நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன?
சென்னை: தமிழக முதல்வர் விஜய் நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. திருச்சி தூய வளனார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பொது நிகழ்வில் பங்கேற்க இருப்பதால் தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு இருந்த விஜய் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

திருச்சி வருகிறார் முதல்வர் விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் விஜய் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே விஜய் வெற்றி பெற்ற நிலையில், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல் விஜய் ராஜினாமா செய்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில்தான், முதல்வர் விஜய் நாளை மறுநாள் அதாவது ஜூன் 1 ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதி செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜய் வருகைக்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
முதல்வர் ஆன பிறகு முதல்முறை
திருச்சி தூய வளனார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல்வர் விஜய் வருகை தர இருப்பதால் திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்த தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜய் இதுவரை பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டத்தினை விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியினையும் விஜய் ரத்து செய்துள்ளார்.
முதல் நிகழ்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க இருப்பதால் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கு மட்டுமின்றி, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளும் காலியாக உள்ளன.
5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
இந்த தொகுதியில் அதிமுக வென்ற நிலையில், எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியை சேர்த்து மொத்தம் 5 தொகுதிகளுக்கும் சேர்த்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது பெரும்பான்மை இன்றி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், 5 தொகுதிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் தவெக உள்ளது.
அதே நேரத்தில் தவெகவை வீழ்த்தி, வெற்றி பெற திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இத்தகைய சூழலில்தான் விஜய்யின் திருச்சி கிழக்கு பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications