For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுக்குத் தாவும் 'அனிதா' ராதாகிருஷ்ணன்?

By Staff
Google Oneindia Tamil News

Anitha Radhakrishnan
சென்னை: அதிமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் 'அனிதா' ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவருக்கும் மேலும் சில அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்களுக்கு திமுக வலை வீசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரு நாடாளுமன்றத் தேர்தல்கள், ஒரு சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல்கள் என்று தொடர்ந்து
தோல்விகளை சந்தித்து வருகிறது அதிமுக. மீண்டும் மக்கள் ஆதரவைப் பெறுவது எப்படி என்று குழப்பத்தில் இருக்கிறார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

மாநில அளவில் சுற்றுப் பயணம், மாநாடுகள், பிரச்சாரங்கள், கூட்டங்கள் நடத்தினால் தான் அதிமுகவினரை உற்சாகமூட்ட முடியும் என்ற நிலையில் ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் ஹைதரபாத், கொடநாடு அல்லது போயஸ் கார்டனில் முடங்கிவிடுகிறார்.

தனது கட்சியின் தலைமையகத்துக்குக் கூட அவர் வருவதில்லை. அவர் தனது கட்சிக்கு அலுவலகத்துக்கு வருவதைக் கூட அதிமுகவினர் விழாவாக கொண்டாட வேண்டிய நிலை உள்ளது.

முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தை மிதிக்காமல் அவரது நாள் முடிவடையாது. காலையோ, மாலையோ, இரவிலோ எப்படியாவது ஒருமுறையோ அல்லது இரண்டு முறையாவது கட்சி அலுவலகத்துக்கு வந்துவிடுவார்.

இதனால் அண்ணா அறிவாலயத்தில் எப்போதும் தொண்டர் கூட்டமும் அலைமோதும். கட்சியின் அடிமட்டத் தொண்டர் கூட இங்கு வைத்து கருணாநிதியை சந்தித்துவிட முடியும். மேலும் பத்திரிக்கையாளர்களும் இங்கு ரெகுலராக முகாமிட்டிருப்பதும் வழக்கம். நிருபர் சந்திப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் இருக்கும் பகுதிக்கு முதல்வரோ, துணை முதல்வரோ, அமைச்சர்களோ வந்து எட்டிப் பார்த்துவிட்டாவது செல்வர்.

ஆனால், அதிமுக தலைமையகத்தில் பூட்டு தொங்காதது மட்டும் தான் பாக்கி. அங்கு ஜெயலலிதா வந்தால் மட்டும் தாரை-தப்பட்டையோடு நிர்வாகிகள் ஆஜராவர். அவர் வராவிட்டால் யாருமே அந்தப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டார்கள்.

மேலும் ஜெயலலிதாவை கூட்டணிக் கட்சித் தலைவர்களாலேயே சந்திக்க முடியாத நிலையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நிலை எப்படி என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

மாவட்டவாரியாக அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் தலைமையி்ல் எதாவது ஒரு விஷயம் தொடர்பாக போராட்டம் நடத்துவதைத் தவிர அதிமுக கடந்த பல ஆண்டுகளாகவே முழு அளவில் அரசியலில் தீவிரம் காட்டவில்லை.

பொதுப் பிரச்சனைகளில் தினமும் ஏதாவது அறிக்கைகள் வெளியிடுவது, நிர்வாகிகளை நீக்குவது- மாற்றுவது என்பதைத் தவிர அதிமுக தரப்பிலிருந்து மக்களைக் கவரும் செயல்பாடுகள் ஏதுமில்லை.

இதை தனக்கு மிக சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது திமுக.

ஆட்சியில் இருந்தாலும் கூட வழக்கமாக 'ஜெயலலிதா பயத்திலேயே' தான் திமுக இருப்பது வழக்கம். ஆனால், அந்த பயம் திமுகவை விட்டுப் போய் நீண்ட நாட்களாகிவிட்டதாகத் தெரிகிறது.

அதிமுகவின் கிராமப் பகுதி ஓட்டுக்களை விஜய்காந்தின் தேமுதிக சுரண்டி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தவும் ஜெயலலிதா தரப்பில் உருப்படியாக எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் அதிமுக நிர்வாகிகள் தளர்ந்து போய் உள்ளனர். ஆனாலும் இதையெல்லாம் ஜெயலலிதாவிடம் தைரியமாகச் சொல்லவும் அவர்களால் முடியவில்லை.

திமுகவைப் பொறுத்தவரை தன்னிடம் வாதாடவும் கூட மூத்த தலைவர்களுக்கு சுதந்திரம் தந்திருப்பவர் முதல்வர் கருணாநிதி. மாவட்டச் செயலாளர்களில் ஆரம்பித்து வட்டச் செயலாளர்கள் வரை தங்கள் மனதில் பட்டதை கருணாநிதியிடம் சொல்லிவிடுவது வழக்கம்.

அவர்களால் முடியாவிட்டால் அதை அமைச்சர்கள் அன்ழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் மூலமாக அவரது கவனத்துக்குக் கொண்டு போய்விடுவது வழக்கம். மேலும் அழகிரியும் தன் பங்குக்கு தென் மாவட்ட திமுகவினரின் மன ஓட்டத்தை விரல் நுனியில் வைத்திருக்கிறார்.

இதனால் கட்சியி்ல் கீழ் மட்டத் தகவல்கள், ஆட்சி மீதான அதிருப்திகள் ஆகியவை உடனுக்குடன் திமுக தலைமைக்கு எட்டிவிடுகிறது.

