தலிபான் மிரட்டல்-பாக்.கிலிருந்து வெளியேறும் இந்துக்கள்

தலிபான்களின் மிரட்டலுக்குப் பயந்து தங்களது வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்டவற்றை விட்டு விட்டு இவர்கள் இந்தியாவுக்கு வந்து விட்டனர். இந்தியாவுக்கு வந்த இவர்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்பப் போவதில்லை என்றும் கூறுகின்றனர். இவர்களில் சிலரது குடும்பத்தினர் இன்னும் பாகிஸ்தானிலேயே உள்ளனராம்.
பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு இயக்கப்படும் தார் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாகத்தான் இவர்கள் பெருமளவில் வருகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து இந்தியாவின் முனாபாவோ நகர் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.
அன்று முதல் இந்த ரயில் மூலமாக இந்துக்கள் வருகை தொடங்கியது. முதல் ஆண்டில் 392 பேர் இந்தியாவுக்குத் திரும்பினர்.
2007ல் 880 பேரும், 2008ல் 1240 பேரும் வந்தனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 1000 பேர் வரை இந்தியா வந்துள்ளனர்.
இங்கு வந்து சேர்ந்துள்ள போதிலும், அவர்கள் பாகிஸ்தான் குடிமக்களாகவே இருப்பதால் தொடர்ந்து விசாக்களை நீடித்தபடி உள்ளனர். தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.
இது அதிகாரப்பூர்வமான தகவல். ஆனால் முறைப்படி இப்படி ரயில் மூலம் வராமல் வேறு மார்க்கங்கள் மூலம் எல்லை தாண்டி வந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்களையும் கணக்கில் கூட்டினால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தியாவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் துயரமான கதைகளுடன் உள்ளதால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் இவர்களிடத்தில் சற்று மென்மையாகவே நடந்து கொள்கின்றனர்.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள ரானாராம் என்பவரின் கதை சோகமானது. இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டம் ரஹீம்யார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இவரது மனைவியை தலிபான்கள் கடத்திச் சென்று கற்பழித்து கட்டாயப்படுத்தி முஸ்லீமாக மாற்றி விட்டனராம். அதேபோல இவரது இரு மகள்களையும் கூட கட்டாயப்படுத்தி முஸ்லீம்களாக மாற்றியுள்ளனர். ரானாராமையும் கூட முஸ்லீமாக மாறி விட வேண்டும் என மிரட்டினராம். உயிருக்குப் பயந்து அதற்கும் ரானாராம் ஒத்துக் கொண்டார். ஆனால் இந்தியாவுக்குத் தப்பி ஓடி விட பின்னர் முடிவு செய்தார்.
இதையடுத்து தனது இரு மகள்களையும் கூட்டிக் கொண்டு இந்தியாவுக்கு வந்து விட்டார். ஆனால் இவரது மனைவியை மட்டும் கடைசி வரை இவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லையாம். அவர் எங்கிருக்கிறார், உயிருடன்தான் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்கிறார் சோகத்துடன்.
இன்னொருவரான துங்காராம் கூறுகையில், பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளன. அதிலும், முஷாரப் போன பின்னர் அங்கு அடக்குமுறைகள் அதிகரித்து விட்டன. முஸ்லீமாக மாறாவிட்டால் இந்துக்களுக்கு நிரந்தர வேலை என்பது கிடைக்கவே கிடைக்காது என்றார்.
பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ள இந்துக்கள் நலனுக்காக செயல்படும் சீமந்த் லோக் சங்காதன் என்ற அமைப்பின் தலைவர் இந்து சிங் சோதா கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து பெருமளவிலான இந்துக்கள் அகதிகளாக வந்தபடி உள்ளனர். ஆனால் இவர்களுக்கேற்ற அகதிகள் பாதுகாப்பு கொள்கை அரசிடம் இல்லை.
2004-05ல் 135 இந்துக் குடும்பங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் மற்றவர்கள் இன்னும் சட்டவிரோதமானவர்கள் என்ற அந்தஸ்திலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களிடம் முறையான குடியுரிமை ஆவணங்கள் இல்லாததால் போலீஸ் கொடுமைக்கும் ஆளாகின்றனர்.
கடந்த ஆண்டு 2008ம் ஆண்டு பாகிஸ்தானின் மிர்பூர் காஸ் நகரில் 200க்கும் மேற்பட்ட இந்துக்கள் முஸ்லீம்களாக மாறினர். ஆனால் பலர் தொடர்ந்து இந்துக்களாகவே தொடருவது என்ற உறுதியுடன் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.
முனாபாவோ ரயில் நிலைய குடியுரிமைப் பிரவு அதிகாரி ஹேதுதான் சரன் கூறுகையில், வாரந்தோறும் 15 முதல் 16 குடும்பங்கள் வரை இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. ஆனால் யாருமே இங்கு வந்து செட்டிலாகப் போவதாக கூறுவதில்லை. ஆனால் அவர்கள் கொண்டு வரும் மூட்டை முடிச்சுகளைப் பார்த்தவுடனேயே, இவர்கள் நிரந்தரமாக தங்க வருபவர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டு விடுவோம் என்கிறார்.