For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் வன்னியர் கோஷம்-பாமக புது முடிவு

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்: மக்களவைத் தேர்தல் கொடுத்த அடியால் துவண்டு போயிருக்கும் பாமகவினரை உற்சாகப்படுத்தவும், தளர்ந்து போய் விட்ட வன்னியர் வாக்கு வங்கியை தூக்கி நிறுத்தவும், மறுபடியும் ஜாதியை கையில் எடுக்கவுள்ளது பாமக.

அசைக்க முடியாத வாக்கு வங்கி பாமகவின் வன்னியர் வாக்குகள் என்ற இமேஜ் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை இருந்தது.

இந்த ஒரே காரணத்துக்காக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி பாமகவை சகித்துக் கொண்டு தங்களது அணியில் இடம் பெற வைக்க முண்டியடித்துக் கொண்டிருந்தன. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு டாக்டர் ராமதாஸின் அரசியல் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் மக்களவைத் தேர்தல் தோல்வி பாமகவை அப்படியே சிதறடித்து விட்டது. போட்டியிட்ட தொகுதிகளில் ஒன்றில் கூட வெல்ல முடியாமல் போய் விட்டது பாமக. அசைக்க முடியாத வாக்கு வங்கி இருப்பதாக கருதப்பட்ட நிலையில் அங்கெல்லாம் எதிர்பாராத அளவுக்கு மோசமான வாக்குகளைப் பெற்று பெரும் அடியை வாங்கியது பாமக.

இந்த நிலையில் இடையில் மறந்து போயிருந்த வன்னியர் என்ற கோஷத்தை மீண்டும் கையில் எடுக்க முடிவு செய்துள்ளது பாமக.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு மாவட்டம் தோறும் மாநாடுகளை நடத்த காடு வெட்டி குரு தலைமையிலான வன்னியர் சங்கம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு 1980ல் தொடங்கப்பட்ட இயக்கம் வன்னியர் சங்கம். இக் கோரிக்கைக்காக வன்னியர் சங்கம் நடத்திய ஒரு வார கால சாலை மறியல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலைகள் தோறும் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை நிலை குலைய வைத்தது வன்னியர் சங்கம்.

அதன் பின்னர் வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1989ல் வன்னியர் சங்கம், பாமக என்ற அரசியல் கட்சியாக உருவெடுத்தது. வன்னியர்கள் வாழும் பகுதியில் இக் கட்சி செல்வாக்கு உள்ள கட்சியாகவும் விளங்கி வந்தது.

ஜாதிக் கட்சியாக அறியப்பட்ட பாமகவின் இமேஜை அரசியல் கட்சியாக நிலை நிறுத்த கடுமையாக முயன்றார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இன்றளவும் கூட அவரால் அதில் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை என்பதே உண்மை.

இடையில் பாமகவுக்கு போட்டியாக பல்வேறு வன்னியர் சங்கங்கள் உருவாகி விட்டன. இதந் காரணமாக வாக்கு வங்கியில் லேசான பிளவும் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில்தான் லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது பாமக.

இந் நிலையில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு மாவட்டம் தோறும் மாநாடுகளை நடத்த வன்னியர் சங்கம் களமிறக்கப்பட்டுள்ளது.

மாநில வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இதற்கான ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார். முதல் மாநாடு விழுப்புரத்தில் தியாகிகள் தினமான செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது.

இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் பங்கேற்கின்றனர். இம் மாநாட்டில் கோனேரிக் குப்பத்தில் உள்ள வன்னியர் அறக்கட்டளைக்கு பெருமளவு நிதி அளிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு காடுவெட்டி குரு உத்தரவிட்டுள்ளாராம்.

டாக்டர் ராமதாஸின் வன்னியர் கார்டு எந்த அளவுக்கு பாமகவுக்கு உதவும் என்று தெரியவில்லை. ஆனால் தொய்ந்து போயிருக்கும் தொண்டர்களை தக்க வைத்துக் கொள்ளவும், உற்சாகப்படுத்தவும் இது உதவும் என்பது கட்சியினரின் நம்பிக்கை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X