எம்பிபிஎஸ்-அனைத்து ஊனமுற்றோருக்கும் இடம்
சென்னை: எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள 35 ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கும் நிச்சயம் மருத்துவப் படிப்பு சீட் கிடைத்துவிடும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் ஊனமுற்றோர் பிரிவுக்கு 45 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எனவே இந்த ஆண்டு ஊனமுற்றோர் பிரிவுக்கென வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள 35 மாணவர்களும் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துவிடும்.
உடல் ஊனமுற்றோர் பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 191.25ல் தொடங்கி, கடைசியாக உள்ள 35வது மாணவியின் கட்-ஆப் மதிப்பெண் 104.50 என்று உள்ளது.
இந்த சிறப்புப் பிரிவினருக்கு வரும் 6ம் தேதி கவுன்சலிங் நடைபெறுகிறது. கவுன்சலிங்கின்போது மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவால் நியமிக்கப்படும் மருத்துவ நிபுணர் குழு, மாணவரின் ஊன விகிதத்தை உறுதி செய்த பிறகே, எம்பிபிஎஸ் படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.
அதே போல முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு மொத்தம் 3 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
சுதந்திரப் போராட்ட வீரர் வாரிசுகளுக்கும் 3 இடங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆண்டு இந்த இடங்களுக்கு தகுதியான மாணவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லையாம்.
தர்மபுரி கல்லூரியில் ஆய்வு தொடக்கம்:
இந் நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில், இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் நேற்று இறுதிக் கட்ட ஆய்வை தொடங்கினர்.
கடந்த 3 முறை உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகளை சுட்டிக்காட்டி அங்கீகாரம் வழங்கவில்லை. தற்போது கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு திருப்தியளிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளன.
ஒரு வாரம் நடைபெறும் இக்குழுவின் ஆய்வுக்குப் பிறகு இந்தக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கிடைக்குமா இல்லையா என்று தெரியவரும்.
இந்தக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.