For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார் கொள்கைகளுக்கு உயிர் கொடுக்கிறது திமுக அரசு - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பெரியாரின் கொள்கைகளுக்கும், கனவுகளுக்கும் உயிர் கொடுக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திமுக அரசு என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

பெரியார் களஞ்சியம் குடியரசு முதல் தொகுதியினை நேற்று வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி. முரசொலி அலுவலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நூலை வெளியிட்ட கருணாநிதி அப்போது பேசியதாவது:

பெரியார் தமது வாழ்நாள் முழுதும் போராடி - வாழ்க்கை முழுவதையுமே போராட்டக் களமாக்கி - உடல் நலிவுற்ற காலங்களிலும் அதனைப் பொருட்படுத்தாது குக்கிராமப் பகுதிகளுக்குக் கூடச் சென்று, அவர் கால்படாத இடங்களே தமிழகத்தில் இல்லை; அவர் குரலை எதிரொலிக்காத பகுதிகளே இல்லை எனக்கூறும் அளவுக்குச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு - மனிதனை மனிதன் மனிதனாக மதிக்க வேண்டும்;

மனிதனை கடவுள் பெயரால் சாதி, சமயங்களின் பெயரால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பேதப்படுத்தும் சாதிக் கொடுமைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும்; மூடப் பழக்கங்கள் ஒழிய வேண்டும்; அரசு வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கடைப்பிடிக்கப்பட்டாக வேண்டும்; பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமைகள் அளிக்கப்பட வேண்டும்; விதவை மறுமணம், கலப்புத் திருமணம் நடைபெற வேண்டும் என்பன போன்ற கொள்கைகளைப் பரப்பி - சமதர்ம சமுதாயம் படைக்கப் பாடுபட்டவர் தந்தை பெரியார்!

அண்ணா பெரியாரிடமிருந்து பிரிந்தபின், பெரியாருடைய கருத்துகளைச் செழிக்க வைப்பதற்காக, செயல்படுத்துவதற்காக ஓர் அரசியல் இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, தேர்தலைச் சந்தித்து, அது ஆட்சிப் பொறுப்பு ஏற்கின்ற நிலைமையை உருவாக்கினார்.

அண்ணாவைத் தொடர்ந்து, தந்தை பெரியாரின் எண்ணங்கள் ஏழை எளிய நலிந்த சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், 1969-ம் ஆண்டுக்குப்பின் இந்த அரசினால் இன்றளவும் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

- சாதிகளை ஒழிக்கும் நோக்கில் 20,000 ரூபாய் நிதியுதவி தந்து அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமணத் திட்டம்;

- விதவை மகளிர் நல்வாழ்வு பெற 20,000 ரூபாய் நிதியுதவி தந்து தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம்;

- பெண் கல்வியை ஊக்கப்படுத்திட ஈ.வெ.ரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; பட்டமேற்படிப்பு வரை நீட்டிப்பு;

- கிராமப்புற ஏழைப்பெண்கள் குறைந்தது 10-ம் வகுப்பு வரையேனும் படித்திட வேண்டும் என்னும் உணர்வோடு ஏழைப் பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்;

- பெண்களுக்கு தனிச் சொத்துரிமை வழங்கும் சட்டம்;

- அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு;

- உள்ளாட்சி நிறுவனங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு;

- தாழ்த்தப்பட்டோர்க்கு 18 சதவிகிதம் - இதில் அருந்ததியர்க்கு 3 சதவிகிதம்; மலைவாழ் மக்களுக்கு 1 சதவிகிதம்; மிகப்பிற்படுத்தப் பட்டோர்க்கு 20 சதவிகிதம்; பிற்படுத்தப் பட்டோர்க்கு 30 சதவிகிதம் - இதில் இஸ்லாமியர்க்கு 3.5 சதவிகிதம் என மொத்தம் 69 விழுக்காடு இடஒதுக்கீடுகள்;

- பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு;

- அனைத்துச் சாதியினரையும் கோவில்களில் அர்ச்சகராக்கும் சட்டம்;

- இனமுரசு' சத்யராஜ் பெரியாராகத் தோன்றி நடித்த தந்தை பெரியார்' திரைப்படத் தயாரிப்புக்கு 95 லட்ச ரூபாய் அரசின் நிதியுதவி;

- இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி 1997-ம் ஆண்டில் அறிவித்தபடி, அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் 2006-க்குப்பின் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம்;

- ஈரோடு நகராட்சிமன்றத் தலைவராகத் தந்தை பெரியார் பொறுப்பேற்றிருந்தபோது அந்நகராட்சி எல்லையை விரிவுபடுத்திடக் கருதி, 19.11.1917 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய சென்னை மாகாண அரசால் 23.10.1919 அன்று அரசாணை வெளியிடப்பட்டும், நிறைவேற்றப்படாமலிருந்த அந்தத் தீர்மானத்தை, 90 ஆண்டுகளுக்குப்பின், 15.9.2007 அன்று ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந்த அரசு நிறைவேற்றும் என அறிவித்து, 17.11.2007 அன்று அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்து, 1.1.2008 முதல் ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக நிலை உயர்த்திப் பெருமிதம் கொண்டமை; எனப் பெரியார் கொள்கைகளுக்கு உயிர் கொடுக்கும் திட்டங்கள் பல தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X