• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று ஓணம் பண்டிகை -கருணாநிதி, ஜெ. வாழ்த்து

By Staff
|

Malayalis celebrate Onam today,
சென்னை: மலையாளிகளின் அறுவடைத் திருநாள் என அழைக்கப்படும் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பர்னாலா

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் வசிக்கும் மலையாளிகளுக்கு எனது இதயம் கனிந்த ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓணம் பண்டிகை ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், அமைதி, செழுமையை ஏற்படுத்தட்டும்.

முதல்வர் கருணாநிதி

கேரள மாநிலத்தின் அறுவடைத்திருநாள் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் திருநாள் என மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

மலையாள மக்களின் கலை, பண்பாட்டுச்சிறப்புகளை வெளிப்படுத்தும் மகத்தான திருநாளாகக்கொண்டாடப்படும் இந்த ஓணம் திருநாள் ஆணவம், அகம்பாவம், வஞ்சகம், சூது போன்ற கொடிய குணங்கள் மனித சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதையும், அன்பு, அமைதி, மனித நேயம் ஆகியவை உலகெங்கும் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் குழந்தைகள், உறவினர், நண்பர்கள் சூழ ஓணம் திருநாளை மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் அவர்கள் நிறைந்து வாழும் கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான நாகர் கோவில், கோவை, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும், சென்னை மாவட்டத்திற்கும் 2006-ம் ஆண்டிலேயே சிறப்பு விடுமுறை வழங்கியுள்ளது இந்த அரசு.

இது, தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்களும் தங்கள் பண்பாடு போற்றி வாழ உதவிட வேண்டுமெனும் இந்த அரசின் நல்லெண்ண உணர்வை வெளிப்படுத்துகின்றது.

இந்த உணர்வோடு தமிழ்ச்சமுதாய மக்களின் சார்பில், ஓணம் திருநாளைக்கொண்டாடும் மலையாள மொழி பேசும் அருமை உடன்பிறப்புகள் அனைவர் வாழ்விலும் அன்பும், அமைதியும், வளமும் செழித்து இன்பம் பெருகிட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.

ஜெயலலிதா

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, மலையாள மொழி பேசும் அனைத்துத்தரப்பு மக்களாலும் உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் திருநாள் ஆகும்.

கேரள மாநில மக்களின் பண்பாட்டுச்சிறப்பை உணர்த்தும் நாளாகவும், அறுவடைத்திருநாளாகவும், மகாபலி சக்ரவர்த்தியை அன்புடன் வரவேற்று உபசரிக்கும் நாளாகவும், ஒற்றுமை மற்றும் சகோதரத் துவத்தை எடுத்துரைக்கும் நாளாகவும் ஓணம் திருநாள் அமைந்துள்ளது. ஓணம் பண்டிகையை மதச்சார்பற்ற பண்டிகை என்று சொன்னால் அது மிகையாகாது.

மனம் நிறைந்த மகிழ்ச்சியையும், வளம் நிறைந்த வாழ்வையும் ஒவ்வொரு இல்லத்துக்கும் 'ஓணம்" வழங்கட்டும்! இந்த நன்னாளில் மலையாள மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது இனிய 'ஓணம்" திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த்

கேரள மண்ணை ஆட்சி செய்த மாமன்னன் மாபலி சக்ரவர்த்தி அந்த மக்களைக்காண ஆண்டுதோறும் வரும் நாள் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மன்னரை வரவேற்கும் முகத்தான் அந்த மக்கள் விழாவாக கொண்டாடுகின்றனர்.

புத்தாடை அணிந்து அத்தபூ கோலமிட்டு உற்றார், உறவினர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த நாளில் அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கபாலு

இன்று மலையாள மொழி பேசும் மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் இந்நன்னாளில் அனைத்து மக்களிடையே நல்லுறவும்- மொழி, இன, மதங்கள் கடந்த நல்லிணக்கம் மேம்பட்டு நாட்டில் வன்முறை ஒழிந்து, அமைதி சமாதானம், மகிழ்ச்சி பெருகிடவும் சோனியாகாந்தி, மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகிய தலைவர்களின் கரங்களை வலுப்படுத்த ஒன்றிணைந்து உழைப்போம் என உறுதி ஏற்போம்.

சரத்குமார்

கேரளத்திலும், உலகெங்கும் வாழும் மலையாள மக்களால் இன்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளின் நோக்கமே மக்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்து எறிந்துவிட்டு ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்வதற்காத்தான்.

மத வேறுபாடுகள் ஆங்காங்கே வேரூன்றி மக்களை பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்படிப்பட்ட பண்டிகைகளை ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடும் போது மத நல்லிணக்கம் வலுப்படும்.

இந்த இனியநாளில் தமிழகத்திலும், கேரளத்திலும் மற்றும் உலகெங்கும் வாழும் மலையாள சகோதர சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு விடுமுறை...

ஓணம் பண்டிகையையொட்டி கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, குமரி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2.9.09 (புதன்கிழமை) அன்று சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு பதில் 12.9.09-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை நாளான 2.9.09 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X