For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய அரசியலில் திமுகவுக்கு முக்கிய இடம் - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் ஆனாலும் சரி, பிரதமரைத் தேர்வு செய்கின்ற இடமானாலும் சரி திமுகவுக்கு அங்கு முக்கிய இடம் உண்டு. நாட்டின் மிகப் பெரிய தேசிய இயக்கமாக வேகமாக வளர்ந்து வருகிறது திமுக என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் நேற்று முதல்வர் கருணாநிதி தலைமையில், திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது:

இன்றைக்கு அதிமுகவிலிருந்து தாய்க்கழகத்திலே வந்து சேர்ந்து விட்டோம் என்று இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று சில பேரால் சொல்லப்பட்டாலும்கூட, அண்ணா இல்லாத இடத்தில், அண்ணா என்ற பெயர் எந்த வகையிலே பொருந்தும் என்று எனக்கு தெரியவில்லை, இன்னமும் புரியவில்லை. ஏனென்றால் அண்ணா என்ற பெயரை வைத்துக்கொள்ள ஒரு தகுதி வேண்டும், அந்த இணைப்புக்கு பொருத்தமான ஒரு நிலை வேண்டும்.

அந்த கழகத்திலே - நீங்கள் ஏற்கனவே இருந்த இயக்கத்திலே அப்படிப்பட்ட நிலை இருந்ததா என்பதை, அப்போது நீங்கள் சிந்தித்துப் பார்க்காவிட்டாலும், இப்போதாவது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைக்கு அண்ணாவின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. எந்த கட்சி இந்த நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்துகிறது, எந்த இயக்கம் முனைப்பாக இருந்து அதனைக் கொண்டாடுகிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்களேயானால் - அண்ணாவுக்கு சொந்தமானவர்கள், அண்ணாவோடு இணைந்திருந்தவர்கள், அண்ணாவை தங்களின் வழிகாட்டியாகக் கொண்டவர்கள், அண்ணா இல்லாமல் இந்த இயக்கம் இல்லை, இந்த இயக்கத்திற்கு அண்ணாவின் துணை இல்லாமல் எந்த துணையும் எப்போதும் இருந்ததில்லை என்ற அந்த உணர்வோடு தான் - யார், யார் இன்றைக்கு வீரநடை போடுகிறார்களோ, அவர்கள் எல்லாம் இருக்கின்ற இயக்கமாக - அவர்கள் உலவுகின்ற இயக்கமாக - அவர்கள் திகழ்கின்ற இயக்கமாக எந்த இயக்கத்திற்காக ஆட்சி நடத்துவதாக இருந்தாலும் - அல்லது ஆட்சியை இழந்து நடமாடுவதாக இருந்தாலும் - ஆட்சியே வராமல் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் தயார், எங்களுக்கு தேவை அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றுவது தான் என்ற அந்த ஒரே நிலையில் இருக்கின்ற இயக்கத்தினுடைய முன்வரிசையிலே உள்ளவர்களை நீங்களே தயவு செய்து எண்ணிப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு சிலபேர் தி.மு.க.வை விமர்சிப்பார்கள். விமர்சிக்கின்றவர்கள் எல்லாம், அவர்கள் அந்த பதவிக்கு வர வேண்டும், இந்த பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணுகின்றவர்களே அல்லாமல், அண்ணா எடுத்துச்சொன்ன அந்த கொள்கைகளை - நாம் பின்பற்ற வேண்டும், கருணாநிதி பின்பற்றுவதா? அன்பழகன் பின்பற்றுவதா? கூடாது, நாம் தான் பின்பற்ற வேண்டுமென்று எண்ணுகின்ற சில பேர் அத்தகைய எண்ணத்திற்கு தங்களை ஆட்படுத்திக்கொண்டு நாட்டிலே எதிர்க்கட்சிகளாக விளங்குகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், யோசித்துப் பார்த்தால், அவர்கள் இங்கே வரவேண்டுமென்று விரும்புவது தி.மு.க.வை வீழ்த்த வேண்டுமென்று விரும்புவது தாங்கள் ஆட்சியை எதிர்த்து அண்ணாவின் பெயரை மறைத்து பெரியாரின் பெயரை மறைத்து - பெரியார் எந்த கொள்கைகளைச் சொன்னாரோ, எந்த சூத்திரப் பட்டம் நம்மை விட்டு அழிய வேண்டும், ஒழிய வேண்டுமென்று சொன்னாரோ, அதற்கு மாறாக நடந்து கொண்டிருப்பவர்கள் - அண்ணா எந்த சாதி அடிப்படையிலே ஒரு இயக்கம் வளரக் கூடாது, ஒரு கொள்கை அடிப்படையிலே வளர வேண்டுமென்று சொன்னாரோ, அந்த தத்துவத்திற்கு மாறாக நடப்பவர்கள் தான் இன்றைக்கு தி.மு.க.வை விமர்சிக்கின்றார்கள். பழித்துப் பேசுகின்றார்கள். கேலி பேசுகின்றார்கள்.

இன்றைக்கு யார் யாரோ சமூக நீதியைப் பற்றி பேசுகிறார்கள். யார் யாரோ சம நீதியைப் பற்றி, சாதி ஒழிப்பைப் பற்றி, மத நல்லிணக்கத்தைப் பற்றி, மதத்தின் வெறியைத் தணிக்க வேண்டும், மதவேற்றுமையை கிள்ளி எறிய வேண்டும் என்றெல்லாம் பேசுவார்கள். இதற்கெல்லாம் வழி அமைத்துக் கொடுத்தவர் பெரியார் தான் என்பதையும், அவர் வழி நின்று இன்றைக்கும் போராடி வருகின்ற ஒரு கட்சி தி.மு.க. தான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் நான் கடந்த முறை இங்கே, இதே இடத்தில் சேலத்திலிருந்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த இயக்கத்திலே சேர்ந்த போதும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 5000 பேர் இந்த இயக்கத்திலே சேர்ந்த போதும் நான் குறிப்பிட்டு சொன்னேன் - தி.மு.க. இன்றைக்கு மாநில இயக்கம். வெகு விரைவில் இதன் வளர்ச்சி வேகத்தைப் பார்த்தால், தேசிய இயக்கமாகவே தி.மு.க. ஆகக் கூடிய அளவிற்கு வல்லமை பெற்று வருகிறது என்று குறிப்பிட்டேன்.

இந்திய அரசியலில் இப்போதே தி.மு.க.விற்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஏற்கனவே குடியரசு தலைவர் தேர்தல் ஆனாலும், பிரதமராக யார் வரவேண்டும் என்று யோசிக்கின்ற இடமானாலும் யார் யார் இந்த தேர்தலிலே கூட்டுச் சேர வேண்டும் என்று திட்டமிடுகின்ற நிலையானாலும் அப்போதெல்லாம் தி.மு.க.விற்கு அதிலே பங்குண்டு. இது இப்போதுள்ள நிலை.

நான் சொல்லுகின்ற இதே வேகத்தில் இன்னும் நம்முடைய வளர்ச்சி பெருகிக் கொண்டே இருக்குமானால், ஒரு நாளைக்கு ஆயிரம் பேர், இரண்டாயிரம் பேர் என்று பிற இயக்கங்களிலிருந்து வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்ற நிலைமை வருமேயானால் - இப்போதே வட பகுதியிலே உள்ள நண்பர்கள் பேசுகிறார்கள் - அவர்கள் பேசுவதை வைத்துத் தான் சொல்கிறேன் - ஏ அப்பா, இதன் பிரமாண்டமான வளர்ச்சியைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் இந்தியாவின் தேசிய இயக்கங்களில் ஒன்றாக தி.மு.க. மாறும் என்பதிலே எந்த விதமான கருத்து மாறுபாட்டிற்கும் இடமில்லை என்று அவர்கள் பேசுவதை நான் கேட்கின்றேன்.

