• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திண்டுக்கல் டாக்டர் கடத்தல்-கொலை: திட்டம் போட்டவர் ராணுவ வீரர்!

By Staff
|

திண்டுக்கல்: திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 7 பேர் பிடிபட்டுள்ளனர்.

பழனி ரோட்டில் கிளினிக் வைத்திருந்தவர் திண்டுக்கல் ஏ.எம்.சி. சாலையைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் (70). இவர் கடந்த ஏப்ரல் 30ம் தேதி காரில் கடத்திச் செல்லப்பட்டார்.

இவரை விடுவி்க்க ரூ. 5 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் பின்னர் அவரைக் கொன்று மே மாதம் 10ம் தேதி பொள்ளாச்சி அருகே ஆழியாற்றில் பிளாஸ்டிக் பையில் கட்டி வீசியது.

இந்த வழக்கில் திண்டுக்கல் போலீசாரால் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போனதால் வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.

எஸ்.பி. அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. 2 மாத தீவிர விசாரணைக்குப் பின் இதில் தொடர்புடைய 7 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களைத் தவிர மேலும் 2 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

கொலையாளிகள் பிடிபட்ட தகவல் கிடைத்ததும் சிபிசிஐடி கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் திண்டுக்கல் வந்தார். கொலையாளிகள் பிடிபட்டது அவர் அளித்த பேட்டி:

முதலில் இந்த கொலை தொடர்பாக திண்டுக்கல் ரவுண்டுரோட்டைச் சேர்ந்த கார்த்திக் (28), வடமதுரை செட்டியப்பட்டியைச் சேர்ந்த சங்கர் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கார்த்திக் எம்.பி.ஏ. படித்து வந்தார். இவர்கள் தந்த தகவலை வைத்து டாக்டரை கடத்தப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி ஆயக்குடியைச் சேர்ந்த உமர் முக்தார் (23), பழனியைச் சேர்ந்த முகிலன் (20), தாராபுரத்தைச் சேர்ந்த விவேக் (22), திண்டுக்கல் பொன்னகரத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி (20), தேனி அணைப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் முகிலன், விவேக் ஆகியோர் பழனியில் பாலிடெக்னிக்கில் படித்து வந்தனர். துரைப்பாண்டி காந்திகிராமத்தில் பி.காம். படித்து வந்தார். இந்தக் கடத்தலில் முக்கிய நபரான ஆயக்குடியைச் சேர்ந்த சபீர் அகமதுவை (23) போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. குற்றவாளிகள் மிகத் தந்திரமாக செயல்பட்டனர். செல்போனில் பேசினால் போலீசார் கவனித்து குரலை பதிவு செய்வார்கள் என்பதால் எஸ்எம்எஸ் மூலமே மிரட்டல் அனுப்பினர்.

கைதான 7 பேருமமே இளைஞர்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சபீர் உள்பட மேலும் 2 பேர் பிடிபட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கார்த்திக் முன்னாள் ராணுவ வீரர். 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை ராணுவத்தில் தொழில்நுட்பப் பிரிவில் வேலை பார்த்துள்ளார். விடுமுறையில் ஊருக்கு வரும்போது நண்பர்கள் ஜாலியாக இருப்பதை கண்டு, தானும் அதுபோல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேலையை விட்டுவிட்டார்.

பின்னர் நண்பர்களை கோஷ்டி சேர்த்துக் கொண்டு, முக்கிய பிரமுகர்களை கடத்தி பணம் சம்பாதிக்க திட்டம் போட்டார். இந்த கோஷ்டியில் 8 பேர் சேர்ந்துள்ளனர்.

கார்த்திக்கின் சகோதரி ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். அவரிடம் இருந்து ஒரு போலீஸ்காரரின் புகைப்படத்தை கார்த்திக் திருடி, பல பிரிண்டுகள் போட்டு, போலி அடையாள அட்டை தயாரித்துள்ளார்.

