'காங்கிரஸ்காரர்கள் ரஜினியை பெரிய கோஷ்டிக்கு தலைவராக்கியிருப்பார்கள்!'
மதுரை: காங்கிரஸின் அழைப்பை ஆரம்பத்திலேயே புறக்கணித்துவிட்டார் ரஜினிகாந்த். இல்லாவிட்டால் அவரை தமிழக காங்கிரஸின் பெரிய கோஷ்டிக்குத் தலைவராக்கியிருப்பார்கள் என்றார் தொல் திருமாவளவன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
"நண்பர் ஒருவர் என்னிடம், ரஜினி காங்கிரஸ் கட்சியில் சேருவாரா என்று கேட்டார். ரஜினி விஷயமறிந்தவர். நிச்சயம் சேரமாட்டார் என்றுதான் சொன்னேன். அவர் காங்கிரஸில் சேர்ந்திருந்தால் இருக்கிற கோஷ்டிகளில் பெரிய கோஷ்டி ஒன்றுக்கு அவரை தலைவராக்கியுருப்பார்கள்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கப் போகிறாராமே என்றும் அவர் கேட்டார். அதற்கு நான் காங்கிரசில் இப்போது 25 கோஷ்டிகள் இருக்கிறது. விஜய் காங்கிரசில் சேர்ந்தால் அவர் 26-வது கோஷ்டிக்கு தலைவராக இருப்பார் என்று கூறினேன்.
நல்ல வேளை, நடிகர் விஜய் காங்கிரசிலும் சேரவில்லை, கட்சியும் தொடங்கவில்லை என்று கூறிவிட்டார்.
நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் நாளைக்கே முதல்வராகி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அது பலிக்காது..., என்றார் திருமாவளவன்.