ஆனால், அதிமுகவில் எல்லாமே சஸ்பென்ஸ் தான். யாரும் தலைவியை எளிதாக சந்தித்து பிரச்சனைகளை சொல்ல முடியாத நிலை. இதனால் தங்கள் பிரச்சனைகளை போயஸ் கார்டனுக்கு பேக்ஸ் அனுப்பவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.

ஆனால், இந்த பேக்ஸ் புகார்களாவது ஜெயலலிதாவின் கவனத்துக்கு முழுவதுமாய் போகிறதா என்பதும் தெரியாத நிலை. அதற்குக் காரணம் அங்கு அதிகாரம் செலுத்தும் மன்னார்குடி வகையறாக்கள்.

இப்படி பல காரணங்களால் அதிமுக நி்ர்வாகிகள், தொண்டர்கள் தளர்ந்து போயுள்ளதை உணர்ந்து அவர்களுக்கு திமுக வலை வீச ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் கொடநாட்டில் 3 முறை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஜெயலலிதா நடத்திய ஆலோசனைகளில் பெரும்பாலான நேரம் டோஸ் தான் விழுந்தது என்கிறார்கள்.

ஏற்கனவே சோர்வடைந்துள்ள இவர்களில் சிலர் ஜெயலலிதாவிடம் கிடைத்த டோஸ் காரணமாக இன்னும் வெறுத்துப் போயுள்ளதாகத் தெரிகிறது. இவர்களில் முக்கிய நபர்களைத் தான் திமுக குறி வைக்க ஆரம்பித்துள்ளது.

இதில் முக்கியமானவர் மாவட்டச் செயலாளர்களாக இருந்து நீக்கப்பட்டுள்ள 'அனிதா' ராதாகிருஷ்ணன். இவர் அமைச்சராக இருந்தபோது அதிமுக சாத்தான்குளம் இடைத் தேர்தலை சந்தித்தது. அப்போது கிட்டத்தட்ட 'அழகிரி ஸ்டைலில்' தேர்தலை சந்தித்தார் அனிதா.

இப்போது தேர்தலுக்குத் தேர்தல் திமுக, மத்திய அமைச்சர் அழகிரி மீது ஜெயலலிதா என்னென்ன குற்றச்சாட்டுகளைச் சொல்கிறாரோ அவையெல்லாம் அப்போது திமுகவால் அதிமுக மீதும் 'அனிதா' ராதாகிருஷ்ணன் மீதும் கூறப்பட்டன.

லட்டுவுக்குள் மூக்குத்தி, குங்கும சிமிழில் குங்கமத்துக்குள் புதைக்கப்பட்ட தோடு, வீட்டுக்கு வீடு பாத்திரங்கள் என அதிமுக ஆரம்பித்து வைத்தது தான் 'ஓட்டுக்கு நோட்டு' சமாச்சாரமே. இதைத் தான் இப்போது திமுக 'அடுத்த நிலைக்கு' பரவலாக்கிவிட்டது.

இந் நிலையில் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட அனிதாவிடம் திமுக தரப்பு பேசி முடித்துவிட்டதாகவும் அவர் விரைவிலேயே கட்சி தாவுவார் என்றும் கூறப்படுகிறது.

நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரான 'அனிதா' ராதாகிருஷ்ணன் தனது தொகுதியில் நல்ல செல்வாக்குடன் இருப்பவர். இவரை ஜெயலலிதா ஏன் பதவியிலிருந்து நீக்கினார் என்பது அந்தப் பகுதி அதிமுகவினருக்கே புரியவில்லை.

தன்னை ஜெயலலிதா நீக்கப் போகிறார் என்பதை அறிந்தோ என்னவோ சில காலமாக அதி்முக கூட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்து வந்த அனிதா, சில தினங்களுக்கு முன் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இருந்த தனது கம்யூட்டர், டிவி உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று விட்டார்.

அனிதாவின் ஆதரவாளர்களான முக்கிய பதவிகளில் இருக்கும் நிர்வாகிகளும், உள்ளாட்சி பதவிகளில் இருப்பவர்கள், தொண்டர்கள் என 3,000க்கும் மேற்பட்டவர்கள் திமுவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கொடி கம்பங்கள் சாய்ப்பு..

இதற்கிடையே அனிதா ராதாகிரூஷணன் பதவி பறித்ததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் அதிமுக கொடி கம்பங்களை சாய்த்தும், ஜெயலலிதாவின் டிஜிட்டல் பேனர்களை கிழித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

உடன்குடி பெருமாள்புரம், சந்தையடி தெரு, உடன்குடி மெயின் பஜார் ஆகிய இடங்களில் இருந்த அதிமுக கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. கொடிகள் கிழித்து எறியப்பட்டதோடு ஜெயலலிதாவின் டிஜிட்டல் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் அனிதாவின் எதிர்கோஷ்டியினர் அவரது பதவி பறிப்பை இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இதற்கிடையே அனிதாவைத் தொடர்ந்து மேலும் சில நிர்வாகிகளும் தாவத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே உற்சாகம் குன்றிப் போயுள்ள நிர்வாகிகளை மேலும் நோகச் செய்யும் வகையி்ல் அவர்ளை நீக்குவது, மாற்றுவதை விட்டுவிட்டு அவர்களுக்கு கை கொடுத்து அவர்களோடு ஜெயலலிதாவும் நேரடியாக களத்தில் இறங்கி மோதினால் தான் திமுகவையும் வேகமாய் வளரும் விஜய்காந்தையும் சமாளிக்க முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X