நாங்கள் போக மாட்டோம் - காங்., பாஜக எங்களிடம் வரட்டும்: விஜயகாந்த்
டெல்லி: நாங்கள் அரசியலில் அனுபவம் பெற்று விட்டோம். எனவே நாங்கள் யாரிடமும் போய் நிற்க மாட்டோம். தேவையென்றால் காங்கிரஸ், பாஜக ஆகியவை எங்களைத் தேடி வரட்டும் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
டெல்லியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தனது பேட்டியின்போது 2011ல் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தேமுதிக உறவு வைக்கலாம் என்பதையும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எந்த ஒரு தேசிய அல்லது பிராந்தியக் கட்சியிடமும் கூட்டணி அமைத்துக்கொள்வதற்காக நாங்கள் அணுகியதும் இல்லை. வற்புறுத்தியதும் இல்லை.
காங்கிரஸ் கட்சியோ அல்லது பாஜகவோ கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்பினால் அவர்கள்தான் எங்களை வந்து அணுகவேண்டும். அரசியலில் போதிய அனுபவம் பெற்றுள்ளேன். மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அப்படியிருக்கும்போது நாங்கள் யாரிடமும் சென்று கூட்டணி அமைத்துக்கொள்ளுமாறு கேட்க வேண்டிய அவசியமில்லை.
தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் கூட்டணி வைத்துக்கொள்வது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை.
2011-ல்தான் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறப் போகிறது. அந்த சமயத்தில் எங்கள் கட்சியின் முடிவு குறித்து அப்போது அறிவிப்போம். அப்படி எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள எந்த கட்சியாவது விரும்பினால் அவர்கள் வந்து எங்களிடம் பேசட்டும். அதன்பிறகு கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்துகொள்ளலாம்.
இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு மாநிலத்தில் ஆளும் திமுகவும், மத்தியில் உள்ள காங்கிரஸுமே பொறுப்பு.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்தது வெறும் நாடகம் என்றார் விஜயகாந்த்.