• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை

By Staff
|

House of Captain
சென்னை: சென்னை நீலாங்கரையில் ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் மற்றும் அவரது மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர்.

கொலைச் செயலை நிகழ்த்திய நபரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று மாலையில், சென்னையை அதிர வைத்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு...

நீலாங்கரையை அடுத்த பனையூர் 11-வது அவென்யுவில் வசித்து வந்தவர் இளங்கோவன் (69). ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன். மீனவர் சங்கத் தலைவர் அன்பழகனின் உறவினர் ஆவார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த வீடு கட்டி இங்கு குடியேறினார். இவரது மனைவி பெயர் ரமணி (62).

இவர்களுக்கு வித்யாசங்கர், நேமிநாதன், முகுந்த் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். நேமிநாதன், முகுந்த் இருவரும் சென்னையில் வாழ்கிறார்கள்.

வித்யாசங்கர், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் என்ஜினீயராக பணியாற்றுகிறார். வித்யா சங்கரின் மனைவி பெயர் வசந்தி (40).இவர்களுடைய குழந்தைகள் பிரவீன் (12), பிரியங்கா (8). இவர்கள் பாரிசீல் படிக்கிறார்கள்.

பெற்றோரை பார்ப்பதற்காக வித்யா சங்கர் ஒரு வாரத்துக்கு முன்பு குடும்பத்தோடு சென்னை வந்தார். நேற்று மாலை 4 மணி அளவில் வித்தியா சங்கர் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக சென்னை விமான நிலையம் சென்று விட்டார்.

வீட்டில் இளங்கோவன், அவரது மனைவி ரமணி மற்றும் வசந்தி, அவரது குழந்தைகள் பிரவீன், பிரியங்கா ஆகியோர் இருந்தனர்.

அப்போது, மர்ம நபர் ஒருவன் அங்கு வந்தான். அவன் அங்கிருந்த காவலாளியை துப்பாக்கி முனையில் மிரட்டி நிற்க வைத்தான். பின்னர், கதவை பலமாக தட்டியுள்ளான். மேலும், வீட்டின் இடது பக்க கண்ணாடி ஜன்னலை துப்பாக்கியால் அடித்து உடைத்தான்.

இதையடுத்து இளங்கோவன் வந்து கதவை திறந்தார். அப்போது அந்த மர்ம நபர், இளங்கோவனின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியை நீட்டி, சத்தம் போட்டால் சுட்டு கொன்று விடுவேன். அனைத்து பீரோக்களையும் திறந்து காட்டு என்று மிரட்டினான்.

பயந்து போன இளங்கோவன் பீரோக்களை திறந்து காட்டினார். படுக்கையறைக்கு சென்று அங்குள்ள பீரோவையும் மர்ம ஆசாமி உடைத்து திறந்தான்.

இதையடுத்து இளங்கோவன் அவனைப் பிடிக்க முயன்றார்.

இதையடுத்து அந்த நபர், இளங்கோவனை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் கீழே விழுந்தார் இளங்கோவன். இதைப் பார்த்து ஓடி வந்த ரமணி, மருமகள் வசந்தி ஆகியோரையும் அந்த நபர் சுட்டான். பயந்து நடுங்கியபடி இருந்த குழந்தைகளையும் ஈவு இரக்கம் இல்லாமல் கத்தியால் தாக்கினான்.

அரை மணி நேரம் ராட்சனாக மாறி நடத்திய வெறியாட்டத்தைத் தொடர்ந்து அந்த நபர் வெளியே ஓடி வந்தான்.

இந்த அமளியால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கையில் துப்பாக்கியுடன் வந்த அந்த நபரை துணிகரமாக மடக்கிப் பிடித்தனர். போலீஸாருக்கும் தகவல் போனது.

கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள், போலீஸார் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் போய்ப் பார்த்தபோது, இளங்கோவனும், ரமணியும் பிணமாகிக் கிடந்தனர். உயிருக்குப் போராடி வந்த வசந்தி மற்றும் இரு குழந்தைகள் மீட்கப்பட்டு அடையார் மலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிடிப்பட்ட நபரை நீலாங்கரை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அவனது பெயர் சண்முகராஜன், சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரபலமான கிரானைட் தொழிலதிபர். அவன் வந்த ஹூண்டாய் கார், .32 ரக பிஸ்டல் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மீனவர் சங்கத் தலைவரின் உறவினர்...

இளங்கோவன் குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கொலை செய்யப்பட்ட கப்பல் கேப்டன் இளங்கோவன் மீனவர் சங்க தலைவர் அன்பழகனின் உறவினர் ஆவார். இளங்கோவன் முதலில் நீலாங்கரையில் வசித்தார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த வீட்டை சொந்தமாக கட்டி குடியேறினார்.

ஓய்வு பெற்ற பிறகு நிலம் வாங்கி விற்கும் தொழிலில் இளங்கோவன் ஈடுபட்டார். மரக்காணம் அருகே உள்ள அனுமந்தபுரத்தில் 157 ஏக்கர் நிலத்தை இளங்கோவன் வாங்கி போட்டு உள்ளார். அந்த நிலத்தை ரூ.65 லட்சத்திற்கு விற்பதற்கு பேரம் பேசி வந்தார்.

நிலத்தகராறில் கொலை..

அதில் சிலரோடு அவருக்கு தகராறு ஏற்பட்டது. பின்னர் அந்த தகராறை பேசி தீர்த்து விட்டார். நிலப்பிரச்சினை காரணமாகவே இளங்கோவன் கொல்லப்பட்டு இருக்க வேண்டும், கொலைகாரனும் பீரோவினுள் குறிப்பிட்ட நில ஆவணத்தையே தேடி உள்ளான்.

நகை பணத்திற்காக அவன் இந்த படுபாதக செயலை செய்யவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி இதன் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்றனர்.

தொழிலதிபரின் வேலைக்காரி மாயம்...

சண்முகராஜன் வீட்டிலும் போலீசார் சோதனையிட்டு மேலும் ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவரது மனைவியை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சண்முகராஜன் சென்னை சைதாப்பேட்டை சுப்பிரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர். பிரபல தொழிலதிபர் ஆவார். இவர் கிரானைட் தொழில் செய்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார்.

இவரது மனைவி அமுதவல்லி, கல்லூரி பேராசிரியை. கொலை நடந்த உடன் சண்முகராஜன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையில் வீட்டில் இருந்து மேலும் ஒரு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.

சண்முகராஜனை அடையாறு போலீஸ் நிலையத்தில் வைத்து நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தினார்கள். சண்முகராஜனின் மனைவி அமுதவல்லியையும் போலீசார் இரவு பிடித்து வந்து விசாரித்தனர்.

சண்முகராஜனும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் நிலத்தகராறு காரணமாக இந்த இரட்டை கொலைகள் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சண்முகராஜனும் கொலை நடந்த வீட்டில் உள்ள பீரோவில் நில விவகார ஆவணங்களையே தேடியுள்ளார். பணம், நகையை கொள்ளை அடிக்க வந்தவர் போல நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

நெல்லை காரால் மர்மம்...

கொலை செய்வதற்காக சண்முகராஜன் வந்த காரின் எண் டி.என்.72 ஏஏ 0226 என்பதாகும். இது நெல்லை மாவட்ட பதிவு எண். எனவே அந்த கார் எந்த வகையில் சென்னையில் நடந்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டது? என்பதையும் போலீசார் விசாரிக்கின்றனர்.

இளங்கோவனின் வீட்டு வேலைக்காரி கீதாவும் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை. அவரை விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

பிடிபட்டது எப்படி..

