'காந்தி நோட்டுக்கு கிடைத்த வெற்றி-வைகோ
ராஜபாளையம்: இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி மகாத்மா காந்திக்கு கிடைத்த வெற்றி. அதாவது, காந்தி படம் அச்சிடப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கிடைத்த வெற்றி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
இடைத்தேர்தல் வெற்றியை தமிழக முதல்வர் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை இந்த வெற்றியானது மகாத்மா காந்திக்கு கிடைத்த வெற்றியாகும். ஆம், மகாத்மா காந்தி படம் அச்சிடப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.
பணம் கொடுத்து ஜனநாயகத்தினை கேலி கூத்தாக்கிவிட்டனர். வாக்களர்களுக்கு வீடு வீடாக சென்று நோட்டு கொடுத்தோடு மட்டுமல்லாமல் ஓட்டு போடவிட்டால் கொடுத்த பணத்தை திரும்ப பெற வேண்டியிருக்கும் என்று மிரட்டியதால்தான் இந்த தொகுதிகளில் அதிகமாக ஓட்டு பதிவாகியுள்ளது.
உயர்ந்து வரும் விலைவாசி உயர்வினால் சாதாரண ஒரு குடும்பத்திற்கு மாத தேவை ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 12 ஆயிரம் என 5 ஆண்டுகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இது மக்களுக்கு புரியவில்லை. இதனை மக்கள் மத்தியில் எடுத்துரைப்போம். இது போன்ற வெற்றியை பொது தேர்தலில் பெற முடியாது.
ஈழ ஆதரவு இயக்கங்களை மிரட்டுகின்றனர்...
ஈழத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்வேலிக்குள் பசி, பட்டினியால் வாடுகின்றனர். இளைஞர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது போன்ற கொடுமை உலகில் எந்த இனததிற்கும் ஏற்பட்டதில்லை.
இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் ஈழதமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதை தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று கூறி கைது செய்யவும், இயக்கத்தை தடை செய்யவும் விளம்பரம் செய்கின்றனர். ஆதரவு இயக்கங்களை மிரட்டிப் பார்க்கின்றனர். தமிழ் இனத்திற்கு பெரும் துரோகம் செய்தவர்களை வரலாறு மன்னிக்காது என்றார் வைகோ.