அவற்றின் உதவியுடன் மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் 12 சிம்கார்டுகள், 8 செல்போன்களை வாங்கி உள்ளார்.

அதன் பின்னர் பணக்காரர்களை நோட்டமிட தொடங்கினர். திண்டுக்கல்லில் சில பெரிய மனிதர்களை கடத்த திட்டமிட்டனர். முடியாமல் போகவே டாக்டர் பாஸ்கரன் மீது அவர்களின் கவனம் விழுந்தது.

பாஸ்கரன் தினமும் காஸ்மா பாலிட்டன் கிளப்புக்கு விளையாடச் செல்வதை நோட்டமிட்டு கடந்த ஜனவரி மாதம் முதலே கடத்தலுக்கு திட்டமிட்டனர்.

ஏப்ரல் 30ம் தேதி காலையில் அவர் கிளப்புக்குச் சென்றபோது முகிலன் ஒரு மோட்டார் சைக்கிளில் முன்னால் சென்று நோட்டமிட்டு தகவல் கொடுக்க, மற்றவர்கள் பாஸ்கரனை குண்டு கட்டாக தூக்கி காரில் கடத்திச் சென்றனர்.

காருக்குள் வைத்து பாஸ்கரனின் முகத்தில் டேப்பை சுற்றி, சாக்குப்பையில் கட்டினர். முள்ளிப்பாடி அருகேயுள்ள செட்டியபட்டியில் சங்கரின் வீட்டுக்கு கொண்டு சென்று, மாடியில் தனியாக கொட்டகையில் வைத்து பூட்டியுள்ளனர். 2 நாட்கள் அங்கேயே வைத்து, பாஸ்கரனின் செல்போனில் இருந்து அவரது மனைவி வனிதாவிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டினர். அவ்வளவு பணம் இல்லை என்று கூறவே இறுதியில் ரூ.1 கோடி வரை பேரம் பேசியுள்ளனர்.

இதற்கிடையே போலீசார் கண்டுபிடித்து விடுவார்களோ என்று சங்கர் பயப்படவே இடத்தை மாற்ற முடிவு செய்தனர். அதன்படி 3வது நாள், பாஸ்கரனை சாக்குப்பையோடு காரில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லை சுற்றத் தொடங்கினர்.

ஒரு முறை டாக்டர் பாஸ்கரனின் வீட்டுக்கு முன்பே காரில் சென்றுள்ளனர். பின்னர் பழனி பகுதியில் காரிலேயே சுற்றியுள்ளனர். பாஸ்கரனுக்கு ஸ்ட்ரா மூலம் உணவு கொடுத்துள்ளனர்.

மூலசத்திரம் அருகே சென்றபோது பாஸ்கரன் முரண்டு பிடிக்கவே, கொலையாளிகள் அவரை அமுக்கியுள்ளனர். இதில் கழுத்து நெரிக்கப்பட்டு பாஸ்கரன் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது உடலை பொள்ளாச்சிக்கு கொண்டு சென்று, சாக்குப்பையோடு கல்லை கட்டி ஆழியாற்றில் நீரில் போட்டுவிட்டனர். ஆனாலும், பாஸ்கரன் வீட்டோடு தொடர்பு கொண்டு, தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.

இந் நிலையில் ஆழியாற்றில் தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டதால் சாக்குப்பை வெளியே தெரிந்தது. இதனால் பாஸ்கரன் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கொலையாளிகள் மிக விவரமாக செயல்பட்டதால் அவர்களைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் செல்போன் வாங்க அவர்கள் பயன்படுத்திய போட்டோ ஐடி கார்டு தான் குற்றவாளிகள் பிடிபட காரணமாக அமைந்தது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், 6 செல்போன்கள், கார்த்திக்கின் லேப்-டாப், டாக்டரின் தங்க செயின், கைக்கடிகாரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 2 மாதத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம். இதற்காக தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன் என்றார் அர்ச்சனா ராமசுந்தரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X