For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத் வந்து சேர்ந்தது ராஜசேகர ரெட்டி உடல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது.

அவருடன் பயணித்த நால்வரின் உடல்களும் கூட ஹைதராபாத் கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்று காலை மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரெட்டி உள்ளிட்ட ஐவரின் உடல்களும் கருகிப் போயிருந்தன. இதையடுத்து அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கின.

பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஐவரின் உடல்களும் சேகரிக்கப்பட்டு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் இன்று பிற்பகலில் கர்னூல் கொண்டு வரப்பட்டன.

கர்னூல் மருத்துவமனையில் ஐந்து உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. முதலில் ரெட்டியின் உடலுக்கான பிரேதப் பரிசோதனை நடந்து முடிந்தது.

நாளை இறுதிச் சடங்குகள்...

கர்னூல் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் ராஜசேகர ரெட்டியின் உடல் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட ராணுவ டிரக்கில் ரெட்டியின் உடல் அடங்கிய சவப்பெட்டி ஏற்றப்பட்டு விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டது.

லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை உடல் வைக்கப்படும்.

கடப்பாவில் உடல் தகனம்...

ஹைதராபாத்தில் பொதுமக்களின் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்தவுடன் ரெட்டியின் உடல் அவரது சொந்த மாவட்டமான கடப்பாவுக்குக் கொண்டு செல்லப்படும்.

அங்குள்ள ரெட்டி பிறந்த ஊரான புலிவெண்டுலுவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

முழு அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 7 நாள் அரசு துக்கம்...

ரெட்டி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆந்திராவில் 7 நாள் அரசு முறை துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் அறிவிப்பு..

முன்னதாக ராஜசேகர ரெட்டியின் மரணத்தை மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.

ராஜசேகர ரெட்டியினம் மரணச் செய்தியை ஆந்திர அரசு அறிவித்தவுடன், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சற்று முன்புதான் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் பயணித்த நால்வரின் மரணச் செய்தியை ஆந்திர அரசு அறிவித்தது. இதை பிரதமரிடம் சோகத்துடன் தெரிவித்தோம்.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உடல்கள் இருந்த இடத்தையும், ஹெலிகாப்டரையும் கண்டுபிடித்தது. காலை 8.35 மணிக்கு ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

கர்னூலிலிருந்து 48 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள மலைக் குன்றில் ஹெலிகாப்டர் விழுந்திருந்தது. இதையடுத்து மேலும் பல ஹெலிகாப்டர்கள் அங்கு சென்றன. பாரா கமாண்டோக்கள் கயிற்றின் மூலம் கீழே இறங்கி ஹெலிகாப்டரை நெருங்கினர்.

பின்னர் உடல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல்கள் கருகிப் போயுள்ளன. ஹெலிகாப்டர் 7 பாகங்களாக சிதறியுள்ளது. அந்த இடத்திற்கு டாக்டர்களைக் கொண்டு செல்ல முயற்சி நடக்கிறது.

உடல் பாகங்களை சேகரித்து கர்னூல் கொண்டு செல்லும் முயற்சியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் உடல்கள் ஹைதராபாத் கொண்டு செல்லப்படும். இந்தப் பணி எப்போது முடிவடையும் என்பதைச் சொல்ல முடியாது.

இன்று மாலை 3 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் கூடுகிறது. அப்போது ராஜசேகர ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மிகச் சிறந்த முதல்வர், மிகப் பெரிய தலைவர். ராஜசேகர ரெட்டியின் மறைவால் அனைவரும் அதிர்ந்தும், உறைந்தும் போயுள்ளோம் என்றார் ப.சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X