For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி மீது நடவடிக்கை-வாஜ்பாயை தடுத்த அத்வானி: ஜஸ்வந்த் சிங்!

By Staff
Google Oneindia Tamil News

Vajpayee with Jaswant Singh
டெல்லி: குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தையடுத்து அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்தார். ஆனால், அதை அத்வானி தான் தடுத்தார் என்று பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

மேலும் விமானப் பயணிகளை மீட்க தீவிரவாதிகளை விடுதலை செய்தது தனக்குத் தெரியாது என்று அத்வானி சொல்வது பச்சைப் பொய் என்றும் அவர் கூறியுள்ளார்.

என்டிடிவியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சேகர் குப்தாவின் 'வாக் த டாக்' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,

2002ம் ஆண்டில் குஜராத்தில் மதக் கலவரம் தீவிரமாக நடந்த நேரம் அது. பிரதமர் வாஜ்பாய், அத்வானி, நான், அருண் ஷோரி ஆகியோர் பாஜக கூட்டத்தில் பங்கேற்க கோவாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது, வாஜ்பாய் எங்களிடம், குஜராத் விஷயத்தில் நாம் என்ன செய்வது என்றார். அவருக்கு யாரும் பதில் சொல்லவில்லை. நிசப்தம் நிலவியது. பின்னர் அவரே தொடர்ந்து, குஜராத் விஷயத்தில் அப்படியே விட்டுவிட முடியாது. (நரேந்திர மோடி) விஷயத்தில் ஏதாவது கடும் நடவடிக்கை அவசியம். என்ன செய்யலாம் என்றார்.

அவர் அத்வானி எழுந்து டாய்லெட் போய்விட்டார்.

இதையடுத்து என்னிடம் திரும்பிய வாஜ்பாய், அவரிடம் (அத்வானி) கேளுங்கள்.. என்ன செய்வது என்று கேட்டுச சொல்லுங்கள் என்றார்.

டாய்லெட்டில் இருந்து திரும்பி வந்த அத்வானியிடம் நான் போய், குஜராத் விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று கேட்டேன்.

அதற்கு அத்வானி, (நரேந்திர மோடி மீது) நடவடிக்கை ஏதாவது எடுத்தால் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.

இதன்மூலம் நரேந்திர மோடி மீது எந்த நடவடிக்கையையும் எடு்க்கவிடாமல் வாஜ்பாயை அத்வானி தடுத்துவிட்டார். இதனால் மோடி விஷயத்தில் வாஜ்பாய் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலும் குஜராத் கலவர நாட்களில் மிகவும் வருத்தத்தோடு தான் இருந்தார் வாஜ்பாய்.

ஒரு கட்டத்தில் கட்சி விவகாரங்களால் மிகவும் புண்பட்டுப் போயிருந்த வாஜாய் ராஜினாமா செய்யக் கூட தயாராவிட்டார். ஒரு நாள் நான் வீட்டில் இருந்த நிலையில் மறைந்த பிரமோத் மகாஜனிடம் இருந்து போன் வந்தது. சீக்கிரம் பிரதமர் அலுவலகத்துக்கு வாருங்கள் என்றார்.

நானும் விரைந்தேன். அப்போது என்னிடம் ஓடிவந்த பிரமோத், வாஜ்பாய் ராஜினாமா செய்யத் தயாராகிறார். அவரது செயலாளரை அழைத்து ராஜினாமா கடிதம் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார் என்றார்.

நான் வாஜ்பாயிடம் ஓடினேன். அப்போது அவரது செயலாளர் ராஜினாமா கடித நோட்ஸ் எடுக்க வாஜ்பாயிடம் வந்தார். நான் அவரை அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுங்கள்.. இப்போதைக்கு வாஜ்பாய் கூப்பிட்டாலும் வராதீர்கள் என்று திருப்பி அனுப்பினேன்.

நீ என்ன செய்கிறாய் என்று என்னைத் திட்டியபடியே, ஒரு பேப்பரை எடுத்து தானே கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுத ஆரம்பித்தார் வாஜ்பாய். நான் அவரது கையைப் பிடித்துக் கொண்டேன். பேப்பரை பறித்துவி்ட்டு, தயவு செய்து இந்தக் காரியத்தை செய்துவிடாதீர்கள் வாஜ்பாய்ஜி என்று கெஞ்சினேன். நீண்ட முயற்சி்க்குப் பின் ஒருவழியாக அவரை அமைதிப்படுத்தினேன்.

