• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரயில்வே பட்ஜெட்: ஏழைகளுக்கானது -கருணாநிதி, வாக்கு வங்கியை மனதில் கொண்டது - ஜெ.

By Staff
|

Karunanidhi and Jayalalitha
சென்னை: ஏழைகளை மனதில் கொண்டு ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் மமதா பானர்ஜி என்று முதல்வர் கருணாநிதியும், மேற்கு வங்க மாநில தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மமதா பானர்ஜி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட் குறித்து தமிழக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி..

பயணக் கட்டணங்களை உயர்த்தாமல், பயணிகள் நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்திருப்பது பாராட்டக் கூடியது.

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையமாக தரம் உயர்த்தப்படும், தமிழகத்தில் பல ரயில் நிலையங்கள் முன்உதாரண ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் புதிய மருத்துவக் கல்லூரி, மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்கள்- உணவகங்கள், நூல்நிலையங்கள், தங்கும் விடுதி போன்ற வசதிகள்.

சென்னையில் இருந்து புதுடெல்லி வரை இடையில் எங்கும் நிற்காத புதிய ரயில், மதுரை வழியாக கன்னியாகுமரி ராமேஸ்வரம் மற்றும் மதுரை சென்னை விரைவு வண்டிகள் அறிமுகம் என ரயில்வே பட்ஜெட் ஏழை எளிய சாமானிய மக்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட். ரயில்வே அமைச்சர் மம்தாவுக்கு என் வாழ்த்துக்கள்.

ஜெயலலிதா..

பட்ஜெட்டில் தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத் திட்டங்களுக்கே அதிக கவனம் கொடுத்துள்ளார் மமதா. இதை பார்க்கும்போது தனது வாக்கு வங்கியைப் பற்றி மட்டுமே அவர் கவலை கொண்டு இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருப்பது புரிகிறது.

அவர் அறிவித்துள்ள அத்தனை முக்கியத் திட்டங்களுமே மேற்கு வங்கத்தின் லால்கர், நந்திகிராம், சிங்கூர் என்றுதான் உள்ளது.

முக்கியத் திட்டங்கள் எதுவும் தென்னிந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்குத் தரப்படவில்லை.

அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சி, விரிவாக்கப் பணிகள், நீண்ட கால ரயில்வே திட்டங்கள் எதற்கும் முன்னுரிமை தரப்படவில்லை.

மேலும் இத்தகைய முக்கியத் துறைகளில் மமதா அறிவித்துள்ள சில திட்டங்களும் கூட வெற்று அலங்காரத் திட்டங்களாகவே உள்ளன.

கடந்த காலத்தில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது பெரும் லாபத்தில் இயங்கியதாக ரயில்வே துறை கூறப்பட்டது. ஆனால் தற்போது அது இல்லை என்று மமதாவே கூறியதைப் பார்க்கும்போது கடந்த காலத்தில் கானல் நீரைக் காட்டி ஏமாற்றியுள்ளார்களோ என்று சந்தேகப்பட வைக்கிறது. அதை மறைக்கும் முயற்சிகள் தற்போது நடக்கின்றனவோ என்றும் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கேரளாவுக்கே அதிக பயன் - ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு 6 ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த புதிய ரயில்களால் அதிகம் பலனடையப் போவது கேரளாதான்.

மமதா மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது மாநிலத்திற்கே அதிக அளவிலான திட்டங்களைக் கொண்டு சென்றுள்ளார்.

இஸ்ஸாத் எனப்படும் மாதம் ரூ. 25 சீசன் டிக்கெட் திட்டத்திற்கு தகுதியானவர்கள் மாதச் சம்பளம் ரூ. 1500 வரை மட்டுமே பெறக் கூடியவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையிலானவர்கள் மிகவம் சொற்பமாகவே இருப்பார்கள். எனவே இந்தத் திட்டத்தால் சொற்பமான அளவிலானாரோ பயன் பெறுவார்கள். எனவே இது வெற்று விளம்பரத் திட்டமாகவே இருக்கப் போகிறது.

கொல்கத்தா மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மட்டும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும்.

முந்தைய பாமக அமைச்சர்களின் முயற்சியால் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களுக்கும், ஆய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கி விரைந்து செயல்படுத்த மமதா பானர்ஜி முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிற்காமல் போனால் பாதிப்புதான் வரும் - பாஜக

பாஜக தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையிலிருந்து டெல்லிக்கு நிற்காமல் போகும் ரயிலால் பயணிகளுக்கு பாதிப்புதான் வரும்.

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் தமிழத்தில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன.

நல்ல உணவு, குடிநீர் போன்றவை எல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டவைதான். அஞ்சலகத்தில் பயணச் சீட்டு, விமானத்தில் உள்ளது போல கழிவரை ஆகியவையும் ஏற்கனவே அறிமுககப்படுத்தப்பட்டவைதான். இவை எல்லாம் அமல்படுத்தப்படுவதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X