For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ வசதியின்றி இனி ஒரு ஏழை கூட உயிரிழக்கக் கூடாது - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: ஒரு ஏழை கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தால் மரணம் அடைந்தார் என்ற செய்தி இனி பழங்கதையாக ஆகிவிடவேண்டும். எனவே, அரசில் பணியாற்றக்கூடிய ஒவ்வொருவரும் ஒரு ஏழைக்காவது உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான ஏற்பாட்டைச் செய்து தருவதை தனது அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஈச் ஒன்- டிரீட் ஒன்' என்று சொல்லும்படி; ஒவ்வொருவரும் ஒரு ஏழைக்கு மருத்துவ சிகிச்சை பெற உதவிட வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நேற்று நடந்தது. கூட்ட முடிவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

அவரது நிறைவுரை:

நோய் வந்தபிறகு சிகிச்சை அளித்து குணப்படுத்துவதைவிட, நோய் வராமல் தடுத்து நிறுத்துவதே மேல் என்பது நோய்களுக்கு மாத்திரம் அல்லாமல், நமது நிர்வாகத்துக்கும் மிகவும் பொருத்தமுடையதாகும். ஒரு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு; அது ஏற்பட்டதற்கு பின்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதைவிட; அந்த அசம்பாவிதமே ஏற்பட்டுவிடாமல் முன்னெச்சரிக்கையோடு மாவட்ட கலெக்டர்களும், காவல்துறை அதிகாரிகளும் நடந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகின்றேன்.

அதற்காகத்தான் கிராமத்திலே இருந்து தொடங்கி மாவட்டத் தலைநகரம் வரை நிர்வாகக் கட்டமைப்பு ஒவ்வொரு நிலையிலும் உறுதியான வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டமைப்பை முழுமையாகவும், முறையாகவும் அலுவலர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மையிலே நாம் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ள காப்பீட்டுத் திட்டம், தமிழகத்திலுள்ள கடைக்கோடி மனிதனையும் சென்றடைய வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகின்றேன். அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்திற்கான அடையாள அட்டைகள் வழங்கும் பணி குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தத் திட்டத்தைப் பற்றிய விளக்கங்கள் தமிழகத்திலே உள்ள அனைத்து கிராமங்களுக்கும், கிராமங்களிலே உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் விரிவாகவும், விரைவாகவும், விளக்கமாகவும் சென்றடைந்திட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

ஒரு ஏழை கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தால் மரணம் அடைந்தார் என்ற செய்தி இனி பழங்கதையாக ஆகிவிடவேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, அரசில் பணியாற்றக்கூடிய ஒவ்வொருவரும் ஒரு ஏழைக்காவது உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான ஏற்பாட்டைச் செய்து தருவதை தனது அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஈச் ஒன்- டிரீட் ஒன்' என்று சொல்லும்படி; ஒவ்வொருவரும் ஒரு ஏழைக்கு மருத்துவ சிகிச்சை பெற உதவிட வேண்டும்.

மாவட்ட கலெக்டர்கள் பொதுவிநியோகத் திட்டத்தில் சிறப்பான கவனம் செலுத்தவேண்டுமென்று நான் மிகமிக வேண்டி விரும்புகிறேன். அத்தியாவசிய பொருள்கள் தங்குதடையின்றி பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டும். குறிப்பாக, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தின்கீழ் ஏழை எளிய மக்கள் முழுமையானதும், தரமானதுமான அரிசியைப் பெற வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர்களின் இடையறாத கண்காணிப்பு மிகமிக அவசியமாகும்.

கலர் டி.வி.கள் வழங்குவதில் எந்தப் புகாரும், குறையும், எந்தத் திசையிலிருந்தும் ஏற்பட்டுவிடாமல் மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன். கலர் டி.வி. வழங்குவதை முடிந்தவரை 2010-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்திட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

ஏழை எளியோர், பரம ஏழைகள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு நலத் திட்ட உதவிகள் உரிய காலத்தில் முழுமையாகச் சென்றடைவதை மாவட்ட கலெக்டர்கள் முறைப்படுத்தி கண்காணித்திட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

அரசு வழங்கிடும் நலத் திட்ட உதவிகளை தகுதிகளற்ற ஒருசிலர் தட்டிச் செல்வதைப் பற்றிக்கூட அவ்வளவாக நான் கவலைப்படவில்லை; ஆனால், தகுதியான ஏழை எளியோர்க்கு அந்த உதவிகள் மறுக்கப்பட்டாலும் அல்லது உரிய நேரத்தில் கிடைத்திட வேண்டிய அளவுக்குக் கிடைக்கவில்லை என்றாலும் பெரிதும் கவலைப்படுகிறவன் நான்.