கொலையாளி சண்முகராஜன் பிடிபட்டது குறித்து இளங்கோவன் வீட்டு காவலாளி வீரசேகரன் போலீஸாரிடம் கூறுகையில்,

மாலை 3 மணியளவில் வித்யா சங்கரும், வசந்தியின் அக்காவும் ஒரு காரில் விமான நிலையம் சென்றனர். நண்பர் ஒருவரை விமானத்தில் ஏற்றி வழியனுப்புவதற்காக வித்யாசங்கர் சென்றார். அவர்கள் சென்ற காரை டிரைவர் முருகானந்தம் ஓட்டி சென்றார்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் கொலைகாரன் காரில் வந்து இறங்கினான். காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு என்னிடம் வந்தான். துப்பாக்கியை காட்டி சத்தம் போடாமல் ஓரமாக நில் என்று மிரட்டினான். நானும் பயந்து போய் நின்று விட்டேன். பின்னர், அவன் வீட்டிற்குள் சென்றான். அங்கு என்ன நடந்தது என்பதை நான் நேரில் பார்க்கவில்லை.

துப்பாக்கியால் சுடும் சத்தமும், மரண ஓலத்தில் அலறல் சத்தம் மட்டுமே கேட்டது. நிராயுதபாணியாக நின்ற என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரை மணி நேரம் வீட்டிற்குள் இருந்து விட்டு கொலைகாரன் வெளியே ஓடிவந்தான்.

அவன் வரவும் விமான நிலையத்திற்கு சென்று இருந்த வசந்தியின் அக்கா வீட்டிற்கு காரில் வரவும் சரியாக இருந்தது. வித்யாசங்கர் விமான நிலையத்தில் இன்னொரு நண்பரை பார்ப்பதற்காக அங்கேயே இருந்து விட்டார்.

வசந்தியின் அக்காவை பார்த்ததும் கொலைகாரன் துப்பாக்கியை காட்டி மிரட்டினான். பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டு வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து வெளியே தாவினான். வீட்டின் முன்பு நின்ற அவனது காரில் தப்பினான்.

ஆனால், அவனால் மெயின் ரோட்டுக்கு திரும்பி போக முடியவில்லை. முட்டுசந்துக்குள் போய் மாட்டி கொண்டான். நானும், டிரைவர் முருகானந்தம், வசந்தியின் அக்கா ஆகியோர் கொலைகாரனை பிடிக்க முற்பட்டோம்.

அவன் மீண்டும் துப்பாக்கியை காட்டி எங்களை சுட்டு விடுவதாக மிரட்டினான். காரை விட்டு இறங்கி தப்பி ஓட பார்த்தான். அதற்குள் பொதுமக்களும் திரண்டு வந்தனர். அனைவரும் சேர்ந்து கொலைகாரனை பிடித்தோம்.

அரை மணி நேரமும் ஒரு போர்க்களம் போல மாறிப் போனது என்றார்.

ஒருவனா, நால்வரா?

இந்த பயங்கர சம்பவம் குறித்து கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், கொலை செய்யப்பட்ட இளங்கோவன், அவரது மனைவி ரமணி ஆகியோரது வயிற்றில் குண்டு பாய்ந்து இறந்துள்ளனர். வசந்தியின் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளது. அவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார். குழந்தைகள் இருவருக்கும் லேசான கத்திக்காயம் ஏற்பட்டு உள்ளது.

கொலைகாரன் பயன்படுத்திய துப்பாக்கி எந்த ரகத்தை சேர்ந்தது? அவன் யார்? எதற்காக இந்த கொடூர கொலைகளை செய்தான் என்பது பற்றி விசாரித்து வருகிறோம். நகை, பணத்துக்காக கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறில் கொலை நடந்ததா? கொலைக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் விசாரணை நடந்து வருகிறது.

கொலைகாரர்கள் 4 பேர் வந்ததாக சொல்கிறார்கள். ஆனால், எங்களை பொறுத்தவரையில் அவன் ஒருவன் மட்டுமே காரை ஓட்டி தனியாக வந்துள்ளான் என்பது தெரிய வந்துள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X