பால் விலை உயர்வு எதிரொலி-காபி, டீ விலை உயர்கிறது

சமீபத்தில் பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியது. அதன்படி பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், எருமைப் பாலின் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
சென்னையில் ஆவின் பால் தினமும் 10.50 லட்சம் லிட்டர்தான் தயாராகிறது. இது சென்னை நகர மக்களின் தேவைக்கு போதாது. எனவே தனியார் பாலும் பெருமளவில் விற்பனையாகிறது. தனியார் நிறுவன பால் ஆவின் பால் விலையை விட ரூ.4 வரை அதிகமாக உள்ளது.
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் விலை உயர்வாக இருப்பதால் காபி, டீ விலையை உயர்த்த கடைக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
தற்போது சென்னை நகரில், டீ விலை ரூ. 3 முதல் 4 ஆக இருக்கிறது. காபியின் விலை ரூ. 5 ஆக உள்ளது. இது மேலும் ஒரு ரூபாய் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இது பிளாட்பாரங்கள் மற்றும் சாதாரண டீக் கடைகளில் காணப்படும் விலை நிலவரம். ஹோட்டல்களில் ஏற்கனவே 10 ரூபாய் வரை காபி, டீ விலை நிலவரம் உள்ளது. சாதாரண கடைகளில் உயர்த்தப் பட்டால் இந்த ஹோட்டல்களும் டீ, காபி விலையை உயர்த்தி விடும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, வயிற்றில் புளியைக் கரைக்கும் விதமாக ஆவின் நிறுவனம் தனது தயாரிப்பு நெய், பால்கோவா, வெண்ணெய் உள்ளிட்டவற்றின் விலையையும் உயர்த்தப் போவதாக பேச்சு அடிபடுகிறது.