என் மீது பாஜக நடவடிக்கை எடுக்குமாம்.. அதை அத்வானி அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பாராம்.. இந்தச் செயல் மூலம் அத்வானி தார்மீகரீதியி்ல் தரம் தாழ்ந்துவிட்டதையே காட்டுகிறது.

மத்திய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துபோது ஏற்பட்ட ஓட்டு நோட்டு விவகாரத்தில், பாஜக எம்பிக்களை விட்டு நாடாளுமன்றத்தில் பணத்தை கொட்ட வைத்து நடத்தப்பட்ட நாடகத்தை நான் கண்டித்தேன். இந்த விவகாரத்திலிருந்து நாம் விலகி இருப்பதே நல்லது என்று அத்வானியிடம் கூறினேன். அவர் கேட்கவில்லை. அவரை அவரது அலுவலகத்திலேயே சந்தித்து இது வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை.

ஆனால், என்ன ஆனது.. அப்படியெல்லாம் நாடாளுமன்றத்திலேயே பணத்தைக் கொட்டி நாடகம் போட்டதால் தேர்தலில் ஏதாவது வித்தியாசம் ஏற்பட்டதா?. தேர்தலில் இதனால் பாஜகவுக்கு ஓட்டு கிடைத்ததா?. இல்லையே.

1999ம் ஆண்டில் இந்திய விமானம் காண்டஹாருக்குக் கடத்தப்பட்டபோது மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டதில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கும் முழுப் பங்கு உண்டு. அவர்களை விடுவிப்பது தொடர்பாக பிரதமர் தலைமையில் கேபினட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபோது அங்கு அத்வானியும் இருந்தார்.

(ஆனால், சமீபத்திய மக்களவைத் தேர்தலின்போது, தனக்கு தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டது தெரியாது என்று அத்வானி கூறித் திரிந்தது குறிப்பிடத்தக்கது).

உள்துறை அமைச்சருக்குத் தெரியாமல், அதுவும் அத்வானி போன்றவருக்குத் தெரியாமல் தீவிரவாதிகளை விடுவித்துவிட முடியுமா?.

முதலில் அந்த விமானத்தை அம்ரிஸ்தரில் இருந்து காண்டஹாருக்கு தப்ப விட்டதே பெரும் தவறு. இந்தியாவை விட்டு எப்போது அந்த விமானம் வெளியே போனதோ அப்போதே நமக்குத் தோல்வி ஏற்பட்டுவிட்டது. விமானம் அம்ரிஸ்தரை விட்டுச் சென்றதற்கு உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி தானே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங்.

(3 தீவிரவாதிகளை தனி விமானத்தில் அழைத்துச் சென்று காண்டஹாரி்ல் தலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டு 160 இந்திய விமானப் பயணிகளை திருப்பி அழைத்து வந்தவர் அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது).

வாஜ்பாயை சந்திக்கும் ஜஸ்வந்த்?:

இந் நிலையில் ஜஸ்வந்த் சிங், இன்று பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை சந்திப்பார் என்று தெரிகிறது. வாஜ்பாய்க்கு மிக நெருக்கமானவரான ஜஸ்வ்த் கட்சியை விட்டு நீக்கப்பட்டபின் அவரை சந்திப்பது இதுவே முதன் முறையாகும்.

அத்வானி-ராஜ்நாத் சந்திக்கும் வசுந்தரா:

இந் நிலையில் ராஜஸ்தான் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை விட்டு விலக மறுத்து, கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் மோதிய வசுந்தரா ராஜே இன்று அத்வானியையும் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கிறார்.

அத்வானி கோஷ்டியைச் சேர்ந்த இவருக்கு எதிராக ஜஸ்வந்த் போர்க் கொடி தூக்கியதும் அவரது நீக்கத்துக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எங்களுக்குத் தொடர்பில்லை-ஆர்எஸ்எஸ்:

இந் நிலையில் பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டதில் ஆர்எஸ்எஸ்சுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ்சுடன் நெருங்கிய தொடர்பு இல்லாததும் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

படேலை அவமானப்படுத்திய பாஜக-லாலு:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ்,

நாட்டின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் சர்தார் படேல். எப்போது அத்வானியை இரும்பு மனிதர் என்று பாஜகவினர் அழைத்தார்களோ அப்போதே சர்தார் படேல் அவமானப்பட்டு விட்டார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X