அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?
சென்னை: அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவின் அரக்கோணம் முன்னாள் எம்எல்ஏ ரவி, ஜெயங்கொண்டம் மாஜி எம்எல்ஏ ஜேகேஎன் ராமஜெயலிங்கம் ஆகியோர் இன்று தவெகவில் சேர்ந்தனர். இதன்மூலம் இன்று ஒரேநாளில் அதிமுகவின் 3 மாஜி எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

அதன்படி இன்று அரக்கோணம் அதிமுக மாஜி எம்எல்ஏ எஸ். ரவியும் தவெகவில் இன்று இணைந்தார். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டசபை தொகுதியில் 2011, 2016, 2021 என 3 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார். இந்த முறை மீண்டும் எஸ் ரவிக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வியடைந்தார்.
அரக்கோணம் தொகுதியில் தவெக வேட்பாளர் வி காந்தி ராஜ் 73,776 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். விசிக வேட்பாளர் எழில் கரோலின் 50,655 வாக்குகள் வாங்கி 2ம் இடம் பிடித்தார். சிட்டிங் எம்எல்ஏவாக களமிறங்கிய அதிமுகவின் எஸ் ரவி 50,052 வாக்குகள் மட்டுமே பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தோல்வியை தொடர்ந்து தான் எஸ் ரவி இன்று தவெகவில் இணைந்துள்ளார்.
அதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் இதற்கு முன்பு வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேகேஎன் ராமஜெயலிங்கம் தவெகவில் சேர்ந்தார். இவர் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2021, 2026 சட்டசபை தேர்தல்களில் இந்த ஜெயங்கொண்டம் தொகுதி அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான பாமகவிற்கு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்து வந்த ஜேகேஎன் ராமஜெயலிங்கம் இன்று தவெகவில் சேர்ந்தார்.
முன்னதாக இன்று காலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் தவெகவில் இணைந்தார். இவர் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் கந்தர்வகோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2021ல் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்த முறை வாய்ப்பு கோரினார். ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு இந்த தொகுதி வழங்கப்பட்டது. இதனால் அவர் காலையில் தவெகவில் இணைந்தார். இதன்மூலம் ஒரே நாளில் 3 அதிமுக மாஜி எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர். இதன்மூலம் அதிமுகவின் கூடாரம் தொடர்ந்து காலியாகி வருகிறது.












Click it and Unblock the Notifications