அதனால் தான் நானும் உங்களிடம் இதை 3 முறை பேசியிருக்கிறேன். தேசிய இயக்கம் என்றால் நம்முடைய கொள்கைகளையெல்லாம் விட்டுவிட்டு, இந்தி திணிப்பை எதிர்ப்பதா? அதை விட்டுவிட்டா? - நாம் பிரிவினை கேட்காவிட்டாலும், பிரிவினை கேட்பதற்கான காரணங்கள் அற்றுப்போய் விடவில்லை, அவை அப்படியே இருக்கின்றன என்று அண்ணா சொன்னாரே, அந்த வார்த்தைகளையெல்லாம் விட்டுவிட்டா? அல்ல, அல்ல - அவைகளை மனதிலே பதிய வைத்துக் கொண்டு தான் - அவைகளுக்காகப் போராடுகின்ற இயக்கமாக நம்முடைய தமிழகம், தென்னகம் புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதியாக ஆகாமல், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று பேசிய - அதே வாயால் இன்றைக்கு நாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறோம் - அதற்கு மாறாக வடக்கு வழங்கிடுகின்றது, தெற்கு தேறுகிறது என்ற இந்த நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இதை சோனியா காந்தியை மேடையிலே வைத்துக் கொண்டே பிரசாரக் கூட்டத்திலே சொல்லியிருக்கிறேன். வடக்கு வழங்குகின்ற அளவிற்கு இங்கே இருக்கின்ற ஆட்சி - இங்கே இருக்கின்ற மக்களுக்காகப் பாடுபடுகின்றது. அவர்களுக்காக வேண்டுகோள் விடுக்கின்றது, வலியுறுத்திக் கேட்கிறது. அப்படி கேட்ட காரணத்தினால் தான் - அப்படி போராடிய காரணத்தினால், போர்க்குரல் கொடுத்த காரணத்தினால் தான் நூறாண்டு காலமாக பெரிய பெரிய மேதைகளால், புலவர்களால், வல்லுநர்களால், தமிழ் மொழிக் காவலர்களால் கேட்கப்பட்ட கோரிக்கை - தமிழ், செம்மொழி என்ற தகுதியைப் பெற வேண்டும் என்ற கோரிக்கை கேட்பாரற்று கிடந்த காலம் மாறி, நாம் ஆட்சிக்கு வந்த பிறகு 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்து விட்டோம் என்று சொல்லப்பட்ட காலம் வந்தது என்றால் யாரால் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர்களுடைய உரிமைகளும், தமிழ் மொழியின் மேன்மைகளும் போற்றப்பட, பாராட்டப்பட, நாம் எடுக்கின்ற எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக வடக்கே உருவாகின்ற இந்தியப் பேரரசு ஆனாலும் - அந்த பேரரசுக்கு துணை நின்று வலுப்படுத்துகின்ற தமிழக அரசு ஆனாலும் இந்த இரண்டு அரசுகளும் வலுப்பெற ஒரு மாபெரும் அச்சாணியாக விளங்கக் கூடியது தி.மு.க. தான். அந்த கழகத்திலே இன்றைக்கு நீங்கள் எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்றால், உங்களையெல்லாம் நான் வரவேற்கின்றேன், பாராட்டுகின்றேன்.

அண்ண சொன்னது போல, திருவிழாவிலே காணாமல் போன பிள்ளைகள் எல்லாம் வீடு வந்து சேர்ந்தால் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைவேனோ, அந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைந்து, அந்த பிள்ளைகளை அழைத்து வந்து நீங்கள் இருந்து வாழ வேண்டிய - செயல்பட வேண்டிய இந்த இடம் அறிவாலயம் - உங்களுக்கு சொந்தமான இடம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X