For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரச்சினைகளைத் தீர்க்க சிலைகளைத் திறக்கவில்லை - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பெங்களூரில் திருவள்ளுவர் மற்றும் சென்னையில் சர்வக்னர் சிலை திறப்பு இரு மாநில உறவுகளை நிரந்தரமாக வலுப்படுத்தும் நோக்கில்தான் நடக்கிறது. மாறாக, தண்ணீர்ப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பேரம் அல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

பெங்களூர் சென்று விட்டு சென்னை திரும்பியுள்ள முதல்வர் கருணாநிதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஓகனேக்கல் பிரச்சினை குறித்து கர்நாடக முதல்வருடன் பேசவில்லை. நல்ல சூழ்நிலை இருந்த நேரத்தில் பிரச்சினை குறித்து பேச வேண்டாம் என விட்டு விட்டேன். உரிய நேரத்தில் இது குறித்துப் பேசப்படும்.

காவிரி காரணமல்ல..

திருவள்ளுவர், சர்வக்னர் சிலை திறப்பில் அரசியல் கலக்கவில்லை. அதேபோல இரு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பேரமும் அல்ல.

இரு மாநிலங்களுக்கிடையிலான உறவை நிரந்தரமாக வலுப்படுத்தும் வகையில்தான் இந்த சிலை திறப்பு நடைபெறுகிறது.

சர்வக்னர் சிலை திட்டமிட்டபடி ஜீவா பூங்காவில்தான் வைக்கப்படும். நிகழ்ச்சி நடத்த இடம் போதியதாக இல்லாததால் காவல்துறை பயிற்சிக் கூட திடலில் விழா நடைபெறும் என்றார்.

சாமியார் பேச்சில் ஏமாறாதீர்கள்..

இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், யாரோ ஒரு சாமியார் தவறாக சொல்லியிருப்பதை கேட்டு ஏமாறாதீர்கள் என்றார் முதல்வர்.

நிவாரணப் பணிகளில் வேகம் தேவை ...

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர் மறுவாழ்வு பணிகள் உங்களுக்கு திருப்தியாக உள்ளதா என்ற கேள்விக்கு, அது ஆரம்பமாகி உள்ளது. இன்னும் வேகம் தேவை என்பது எங்கள் கருத்து. இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் நாங்கள் மத்திய அரசுக்கு தெரிவிப்போம்.

நேற்றைய தினத்தோடு தமிழ்நாட்டில் இருந்து தமிழக அரசின் சார்பில் 4 முறை தமிழர்களுக்கு உணவு, உடை போன்ற நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நான்காவதாக நேற்று அனுப்பப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.15 கோடியாகும். நாங்களும் அனுப்பியிருக்கிறோம். மத்திய அரசும் அனுப்பி இருக்கிறது என்றார் முதல்வர்.

சர்வக்னர் சிலை- கருணாநிதி ஆய்வு

இதற்கிடையே, சென்னை அயனாவாரத்தில் நிறுவப்படவுள்ள சர்வக்னர் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று பார்வையிட்டார்.

பெங்களூர் திருவள்ளுவர் சிலை நேற்று நடந்த கோலாகலமான நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்து, சென்னை அயனாவரத்தில் கன்னடக் கவி சர்வக்னரின் சிலை திறக்கப்படவுள்ளது. அங்குள்ள ஜீவா பூங்கா வளாகத்தில் சர்வக்னரின் சிலை திறக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சிலை திறப்பு விழா 13-ந்தேதி நடக்கிறது. முதவர் கருணாநிதி தலைமையில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா சிலையைத் திறந்த வைக்கவுள்ளார்.

தற்போது பீடத்தின் மீது சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு வந்த முதல்வர் கருணாநிதி, சிலை அமைப்புப் பணியைப் பார்வையிட்டார். சிலையையும் அவர் பார்த்தார்.

மேலும், சிலை அமைப்பு தொடர்பாக அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகளையும் வழங்கினார்.

சென்னை திரும்பினார்..

முன்னதாக தனது பெங்களூர் பயணத்தை முடித்து விட்டு நேற்று இரவு முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் கருணாநிதியை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வரவேற்றார். பின்னர் செய்தியாளர்கள் கருணாநிதியிடம், பெங்களூர் பயணம் எப்படி இருந்தது? என்று கேட்டனர். அதற்கு முதல்வர், பயணம் நன்றாக இருந்தது என்றார்.

தொடர்ந்து காவிரி நதி நீர் பிரச்சினை பற்றி கர்நாடக முதல்வர் எதியூரப்பாவிடம் பேசினீர்களா? என்ற கேள்விக்கு, இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நான் சிலை திறக்க சென்றேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X