சென்னை அருகே ஊடுறுவிய 46 இலங்கை மீனவர்கள் கைது
சென்னை: சென்னை அருகே இந்தியக் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 46 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை அருகே, ஆந்திரா மாநில எல்லையில், இந்திய கடல் பகுதியில் 2 இலங்கை படகுகள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்ததை கடலோர காவல் படை ரோந்து கப்பல் கண்டு பிடித்தது. உடனே அங்கு விரைந்த கடலோர காவல் படையினர் அந்த படகுகளை சுற்றி வளைத்தனர்.
அந்த படகுகளில் இருந்த சனத் (வயது 24), வியந்த விஷாந்தா பெர்னாண்டோ (42), சன பிரசாங்க (20), ஜெனகடூசார (34) உள்பட 10 பேரை பிடித்தனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களை புதுவண்ணாரப்பேட்டை மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர். போலீசார் 10 பேரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து, ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.
அவர்களில் துராஜ் சந்தீவா (16), அரோசேன (16) ஆகிய இருவரும் மைனர்கள் என்பதால் இருவரையும் அயனாவரம் சிறார் சிறையில் அடைக்கும்படியும், மற்ற 8 பேரையும் புழல் சிறையில் அடைக்கும்படியும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 10 பேரும் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலையிலும் சென்னை அருகே இந்திய கடல் பகுதியில் 6 படகுகளில், இலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதை கண்டு பிடித்த கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் உடனடியாக அங்கு விரைந்து சென்று, 6 படகுகளையும் சுற்றி வளைத்தது.
அந்த படகுகளில் இருந்த 36 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் பிடித்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 36 இலங்கை மீனவர்களையும், அவர்கள் வந்த 6 படகுகளையும் கடலோர காவல் படையினர் புதுவண்ணாரப்பேட்டை மீன்பிடி துறைமுக போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் 36 பேரையும் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.