவித்தார்களாம்.

இதனால் ரசீதைக் காட்டி தேர்வு எழுதுவதால் தங்களுக்கும் அதுபோல பாதிப்பு வருமோ என மாணவர்கள் பெரும் குமைச்சலில் உள்ளனர்.

இந்த லட்சணத்தில், சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை (ஜூன் 13) குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், தொலைக் கல்வியில் பாடப் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்காமை, அடையாள அட்டை வராதது, மதிப்பெண் சான்றிதழ் உரிய நேரத்தில் வரப் பெறாமல் இருத்தல், தேர்வு அனுமதிச் சீட்டு உரிய நேரத்தில் தேர்வு மையத்தில் கிடைக்காமல் இருத்தல் எனப் பல புகார்களை மாணவர்கள் கூறலாமாம்.

ஆனால் நாளை நடைபெறப் போகும் தேர்வுக்கு நேற்று வரை ஹால் டிக்கெட்டே தராத நிலையில் இந்தக் கூட்டத்தை நடத்துவது பெரும் கேலிக்குரியதாக மாறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X