For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 மருத்துவ மாணவர்களுக்கும் ஸ்வைன்: வேளாங்கண்ணியில் சோதனை கட்டாயம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேருக்கும், மாணவர் ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி சமீபத்தில்சொந்த ஊருக்கு சென்று விட்டு சென்னை திரும்பினார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே போல மேலும் 2 மாணவிகளுக்கும் ஒரு மாணவருக்கும் பன்றி காய்ச்சல் பரவியுள்ளது. இவர்களும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஒரு மருத்துவ மாணவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவர்களுக்கும் பன்றி காய்ச்சல் பரவி உள்ளதால் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகளுக்கு இந்நோய் அறிகுறி உள்ளதா என்று பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மோகனசுந்தரம் கூறுகையி்ல்,

முதலாம் ஆண்டு படிக்கும் கேரள மாணவி மூலம் பன்றிக் காய்ச்சல் மற்ற மாணவர்களுக்கு பரவியுள்ளது. சொந்த ஊரில் இருந்து ரயிலில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த அவருக்கு இந்நோய் தாக்கியுள்ளது.

இதுவரை 3 மாணவிகள், 1 மாணவர் என 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் 90 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் சென்னை தண்டையார்பேட்டை மருத்துவமனையில் 30 பேரும், திருவண்ணாமலையில் 18 பேரும், கோவை அரசு மருத்துவமனையில் 10 பேரும் சிகிச்சை பெறுகி்ன்றனர்.

வேளாங்கண்ணி-ஸ்வைன் சோதனை கட்டாயம்:

இதற்கிடையே வேளாங்கண்ணி மாதா திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பன்றிக்காய்ச்சல் சோதனை கட்டாயம் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆகஸ்ட் 29 ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
இந்த நிலையில், வேளாங்கண்ணியில் கலெக்டர் முனியநாதன் தலைமையில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், கலெக்டர் முனியநாதன் பேசுகையில், வேளாங்கண்ணி திருவிழாவுக்கு கேரளா, மகாராஷ்டிரா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வரும் பக்தர்களுக்கு ரயில், பஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட எல்லைகளில் பொது சுகாதாரத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும்.

நாகை மற்றும் வேளாங்கண்ணியில் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் தங்குபவர்களுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

பன்றி காய்ச்சல் சிகிச்சைக்காக நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவும், வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு சிறப்பு பிரிவும் திறக்கப்படும் என்றார்.

கருணாநிதி ஆலோசனை...

இதற்கிடையே, தமிழகத்தில் இருந்து பன்றி காய்ச்சலை முழுமையாக விரட்டுவது குறித்து மருத்துவ துறை அதிகாரிகளுடன், முதல்வர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கை:

முதல்வர் தமிழக அரசு மேற்கொள்ளும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடுவடிக்கைகள் குறித்து இன்று 24.08.2009 ஆய்வு செய்தார். இந்த நோய் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம், குறிப்பாக வெளிநாட்டு விமானங்கள் அதிகமாக வரும் மாநிலங்களில் பரவுகிறது.

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 3 மாதங்களில் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் விமான மற்றும் கப்பல் பயணிகளுக்கு இந்த மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 7 ஆயிரத்து 516 சுவாசக்குழாய் திசு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் 205 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, 148 நபர்கள் வீடு திரும்பியிருக்கின்றனர். தற்பொழுது 57 நபர்கள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலமுடன் இருக்கின்றனர்.

இவர்களை கண்காணிக்க சிறப்பு மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்வதற்கு கிண்டி கிங் பரிசோதனை நிலையத்தில் தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவு இருப்பில் உள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற திருவண்ணாமலை மற்றும் வேளாங்கண்ணி திருவிழாக்களில் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

பயம், பீதி தேவையில்லை...

பொதுமக்கள் எந்த விதமான பயமும் பீதியும் அடைய தேவையில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார்கள் என முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X