2011 தேர்தலை ஜெ புறக்கணிப்பாரா?-ஸ்டாலின்
பர்கூர்: 2011ம் ஆண்டு நடக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் ஜெயலலிதாவுக்கு பெரும் தோல்வி ஏற்படும். தோற்பது மட்டுமல்ல; அதிமுகவுக்கு எந்தத் தொகுதியிலும் டெபாசிட்டும் கிடைக்காது என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பர்கூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் பேசுகையில்,
நம்மை எதிர்க்கக் கூடிய அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தை புறக்கணித்து விட்டன. பிரதான எதிர்க்கட்சியும், அதிமுக கூட்டணியை வழிநடத்துபவருமான ஜெயலலிதா 2 முறை முதல்வராக பதவி வகித்தவர். அவரும் தேர்தல் களத்தை புறக்கணித்துள்ளார்.
இதற்கு, ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக காரணம் கூறுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதே. முறைகேடு நடந்திருந்தால் ஒரு இடத்திலாவது அதிமுக வெற்றி பெற்றிருக்குமா?.
ஓட்டு எந்திரத்தில் முறைகேட்டை நிரூபிக்க 10 நாள் அவகாசம் கொடுத்து தேர்தல் ஆணையம் டெல்லிக்கு அழைத்தது. ஆனால்,
அதை நிரூபித்துக் காட்ட ஜெயலலிதாவும், ராமதாசும் டெல்லிக்கு சென்றார்களா?. இல்லேயே.. ஏன்?.
ஆனால், பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று முறைகேடு நடக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு திரும்பி வந்துவிட்டார்கள்.
இந்த இடைத் தேர்தலை புறக்கணிக்கும் ஜெயலலிதா வரும் 2011ம் ஆண்டு நடக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தலையும் புறக்கணிப்பாரா?.
அப்படி தேர்தலில் போட்டியிட்டாலும், அவர் தோற்பது மட்டுமல்ல; அவருக்கு எந்தத் தொகுதியிலும் டெபாசிட்டும் கிடைக்காது என்ற நிலை ஏற்படும். அதற்காக, அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக கருதக்கூடாது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி என்றார்கள்.
ஆனால், நாம் மக்களோடு கூட்டணி அமைத்தோம். எப்படி என்றால் அரசின் திட்டங்களை, சாதனைகளை நிறைவேற்றினோம். மக்களுக்கு ஆற்றிய பணிகளை மக்கள் மன்றத்தில் எடுத்து கூறினோம். தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றோம்.
தொடர்ந்து மக்கள் பணியை ஒழுங்காக செய்து தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவோம் என்றார்.