For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோயம்பேடு கோவில் நிலம் அபகரிக்கப்படவில்லை-பரிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ''கோயில் கூடாது என்பது அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது'' என்று தனது 27வது வயதில் 1952ம் ஆண்டு வசனம் எழுதியவர் முதல்வர். அவரது ஆட்சியில் கோயில் நிலம் கொள்ளை போக இடம் தரவே மாட்டோம் என்று சட்டசபையில் தெரிவித்தார் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி.

இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோவில் நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதன் மீது விவாதம் நடந்தது. அதிமுக உறுப்பினர் சேகர்பாபு பேசுகையில், கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான இந்துசமய அறநிலையத் துறையின் 3.03 ஏக்கர் நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் இப்படி ஒரு தீர்மானம் சென்னை மாநகராட்சிக்கு வந்தபோது அது ரத்து செய்யப்பட்டது. அதை அப்போது எதிர்த்தவர்கள் இப்போது மாநகராட்சியின் ஆட்சி பொறுப்பில் உள்ளனர். இந்த அனுமதி தனக்கு தெரியாமல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி, 5வது மண்டலத்தின் செயற் பொறியாளர் மீது மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ரூ. 120 கோடிக்கு மேல் மதிப்புள்ள இந்த கோயில் சொத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீதும், இதற்கு அனுமதி தந்த விவகாரத்தில் உள்ளாட்சித் துறை, இந்துசமய அறநிலையத்துறை, சிஎம்டிஏ ஆகியோர் சம்ந்தப்பட்டு இருப்பதால் நீதி விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக் கொண்டு வந்து கோயில் நிலம் அபகரிக்க முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் பேசுகையில், கோயம்பேடு கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர், 3 சென்ட் நிலம் கிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தின் நிலத்திற்கு நடுவில் உள்ளது.

29.1.2003 அன்று இந்த நிலத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதிக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, இப்போதைய சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் சி.வி.மலையன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராயபுரம் மனோ, சைதை ரவி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனடியாக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனை அழைத்துக் கொண்டு அவர்கள் கவர்னரை சந்தித்து முறையிட்டதன் பேரில் தீர்மானம் நிறைவேறாமல் நிறுத்தப்பட்டது. அந்த நிலத்தை கோயிலுக்கு அளித்த உரிமையாளர்கள் இடையே பாகப்பிரிவினை வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

ஒரு கட்டிட வரைபடம் அனுமதி கொடுப்பதற்கு முன்னால் பத்திரங்கள், பட்டா ஆகியவற்றை ஆய்வு செய்து அளிப்பது தான் வழக்கம். இந்த நிலையில் எதையும் பார்க்காமல் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.

பாமக எம்எல்ஏ ஆறுமுகம் பேசுகையில், கடந்த காலத்தில் பிரச்சனை ஏற்படுத்திய இந்த இடத்திற்கு அனுமதி வழங்க மாநகராட்சி ஏன் அவசரம் காட்டியது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன் பேசுகையி்ல், சிஎம்டிஏ அனுமதியை ரத்து செய்வதுடன், நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த நிலத்தை மீண்டும் அறநிலையத் துறைக்கே மீண்டு்ம் கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம் பேசுகையில், கிருஷ்ணா டைல்ஸ் நிறுவனம் அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை அனுபவத்தின் பேரில் ஓசோன் நிறுவனத்திற்கு விற்பனை செய்து உள்ளது. அவர்கள் இப்போது கட்டிடம் கட்ட சிஎம்டிஏவில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது மாநகராட்சி மன்றமும், சிஎம்டிஏவும் எப்படி அனுமதி தந்தது என்பது தான் கேள்வி. இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மதிமுக எம்எல்ஏ திருமலைகுமார் பேசுகையி்ல், அளிக்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்து கோயில் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த சிஎம்டிஏவை தன் பொறுப்பில் வைத்திருக்கும் அமைச்சர் பரிதி இளம்வழுதி,

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடப்பதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த பிரச்சனை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக்கொண்ட சபாநாயகருக்கு நன்றி.

திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்துசமய அறநிலையத் துறையின் 3.03 ஏக்கர் நிலம் சர்வே எண். 227/3, 230/2 கீழ் இருக்கிறது. இதில் நீண்ட காலத்திற்கு முன்னதாகவே உரிமையாளர் மத்திய பொதுப் பணித்துறைக்கு 1.26 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து விட்டார். அப்போது அது தடுத்து நிறுத்தப்படவில்லை.

அதில் மிச்சம் இருப்பது 1.77 ஏக்கர் நிலம் தான். இந்த நிலம் ஓசோன் நிறுவனத்திற்கு சொந்தமான 42.31 ஏக்கர் நிலத்திற்கு அருகில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட இந்த 1.77 ஏக்கர் நிலத்தை தவிர்த்து எஞ்சிய நிலத்தில் கட்டிடம் கட்ட சென்னை முழுமை திட்டம் 2ன் கீழ் சிஎம்டிஏ விதிமுறையின்படியும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வந்ததும் 5வது மண்டல செயற் பொறியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவரும் விதிமுறைப்படியே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். எனவே இந்த அனுமதி உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பிரச்சனைக்கு உட்பட்ட 1.77 ஏக்கர் நிலத்தை தவிர்த்து தான் வழங்கப்பட்டுள்ளது.

''கோயில் கூடாது என்பது அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது'' என்று தனது 27வது வயதில் 1952ம் ஆண்டு வசனம் எழுதியவர் முதல்வர் கருணாநிதி. அவரது ஆட்சியில் கோயில் நிலம் கொள்ளை போக இடம் தரவே மாட்டோம் என்றார் பரிதி இளம்வழுதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X