For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய அரசுக்கு கேவலமாக இல்லையா?-வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது போதாதென்று தமிழகத் தமிழர்களையும் கொல்லத் திட்டமிட்டு வருகிறார் ராஜபக்சே. இதன் விளைவாக இந்திய ஒருமைப்பாட்டுக்கே எதிர்காலத்தில் ஆபத்து நேரலாம். இந்திய இறையாண்மைக்கு நீங்களே ஆபத்தை தேடிக் கொள்ளாதீர்கள் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்படுகிறது, தமிழக மீனவர்களை மத்திய அரசு காக்க தவறி விட்டது உள்ளிட்டவற்றைக் கண்டித்து சென்னையில் இன்று மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து வைகோ பேசுகையில்,

தமிழர்களின் உரிமை காவு கொடுக்கப்படுகிறது. பல முனைகளில் இருந்து தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு மதிக்கவில்லை. மேலும் இந்திய மீனவர்களை பாதுகாக்க தவறி விட்டது.

முல்லைப் பெரியாறு தொடர்பாக 999 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ பாதுகாப்பை கேரள அரசு உடைத்தெறிந்திருக்கிறது. அணைக்கு ஆபத்து என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத கேரள அரசு தனியாக ஒரு சட்டத்தை நிறைவேற்றி ஒரு புதிய அணையை கட்ட திட்டமிட்டிருக்கிறது. இதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது என்று இப்போதைய கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுகிறார். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் கூறியிருக்கிறார். ஆனால் தமிழக முதல்வர் அப்படி அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

அடுத்த சில நாட்களில் கேரள அரசுக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதி மறுக்கப்படுகிறது; தடை விதிக்கப்படுகிறது. இப்பிரச்சனையில் தமிழக மக்களை குழப்பும் வகையில் கருணாநிதி மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகிறார்.

பிரதமருக்கு எழுதும் கடிதத்தில் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று கண்டிப்பாக கூறாமல் தமிழக அரசையும் கலந்துதான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் தென் தமிழகம் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டித்துதான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கேரள அரசின் துரோகத்திற்கு மத்திய அரசும் துணை போகிறது. இதனால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசை பொறுத்தவரை தமிழகத்திற்கு தொடர்ந்து தீங்கிழைத்து வருகிறது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க துணை போனது. இப்போது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி கொலை செய்வதற்கும் துணை போகிறது. இதை பார்க்கும்போது மத்திய அரசு என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு நாட்டுப் பிரஜையை இன்னொரு நாடு தாக்கினால் அந்த நாடு, தன்னுடைய நாட்டு பிரஜையை தாக்கிய நாட்டை எச்சரிக்கை செய்யும்; கண்டனம் தெரிவிக்கும்; பின்னர் அந்த நாட்டுடனான ராஜீய உறவையே துண்டித்துக் கொள்ளும்.

ஆனால் ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தினமும் தாக்கப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இது இந்திய அரசுக்கு கேவலமாக இல்லையா? .

கேட்டால் நம்முடைய மீனவர்கள் கடல் எல்லையை தாண்டிச் சென்றதால் தாக்கப்பட்டதாக கூறுகிறார்கள். சர்வதேச எல்லையிலும், இந்திய கடல் எல்லையிலும் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களையே சிங்கள கடற்படை அடித்து உதைத்து, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வது கேவலமல்லவா?.

இந்த கொடுமைகளை கண்டிக்க இந்திய அரசுக்கு திராணியில்லை. கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் தமிழக மீனவர்கள் மீது தினமும் தாக்குதல் நடக்கிறது. இதனை தமிழக மீனவர்கள் அப்படியே பொறுத்துக் கொண்டு இருக்கமாட்டார்கள்.

இந்த விஷயத்தில் மத்திய அரசின் போக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கே தீங்காக அமையும். இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களை அழிப்பதற்கு இந்திய அரசு தந்த ஆயுதங்கள்தான் பயன்பட்டன.

அவர்களுக்கு துணையாக சீனாவும், பாகிஸ்தானும் செயல்பட்டது. இன்றுஅந்த நாடுகள் இலங்கையிலே தளம் அமைத்துவிட்டன. அண்மையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்கள கடற்படையில் சீனர்களும் இருந்து இருக்கிறார்கள். இது இந்தியாவுக்கு பேராபத்தை விளைவிக்கும்.

இதனால் எதிர்காலத்தில் தென்பகுதியில் இருந்தும் இந்தியாவுக்கு ஒரு அபாயம் உருவாகி வருகிறது என்பதை மத்திய அரசு உணரத் தவறிவிட்டது.

மும்பையில் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை கண்டு இந்தியாவே கொதித்தது. பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று மத்திய அரசு எச்சரித்தது. அதில் எந்த தவறும் இல்லை.

அதே போல இலங்கையின் அரசாங்க படையே தமிழக மீனவர்கள் மீது தினமும் தாக்குதல் நடத்தி வருகிறதே. இதற்கு மத்திய அரசின் நடவடிக்கை என்ன?

இந்த செயலை பொறுத்தவரை சிங்களர்களின் கைக்கூலி அரசாகவே மத்தியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் அரசு செயல்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தது போதாதென்று இங்குள்ள தமிழர்களையும் கொல்வதற்கு சிங்கள ராஜபக்சே அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் துணை நிற்கிறது.

இதன் விளைவாக இந்திய ஒருமை பாட்டுக்கே எதிர்காலத்தில் ஆபத்து நேரலாம். இந்திய இறையாண்மைக்கு நீங்களே ஆபத்தை தேடிக் கொள்ளாதீர்கள் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X