For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்சம்-2 மதுரை பல்கலை ஊழியர்கள் கைது; ஆபாச புத்தகமும் சி்க்கியது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: அஞ்சல் வழிக் கல்வி மூலம் எம்.எல்.எம். படித்த ஒருவருக்கு மதிப்பெண் பட்டியலைத் தர ரூ. 2000 லஞ்சம் கேட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவருடைய உதவியாளர் ஒருவரும் பெரும் பணத்துடன் சிக்கினார். அவரிடமிருந்து ஆபாசப் புத்தகங்கள், விபச்சாரிகளின் எண்கள் அடங்கிய டைரி ஆகியவையும் சிக்கியதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1987ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. காரணம், பல்கலைக்கழகத்தில் நடந்த மிகப் பெரிய மதிப்பெண் பட்டியல் மோசடி சம்பவம்.

அதற்குப் பிறகு இப்போது பல்கலைக்கழத்தின் பெயரை அசிங்கப்படுத்துவது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சென்னயைச் சேர்ந்த உதயக்குமார் என்பவர் அஞ்சல் வழிக் கல்வி மூலம் எம்.எல்.எம். படித்தார். கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்று படிப்பை முடித்தார்.

இதையடுத்து அஞ்சல் வழிக் கல்வி இயக்குநரக கண்காணிப்பாளர் ராமசாமியை அணுகிய அவர் மதிப்பெண் பட்டியல் கோரி விண்ணப்பித்தார். அதற்கு ராமசாமி, ரூ. 3000 கொடுத்தால் உடனே மதிப்பெண் பட்டியலைத் தருவதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்தார் உதயக்குமார். இருப்பினும் அவரிடம் பேரம் பேசி ரூ. 2000க்கு சம்மதிக்க வைத்தார். அடுத்த நிமிடம் அவர் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

நேற்று மாலை ஐந்தேகால் மணியளவில் பணத்துடன் வந்தார் உதயக்குமார். அதில் ரசாயானக் கலவை தடவப்பட்டிருந்தது.

ராமசாமி கூறியபடி பல்கலைக்கழக நுழைவாயிலில் காத்திருந்தார். மதிப்பெண் பட்டியலுடன் ராமசாமியும் வந்தார். அப்போது அவரிடம் உதயக்குமார் பணத்தைக் கொடுத்தார். அதை வாங்கினார் ராமசாமி. உடனடியாக சாதாரண உடையில் இருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ராமசாமியை மடக்கி கைது செய்தனர்.

பின்னர் அவரை விசாரணைக்காக அஞ்சல் வழிக் கல்வி இயக்குநரக கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

எதேச்சையாக சிக்கிய 'சீன்' முருகன்..

அப்போது உதவியாளர் முருகன் என்பவர் அமர்ந்திருந்தார். அவரிடம், விசாரணை நடத்தப் போகிறோம், நீங்கள் கிளம்புங்கள் என்று போலீஸார் கூறினார். ஆனால் அவர் திருதிருவென முழித்துள்ளார். கிளம்ப தாமதம் செய்ததால் அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது.

இதையடுத்து அவர் அமர்ந்திருந்த மேசை டிராயரைத் திறந்து பார்த்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்கு பெருமளவில் பணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அப்பணத்தைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ. 32 ஆயிரத்து 400 இருந்தது. இதற்கு முருகன் கணக்கு தெரிவிக்க முடியாமல் விழித்தார்.

டிராயரை முழுமையாக போலீஸார் சோதனையிட்டபோது அதில் ஏராளமான ஆபாசப் புத்தகங்கள், நிரப்பப்படாத மதிப்பெண் பட்டியல் சான்றிதழ்கள், புரவிஷனல் சான்றிதழ்கள், ஒரு டைரி ஆகியவை இருந்தது.

டைரியைப் போலீஸார் சோதித்தபோது அதில் ஏராளமான போன், செல்போன் எண்கள் இருந்தன. அத்தனையும் பெண்களின் எண்கள். அத்தனை பேரும் விபச்சாரிகளாம். மொத்தம் 50 விபச்சாரிகளின் எண்களை குறித்து வைத்திருந்தார் முருகன்.

ஆபாசப் புத்தகம், விலைமாதர்களின் எண்கள் அடங்கிய டைரி ஆகியவையும் சிக்கியதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து முருகனையும் போலீஸார் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கியது போதாது என்று ஆபாசப் புத்தகங்கள், விபச்சாரிகளின் எண்கள் அடங்கிய டைரியுடன் ஊழியர் ஒருவர் பிடிபட்டதும் மதுரை பல்கலைக்கழக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காமராஜர் பெயரைத் தாங்கி நிற்கும் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனம் ஒன்றில் இப்படிப்பட்ட களங்கங்களும் இருப்பது கல்வியாளர்களை வேதனை அடைய வைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X