ரெட்டி மாயம் - சிதம்பரத்துடன் சோனியா அவசர ஆலோசனை
டெல்லி: காணாமல் போயுள்ள ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை தேடும் பணியை முடுக்கி விடுவது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆந்திர முதல்வர் ரெட்டி மாயமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்டியைத் தேடும் பணியில் பிரதமர் அலுவலகம், சோனியா காந்தியின் அலுவலகம், ஆந்திர அரசு, உள்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து ரெட்டி தேடுதல் வேட்டை குறித்து விவரித்தார்.
ரெட்டியைத் தேடும் பணியில், ஆந்திர அரசுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அப்போது ப.சிதம்பரத்தை கேட்டுக் கொண்டார் சோனியா.
இதேபோல ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப மொய்லியும், சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிரார்த்திக்கிறோம் - திவாரி
இதற்கிடையே, ஆந்திர முதல்வர் விரைவில் நலமுடன் திரும்ப கடவுளைப் பிரார்த்தித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிலைமை தற்போது மிகவும் இறுக்கமாக உள்ளது. மிகவும் பதட்டமாகவும் உள்ளது. ரெட்டி பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தி வருகிறது காங்கிரஸ்.
தற்போது ஆந்திர முதல்வர் குறித்து எங்களிடம் கூடுதல் விவரங்கள் இல்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது என்றார்.