அப்படிப்பட்ட ஒரு நிலை எந்தத் திட்டத்திலும் நேராமல்; நெல்லுக்கு இறைத்த நீர் நேராகப் புல்லுக்குச் சென்றுவிடாமல், நெல்லுக்கே முழுவதுமாய்ச் சென்றடையத்தக்க கண்காணிப்பை மாவட்ட கலெக்டர்கள் கடைப்பிடித்திட வேண்டும். அரசு வகுத்துச் செயல்படுத்திடும் திட்டங்களால் பலனடையாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லை; அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறாத குடும்பங்களே தமிழகத்தில் இல்லை என்ற நல்ல நிலையை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும்.

உலகத் தமிழ் மாநாடு - பிரமாண்டமாக இருக்க வேண்டும்..

இந்த மாநாட்டில் பெரும் சிறப்பாக, நேற்றைய தினம் நாம் உலகத் தமிழ் மாநாட்டை தமிழகத்தில் - கோவை மாநகரில் - ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடத்துவது என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றோம். எது மறந்தாலும், உலகத் தமிழ் மாநாடு நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தை உருவாக்கிய கூட்டம் இந்த மாவட்ட கலெக்டர்களுடைய கூட்டம் என்ற அந்த வரலாறு நிலைத்து நிற்கும்.

எனவே, இந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் அரசு அதிகாரிகளும் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டுத் தீர்மானம் நான் கலந்து கொண்ட கூட்டத்திலேதான் நிறைவேற்றப்பட்டது'' - என்று ஆயுள் பூராவும் பெருமைபட்டுக் கொள்ளக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த மாநாடு நடைபெறுவதற்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளை நாம் விரைவில் அறிவிக்க இருக்கின்ற பல்வேறு குழுக்கள், குழுக்களின் உறுப்பினர்கள், அந்தக் குழுக்களுக்குத் தலைமை தாங்குகின்றவர்கள், யார் யாரோடு தொடர்பு கொள்ள வேண்டுமோ, அவர்களோடெல்லாம் தொடர்பு கொண்டு வகுத்து வழங்க இருக்கின்றார்கள், அறிவிக்க இருக்கின்றார்கள்.

உலகத் தமிழ் மாநாடு என்பது ஏதோ பெரிய ஊர்வலங்கள் நடத்தி, பொதுக்கூட்டங்கள் நடத்தி, கலை விழாக்கள் நடத்தி, கலைந்து போகின்ற ஒன்றாக இல்லாமல், அறிஞர் அண்ணா காலத்தில் அவர் நடத்திய உலகத் தமிழ் மாநாடு, சென்னை மாநகரத்தில் பல்வேறு மண்டபங்களில், பல்வேறு அரங்கங்களில், பல்வேறு புலவர் பெருமக்களை, அறிஞர் பெருமக்களை, கவிஞர்களை, பண்டிதர்களை, இவர்களையெல்லாம் அழைத்து, அவர்களை விவாதிக்கச் செய்து, அந்த விவாதத்திலே விளைந்த முத்துக்களைப் பொறுக்கியெடுத்து, அவைகளையெல்லாம் கோர்த்து, மணியாரமாக ஆக்கி, உலகத்திற்கு - உலகத்திலே தமிழர்கள் எங்கெங்கே வாழ்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வழங்கிய மாநாடாக அந்த மாநாடு விளங்கியது என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அதிலே எள்ளளவும் குறையாமல், நாம் நடத்துகின்ற இந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் ஆராய்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், ஏற்கனவே நாம் இந்த உலகத்திலே தனித்து நின்று ஒரு மொழியை வளர்த்தோம் என்ற நாம் கட்டிக் காத்த பெருமைக்கும் சிறிதளவும் மாறுபாடு ஏற்படாமல் நடந்தே தீரவேண்டும் என்ற உறுதியோடு இந்த மாநாட்டை நாம் நடத்த வேண்டும்.

அது மாத்திரமல்ல, இந்த மாநாட்டிலே நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள், எடுக்கின்ற முடிவுகள் எதிர்காலத்திலே அகில இந்திய அளவிலே மத்திய ஆட்சி மொழியாக நம்முடைய தமிழ்மொழியும் இடம்பெற வேண்டும் என்கின்ற அளவிற்கு அரசியல் ரீதியாக அல்ல - நாம் ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வருகின்ற நம்முடைய உணர்வு ரீதியாக அந்த முடிவை நாம் எய்துவதற்கு அந்த மாநாடு ஒல்லும் வகையெல்லாம்'' நமக்குப் பயன்படுகின்ற அளவிலே நம்முடைய முயற்சிகள் இருக்க வேண்டும்.

அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு - அதிலே தமிழின் ஆக்கத்திற்கும், அதனுடைய வலிவு, வளம் பெருகுவதற்கும், பொலிவோடு இந்த மொழி உலகத்தில் நிலையாக வாழ்வதற்கும் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்கின்றோமோ, அதே நேரத்திலே அதற்கான பல்வேறு கட்டங்களில் அண்ணா அன்றைக்குப் புலவர்களை, பண்டிதர்களையெல்லாம் அழைத்து, வரலாற்று ஆசிரியர்களை எல்லாம் அழைத்து, நம்முடைய பண்டைய நாகரீகப் பெருமைகளை, நம்முடைய கலைப் பெருமைகளை - இவைகளையெல்லாம் வியந்துரைக்கின்ற அளவிற்குச் செய்து, அதன் காரணமாக ஒரு புதிய மறுமலர்ச்சியை, எழுச்சியை தமிழர்களிடையே - உலகத் தமிழர்களிடையே ஏற்படுத்தினார்கள்.

அதற்கு முத்தாய்ப்பு வைத்ததைப் போல், அதில் 3 நாட்கள், 4 நாட்கள் தமிழ் ஆய்வு போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்றாலும் கூட, இப்பொழுது இந்த மாநாடு வெறும் தமிழ் மாநாடு மாத்திரமல்ல - தமிழ் செம்மொழியாக ஆக்கப்பட்ட நேரத்திலே நடைபெறுகின்ற ஒரு மாநாடு என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே, அந்த மாநாட்டில் சிறப்பாக, உலகமே போற்றக்கூடிய அளவிற்குப் பேசப்பட்டது கடைசி நாள் - அன்றைக்கு நாம் நடத்திக் காட்டிய அந்த ஊர்வலம்.

அதைப் படமாக்கி உலகத்திலே பல நாடுகளுக்குச் சென்ற அண்ணா அவர்கள் அந்த நேரத்தில் அந்தப் படங்களையெல்லாம் உலகத்தின் பல்வேறு மன்றங்களிலே போட்டுக் காட்டி, அவர்களெல்லாம் நம்முடைய மொழியின் பெருமையை, வரலாற்றுப் பெருமையை வியந்துரைத்த அந்தக் காட்சியெல்லாம் நடைபெற்றது.

இப்பொழுதும், அதே அளவிலே இல்லாவிட்டாலும், அதற்கு ஓரளவு குறைவாக இருந்தாலும், அதை நடத்தித் தீர வேண்டும். ஏனென்றால், அந்த ஊர்வலம் சென்னை மாநகரில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கோவை மாநகரில் நடைபெறுகிறது.

தமிழர்களுடைய பண்பாடு, கலை, நாகரீகம், பண்டைப் பெருமை இவைகளையெல்லாம் உணர்த்துகின்ற அளவிற்கு நம்முடைய வரலாற்றுப் பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொல்லுகின்ற அளவிற்கு அந்த ஊர்வலம் அமையவேண்டும். அதற்கான வண்டிகள், ரதங்கள், தேர்கள் இவைகளை எல்லாம் தயாரிக்க வேண்டும்.

இன்று, இந்த நாள் முதலே அதற்கான ஆரம்பப் பணிகளை மாவட்ட கலெக்டர்கள் ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். ஆற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான செலவுகள் ஆகுமே! ஒரு ரதம் 20 ஆயிரம் ரூபாய் ஆகுமோ- 2 லட்சம் ரூபாய் ஆகுமோ-20 லட்சம் ரூபாய் ஆகுமோ, என்கிற கவலை உங்களுக்குத் தேவையில்லை. இதற்காக யாரிடத்திலே சென்று நன்கொடை பெறலாம் என்று கவலைப்படத் தேவையில்லை. நன்கொடை யாரிடத்திலும் பெறாமல், நாமே அதைச் செய்தால்தான் - நாமே என்றால் மாவட்ட கலெக்டர்களை நான் சொல்லவில்லை - ஆட்சியே செய்தால்தான் அதற்குப் பெருமை. அதை நாம் செய்வோம். அதற்கு இந்த ஆட்சி பொறுப்பேற்றுக் கொள்ளும். அரசு என்பது ஒரு தனிப்பட்ட முதல்-அமைச்சரோடு, அல்லது நிதியமைச்சரோடு, இரண்டு, மூன்று அமைச்சர்களோடு முடிந்து விடுவதல்ல.

எல்லோரும் சேர்ந்துதான் தேர் இழுக்க வேண்டும். அந்தத் தேரை இழுப்போம். மக்களுக்காக நல்ல தேரை இழுப்போம். மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கு அல்லும் பகலும் நாம் அயராது உழைப்போம் என்ற அந்த சபதத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X